2016 : அரசியற்தீர்வு கிட்டுமா ?

112

2016 இல் தீர்வு ஏற்படும் எனவும்,தேசிய இனப்பிரச்சனைக்கு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியற் தீர்வினைப் பெறுவதற்கான `புனிதமான’ கடமையில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனவும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் விடுத்திருக்கும் புதுவருடச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதுவருடத்தில் தீர்மானங்கள் எடுப்பதும்பின்னர் அவற்றை நிறைவேற்றாது அடுத்த வருடஆரம்பத்தில் மீண்டும் அதே தீர்மானங்களைஎடுப்பதும் பெரும்பாலான மனிதர்களின் வழக்கமாக உள்ளதுபோன்று சம்பந்தனும் கடந்தவருட ஆரம்பத்திலும் இவ்வாறு கூறியிருந்தார்.இருப்பினும் இவ்வருடம் புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதானால் சம்பந்தனின் கூற்றில் உண்மையிருக்கும் எனச் சிலர் எதிர்பார்க்கலாம். இம்மாதம் பதினாறாம் திகதி பாராளுமன்றத்தை அரசியலமைப்புச்சபையாக மாற்றவிருப்பதாகவும், புதியஅரசியலமைப்பு ஜுன் மாதத்தில் கொண்டுவரப்படவிருப்பதாகவும் இரணில் விக்கிரமசிங்க தெரிவித்துவருகிறார். இதனிடையே அரசியலமைப்பு மாற்றுவதற்கான முயற்சிகள் திருப்திகரமானதாக உள்ளதாக தமிழ்த்தரப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தினை ஆதரித்து நிற்கும் மனோ கணேசன், சுமந்திரன் ஆகியோரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருந்தாலும், வரையப்படும் யாப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கியதாக அமையுமா என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய வினாவாக அமைகிறது.

தற்போதைய அரசியலமைப்பினுள் அதிகாரப் பரவலாக்கத்தை விஸ்தரிப்பது ஏறத்தாள இயலாதகாரியம் என்றே குறிப்பிட வேண்டும். தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, அதிகாரமற்ற அமைப்பான மாகாணசபைகளை உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலம்கூட அரசியலமைப்பின் வரம்பினைத் தொட்டவாறு அமைந்திருப்பதாகவும், அதனை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு அப்போதிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. ஆர். ஜயவர்தனவிற்கு உதவியதாகவும் சட்டத்துறை சார்ந்தவர்கள் கூறுவர்.

இந்நிலையில், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தீர்வினை ஏற்படுத்துவற்கு புதியஅரசியலமைப்பு தேவையானது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அதேசமயம், சிறிலங்காவின் சட்டங்களின் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பினைக் கொண்டுவருவதற்கு சர்வசன வாக்கெடுப்பினை நடாத்த வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலே போதுமானது. ஆகவேபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் ஜக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் சிறுகட்சிகள் இணைந்த கூட்டரசாங்கம் ஒருநியாயமான அரசியல்அமைப்பைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது.

புதிய அரசியலமைப்பின் முன் வரைபுகள் எதுவும்இதுவரை வெளிவராத நிலையில், வெறும் ஊகங்களை வைத்துக்கொண்டு அல்லது கூட்டமைப்பு எம்பிக்கள் கூறும் கருத்துகளிலிருந்து எதனையும்அறுதியாகக் கூறிவிட முடியாது. எனினும் சிறிலங்கா அரசதரப்பினருக்கும், தமிழ்த்தரப்பிற்கும் இடையில் சிங்கப்பூரில் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைகளில் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெறவேண்டிய விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. புதிய அரசியலமைப்பினை வரைவதில் முக்கிய பங்குவகிப்பவர் என அறியப்படுகிற கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, சட்டத்தரணி நிமல்கா பெர்னான்டோ, தமிழர்தரப்பில் சட்டத்தரணி சுமந்திரன், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் (இறுதியாக சிங்கப்பூரில் நடந்த சந்திப்பில் இவர் கலந்துகொள்ளவில்லை) போன்றவர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டதனை உடனிருந்த புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உறுதிசெய்தார். ஐனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது போன்ற விடயங்களுடன் அதிகாரப்பரவலாக்கம் பற்றியும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டாலும், தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்குரித்தான சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் இச்சந்திப்புகளில் பேசப்படவில்லை என மேற்படி பிரதிநிதி மூலமாக அறியமுடிகிறது.

இன்னொருபுறத்தில், 1998ம் ஆண்டில் சந்திரிகாஅரசாங்கத்தின் காலத்தில் பேசப்பட்ட `பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்த்தினையொட்டியதாக புதிய அரசியலமைப்பு அமையப்பெறும் எனவும் பேசப்படுகிறது.

பிராந்தியங்களின் ஒன்றியம், சமஸ்டியா?

