ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ?

96

கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரிக்கையை முன்வைத்து அரசியல் நடாத்தி வரும் தமிழரசுக்கட்சியின் தலைவருக்கு (முன்பு இக்கட்சி ஆங்கிலத்தில் Federal Party என அழைக்கப்பட்டது) ஐக்கிய இராட்சியத்தில் சமஸ்டி முறைமை இல்லை என்பது தெரியாததல்ல. அவ்வாறாயின் எண்பத்தி மூன்று வயதான சம்பந்தன், தற்போது நிலவும் குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாது எடின்பரோவிற்கு சென்றது ஏன் என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக இப்பத்தி அமைகிறது.

அதிகாரப்பரவலாக்கம் (devolution of power), சுயாட்சி (self rule), இணைப்பாட்சி (confederation), கூட்டாட்சி (federation) போன்ற அதிகாரப் பகிர்வு முறைமைகள், அந்நாடுகளின் புவியியல், சமூக, இனத்துவ, அரசியல் சூழமைவுக்கு ஏற்ப நடைமுறையில் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இவற்றில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த நலன்கள் மற்றும் வேறுபாடுகளை அறிந்துகொள்வதன் மூலம்,ஈழத்தின் நடைமுறைக்கு ஏற்ற முறையில்பொருத்தமான சுயாட்சி கட்டமைப்பை உருவாக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பில் நியாயமிருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்கும் – சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில், 2003ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக் குழுவொன்று பல்வேறு நாடுகளிற்கும் பயணம்மேற்கொண்டு அந்நாடுகளில் நடைமுறையிலிருக்கும் அதிகாரப்பகிர்வு முறைமைகளை ஆராய்ந்தது. முதலில் சுவீடன், நோர்வே, பின்லாந்து, டென்மார்க் ஆகிய ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும், அடுத்ததாக பெல்ஜியம், சுவிற்சலாந்து, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நான்கு மேற்கு ஜரோப்பிய நாடுகளிற்கும், இறுதியாக தென்னாபிரிக்காவிற்கும் பயணம் செய்த இக்குழுவினர் இந்நாடுகளிலுள்ள அதிகாரப்பகிர்வு, சுயாட்சி அலகுகள் பற்றி அறிந்து கொண்டனர். சுவிற்சலாந்தில் இணைப்பாட்சி முறையும், ஜேர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் கூட்டாட்சி முறையும், மற்றையவற்றில் ஒற்றையாடசிமுறையில் சுயாட்சி அலகுகளும் காணப்படுகின்றன. இப்பயணத்தின்போது, பின்லாந்துக்கு சென்ற விடுதலைப்புலிகளின் குழுவினர், அங்கு ஒற்றையாட்சிக்குட்பட்டு சுயாட்சி அலகாகச் செயற்படும் Aaland islands என்ற தீவுக்கும் சென்றிருந்தனர். சுவீடிஸ் மொழி பேசும் மக்களைக் கொண்ட இப்பிரதேசமானது மத்தியின் இராணுவநீக்கம் செய்யப்பட்ட பூரண சுயாட்சி அலகாக செயற்படுவதனையும், அதற்கு வழஙக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் அறிந்து வியந்ததாக இக்குழுவில் அங்கம் வகித்த புலம்பெயர்நாடொன்றில் வசிக்கும் செயற்பட்டாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவ்விதம் நாடுகளின் அரசியல் நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ள முயற்சி என்றவிடயத்தில் பலரும் உடன்படுவர். ஆனால், 2016இல் சமஸ்டி முறையான தீர்வை பெற்றுத்தருவோம் என உறுதியளித்து கடந்த வருடம் நடைபெற்றபொதுதேர்தலில் வாக்குக் கேட்ட தமிழரசுக்கட்சியின் தலைமை, வருட ஆரம்பத்தில்தான் அதிகாரப்பகிர்வு கற்றுக்கொள்ள முனைகிறது எனக்கூறுவது சற்று வேடிக்கையானதாக உள்ளது. ஆகவே எடின்பரோவில் அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதனை அறியும் ஆவல் இவ்விடயத்தில் ஆர்வமுடையவர்களுக்கு இருக்கும். எடின்பரோவிற்கு சென்ற இவர்கள் அங்கு Holyrood பகுதியில் அமைந்திருக்கும் ஸ்கொற்லாந்து பாராளுமன்றத்திற்குச் சென்றதாகவோ, ஸ்கொற்லாந்து பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பாக இருக்கும் ஸ்கொற்லாந்து தேசியக் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்தாகவோ எந்தத் தகவலும் இல்லை. மாறாக, எடின்பரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் பட்டறையில் (அல்லது கூட்டத்தில்) கலந்துகொண்டுவிட்டு லண்டன் வழியாக நாடு திரும்பியதாகத் தெரியவருகிறது.

