நாமே நமக்கு

131

நாமே நமக்கு! :

பூகோளம் தழுவிய தற்போதைய நெருக்கடி அடுத்த ஆண்டு வரை நேரடியான தாக்கத்தை செலுத்தும் என எதிர்வு கூறப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது.
இது மிக மோசமான உணவுப் பற்றாக்குறை நெருக்கடியினையும் பட்டினி அபாயத்தையும் தோற்றுவிக்கும்.

அலோபதி (ஆங்கில) மருந்துகளுக்கு ஏற்படும் தட்டுப்பாடும் சாதாரண மக்களின் கொள்வனவு சக்தியின் இயலாமையும் மற்றுமொரு பரிமாணத்தில் மக்களின் உயிர் வாழும் திறனை பலவீனப்படுத்தும்.

மக்கள் தங்கள் கால்களில் தங்கள் வளத்தில் தங்களது ஆளுமைக்குள் தங்களது உணவுப் பாதுகாப்பினை உருவாக்கி தக்கவைக்க வேண்டும். அவசரகாலத் தேவைகளின் போது மக்கள் தமது சுற்றாடலிலேயே தமது அத்தியாவசிய உணவுகளில் தங்கி வாழ முடியும்.

நாங்கள் உடனடியாக செயற்பட வேண்டும்:

  1. வீட்டுத் தோட்டம்
  2. வீட்டுத் தோட்டங்களுக்கான மரக்கன்றுகள், விதைகள், கொடி, தடி வகைகளின் உற்பத்தி
  3. இயற்கை பசளை (இலை, குழை, தழை, மாட்டுச்சாணம் போன்றவை) சிறிய அளவிலான உற்பத்திகள்
  4. மூலிகைகள், கீரைகள், பழவகைகள் போன்றவை வீடுகளில் வளர்த்தல்
  5. நிழல் தருமரங்கள், வேம்பு போன்ற காற்றினை சுத்திகரிக்கும் தாவரங்கள், கிளிசீரியா (சீமைக்கிழுவை) போன்றவைகளை வீட்டு வேலியோரங்களிலும் கிராமத்து பொதுவெளிகளிலும் சாலையோரங்களிலும் சமூகக்காடுகளாக உருவாக்கி தக்கவைக்க வேண்டும்.
  6. வீடுகளின் சுற்றாடலில் கோழி, ஆடு, மாடு போன்றனவற்றை வளர்ப்பது.
  7. குறைந்த நீர்ப் பாவனையுடன் உங்கள் மண்ணிற்கேற்ற பயனுள்ள தாவரங்களை அறிமுகப்படுத்தலாம்.
  8. பொருத்தமான தொழிநுட்பங்களையும் அறிமுகப்படுத்தலாம்.
  9. அரச மற்றும் அரச சார்பற்ற உள்ளூர் நிறுவனங்களில் கிடைக்கக் கூடிய விடயங்களை ஏனையோருக்கு அறிமுகப்படுத்தலாம்.

வாழையடி வாழையாக வந்த எம் பண்பாட்டு மரபுகளில் இயற்கையுடன் சமநிலையைப் பேணல் மற்றும் சுயதேவைப் பூர்த்தி எவ்வாறு இடம்பெற்றது என்ற தகவல்களை பரிமாறலாம்.இச் சிந்தனையினை செயல்வடிவமாக்க நண்பர்கள் அனைவரையும் வேண்டுகின்றோம். இதனை தனியாகவோ, சிறு குழுக்களாகவோ, கிராம, நகர, மாவட்ட மட்டத்திலோ செயல்பட விரும்புகின்றவர்கள் தம் செயல்பாடுகளை படமாகவோ, காணொளியாகவோ அல்லது குறுந்தகவலாகவோ பகிர்ந்து கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்வுக்கேற்ற ஆரோக்கியமான சிந்தனைகளைப் பகிர்வதன் மூலம் “நாமே நமக்கு” உதவிக் கொள்வோமாக.

– துரை சிவபாலன்