சந்திரிகா அரசாங்க காலத்தில் பேசப்பட்ட தீர்வு த்திட்டத்தில் உள்ள பிராந்தியங்களின் ஒன்றியம்என்ற அமைப்பு சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி முறையை தொடர்ந்து நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளதே தவிர சமஸ்டி முறை அமுலிலுள்ள நாடுகளில் உள்ளதுபோன்ற கூட்டாட்சி அரசியலமைப்பை நோக்கியதாக அமையவில்லை என்பதனை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சந்திரிகாவின் தீர்வு திட்டம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருக்கிறது:

  • மாகாண மட்டத்தில் அதிகாரப்பரவலாக்கம்
  • இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக எட்டு மாகாணசபைகள்
  • (கொழும்பு, சிறிஜயவர்தனபுர (கோட்டே) பிரதேசங்கள் மாகாணசபை முறைக்குள் அடங்காது மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் இருக்கும்)
  • தற்போது சட்டத்தில் காணப்படுகிற ஆனால்நடைமுறையில் இல்லாத மாகாண சபைகளுக்கான காணி பொலிஸ் அதிகாரம்
  • ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுதல்,மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவுஇருக்கும் வரை முதலமைச்சரை அகற்றும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை

தற்போதுள்ள மாகாண சபை முறையினைச் சற்றுச் செழுமைப்படுத்தியதான ஒற்றையாட்சி முறையிலான இவ்வதிகாரப் பரவலாக்க ஒழுங்குபிராந்தியங்களின் ஒன்றியம் போன்ற சொல்லாடல் மூலம் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற தோற்றத்தைத் தருகிறது. இது எவ்வகையிலும் திம்புப்பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடுவதுமான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய அரசியற் தீர்வினை நோக்கியதாக அமையவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் `பதின்மூன்று பிளஸ்’ என அடிக்கடி கூறப்படுகிற விடயமே`பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்று தலைப்பில் முன்வைக்கப்பட்டது .

கிராம இராட்சியமும், பெருநகரத் (Megapolis) திட்டமும்

11895162_401314716729553_1520780449424279405_o (1)மாகாணமட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றிப் பேசப்படும் அதேசமயத்தில், கிராம மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியும் பேசப்படுகிறது. இன்னொரு புறத்தில் கொழும்பையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும் நீட்டி (சந்திரிகாவின் தீர்வுதிட்டத்தில் கொழும்பு,கோட்டைப்பிரதேசங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தன) மேற்கு மாகாணத்தில் ஒரு பெருநகரை ஏற்படுத்துவதற்கான உட்டுகட்மானப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மகாவலித் திட்டத்திற்கு நிகரான பெருந்திட்டமாகக் கருதப்படும் இத்திட்டத்தின் அமைச்சராக ஜாதிக ஹெல உருமயவைச் சேர்ந்த பாட்டாலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டிருக்கிறார். தாய்லாந்து நாட்டின்மையமாக பாங்கொக் நகரம் அமைக்கப்பட்டமைபோன்று கொழும்பு விஸ்தரிக்கப்பட்டு மெகாபொலிஸ் ஆக உருவானால் அதிகாரம் அங்கு குவிக்கப்படுமே தவிர மாகாணமட்டத்தில் பகிரப்படுவது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்காது.

சமஸ்டியாகவும், சமஸ்டி இல்லாமலும் தோன்றும் ஒரு தீர்வு

புதிய அரசியல் யாப்பு எத்தகையதாக அமைந்திருந்தாலும், அதனை சமஸ்டித்தீர்வு அல்லது சமஸ்டியை நோக்கிய தீர்வு என தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வியாக்கியானம் செய்வதற்கும்,இந்தளவிற்கு சிறிலங்கா அரசாங்கம் உடன்பட்டதே பெரும்சாதனை என மேற்குலகத்தரப்பினர்மெச்சுவதற்கும், அதேசமயத்தில், சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் இது முன்பிருந்ததனையும் விடஇறுக்கமான ஒற்றையாட்சி முறை என சிங்களமக்கள் மத்தியில் அடித்துக் கூறுவதற்கும் வசதியானதாக அமையும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு தமிழ்மக்களுக்கு ஒன்றாகவும், சிங்கள மக்களுக்கு வேறொன்றாகவும் தோன்றக் கூடியவகையிலான ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதுதான் அதனைவரையவுள்ளவர்களுக்கு முன்னுள்ள சவாலாக இருக்கும். ஏற்கனவே சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஏட்சிசுகூக்ஷ விசாரணை பரிந்துரை செய்ய்ப்பட்டுள்ளதாக தமிழ்த்தரப்பும், உள்ளக விசாரணையைக் கோரியுள்ளதாக சிறிலங்கா அரசதரப்பும் கூறிவரும் நிலையில், இவ்வாறு மயக்கமான சொல்லாடல்களுடன் ஒரு அரசியல் அமைப்பை கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சட்ட அறிஞர்கள்தான் கூறவேண்டும்.

இவ்விடயத்தில் எதுவித மயக்கத்திற்கும் இடம்தராமால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதான ஒருதீர்வுத் திட்டத்தினை தமிழ்தரப்பினர் முன்வைக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இப்பாரிய பணியினை தமிழ் சிவில் சமூகத்தினதும், அரசியல் செயற்பாட்டாளர்களினதும் கூட்டிணைவினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை நிறைவேற்றும் என எதிர்பார்ப்போமாக. தமிழ் மக்கள் பேரவையை எல்லா வகையிலும் வலுப்படுத்துவதன்மூலமே இதனைச் சாத்தியமாக்கலாம் என்பதனை நான் இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.