மேற்படி கூட்டத்தை எடின்பரோ பல்கலைக் கழகத்தில் இயங்கும் Edinburgh Centre for Constitutional Law என்ற கற்கை ஆய்வு நிறுவனம்ஏற்பாடு செய்த்தாகவும், தமிழ் பாராளுமன்றஉறுப்பினர்கள் மூவருடன் முஸ்லீம் கொங்கிரஸ்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கட்சியின்பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர முதல்வருமான நிஸாம் காரியப்பர் ஆகியோரும் கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது. அரசியல் யாப்புவிடயங்களில் நிபுணத்துவம் பெற்றகல்வியாளரான கலாநிதி அசங்க வெலிக்கல இதனை ஒழுங்குசெய்த எடின்பரோ கற்கை நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளராக உள்ளார் என்பது அவதானத்திற்குரியது. கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற அமைப்பில் மூத்த ஆய்வாளராகவும் அவர் பணியாற்றுகிறார். மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, லண்டனிலிருந்து இயங்கும் International Working Group என்ற அமைப்பின் தலைவர் பீற்றர் போலிங் (Peter Bowling) ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. இக்கூட்டத்தினை பீற்றர்போலிங் அவர்களே ஏற்பாடு செய்ததாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. பீற்றர் போலிங் 2009ம்ஆண்டின் இறுதியில், தமிழ் தகவல் மையத்தின் தலைவர் வரதகுமாருடன் இணைந்து சிறுபான்மைகட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி ஆட்சிமாற்ற முயற்சிக்கு அவர்களின் ஆதரவினைப் பெறுவதற்காக, கூட்டமைப்பு, முஸ்லீம் கொங்கிரஸ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்து சூரிக் நகரத்தில் கூட்டம் ஒன்று நடாத்தியிருந்தமை அறிந்ததே. இவற்றை வைத்துப் பார்க்கையில் இது ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி ஆராயும் முயற்சியாக அன்றி,அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தைப் பலப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

ஸ்கொற்லாந்து மாதிரியிலான அதிகாரப்பரவலாக்கம் சிங்கள ஆட்சியார்களுக்கு ஒருபோதும் உவப்பானதாக இருந்ததில்லை. இந்நிலையில் திடீரென, இதுபற்றிய ஆர்வம் ஏன் எழுந்தது? ஜக்கிய இராட்சியத்தில் ஒற்றையாட்சி முறையில் பரவலாக்கம் நடைபெற்றிருப்பதே இதற்கான முதன்மைக் காரணமாக அமைகிறது. தமிழ்வாக்களர்கள் மத்தியில் தாம் சமஸ்டித் தீர்வைப்பெற்றுத்தருவோம் எனக்கூறிவருகிற கூட்டமைப்பினர் சமஸ்டி என்ற லேபல் இல்லாமல் ஒற்றையாட்சியிலும் உச்சபட்ச சுயாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தை ஆங்காங்கே கூறிவருகின்றனர். இக்கருத்தினை வலுப்படுத்தவே இவ்வாறான கூட்டங்கள் தேவைப்படுகின்றன எனக்கருத இடமுண்டு. இவ்வாறு கூறும்போது, ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்படுள்ள அதிகாரப் பரவலாகத்தின்பாற்பட்ட சுயாட்சியினை வழங்குவதற்கு சிங்களத் தரப்பினர் தயாராகிவிட்டார்கள் என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. மாறாக இதனை ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்து ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரிந்து செல்வது தொடர்பாக இரண்டு முறை அங்கு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டுள்ளது. பிற்காலத்திலும் இவ்வாறான வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கும், ஸ்கொற்லாந்து தனிநாடாகப் பிரிந்து செல்வதற்குமான வாய்ப்புகள் உண்டு. ஆனால் தமிழ்மக்களை `தேசம்’ என வகைப்படுத்த மறுக்கும், இலங்கைத்தீவு பிரிந்து செல்வது `ஆபத்தானது’ எனக் கூறும் தமிழரசுக்கட்சியின் தலைமை ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கத்திலிருந்து எதனை எடுத்துக் கொள்ள நினைக்கிறது என்பதனை தமிழ்மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

2014ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பங்கோடல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஸ்கொற்றிஸ் வாக்காளர்கள் ஸ்கொற்லாந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் கடந்தஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்ஸ்கொற்றிஸ் தேசியக்கட்சி உறுப்பினர்களைப்பெருமளவில் தெரிவு செய்து தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாகத்தில் உள்ளபோதாமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீளப்பெறும் அதிகாரத்தினை வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்றம் கொண்டிருந்தாலும், அரசியல்ரீதியில் வளர்ச்சியடைந்த நாடான பிரித்தானியா அவ்வாறு நடந்துகொள்ளாது எனத் துணிந்து கூறலாம்.ஆனால் இனவாத அரசியல் கோலோச்சும் சிறிலங்காவில் ஒற்றயாட்சிக்கு உட்பட்டுப் பகிரப்படும் உரிமைகள் நிலைத்திருக்கும் என யாராலும்உத்தரவாதம் வழங்க முடியாது என்பதே யதார்த்தம். இந்த அடிப்படை வேறுபாட்டினை கூட்டமைப்பினரும் அவர்களது ஆதரவாளர்களும்அறிந்து வைத்திருப்பார்கள் என எதிர்பார்ப்போமாக.