நடனபுயல் பிரபுதேவா பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

102

“அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கிவிட்டேன்”

தமிழ் சினிமாவுல சில பேர் மட்டும் தான் தன்னை தானே புகழ்ந்து பாடறது, பேசறதெல்லாம் செய்வாங்க. அப்படி பேசறது தற்பெருமையா தெரிஞ்சாலும், அவங்க திறமையை பார்க்கும் போது “அட ஆமாண்டா, அவங்க சொல்லிக்கறதுல என்ன தப்பு” னு தோணும். சிவாஜி, கமல், இளையராஜா, ரஜினி இந்த வரிசையில பிரபுதேவாவுக்கும் பொருந்தும். எப்படி சச்சினை பார்த்து ஒரு தலைமுறையே பேட்டை தூக்கிட்டு வந்தாங்களோ, அதே மாதிரி பிரபுதேவாவை பார்த்து டான்ஸ் கத்துக்க ஆசப்பட்டவங்க அதிகம்.

ஒரு கலை மேல ஆர்வம் வந்து அதை முறையா கத்துகிட்டு, திறமையை வளர்த்து அதுல ஜெயிக்கறது, உச்சம் தொடுவது ஒரு வகை. ஆனா சிலர் மட்டும் தான் அந்த கலைக்காகவே படைக்கபட்டிருப்பார்கள். அவங்க ரத்தத்துல அந்த கலை கலந்திருக்கும். சிவாஜியும், கமலும் நடிப்புக்காகவே பிறந்ததை போல, இளையராஜா, எம் எஸ் சுப்புலட்சுமி போன்றவர்கள் இசைக்காகவே பிறந்ததை போல, பிரபுதேவாவும் நடனத்துக்காகவே படைக்கபட்டவர். அப்படி பிறந்தவங்களுக்கு தான் இயற்கையே அவங்களுக்கான பாதையை அமைச்சு கொடுக்கும். ராஜா காலத்து கதைகள் வந்துட்டு இருந்து தமிழ் சினிமாவில் சமூகபடங்கள் வர ஆரம்பிக்கும் போது தான் சிவாஜி எனும் மகா கலைஞனும் திரைக்கு வரார். அவருக்கே அவருக்குனு திரைப்படங்கள் உருவாகுது. ஸ்டூடியோக்களில் செட் போட்டு எடுத்துக்கொண்டிருந்த சினிமா மெல்ல மெல்ல கிராமங்களை நோக்கி நகர ஆரம்பிச்ச போது இளையராஜா எனும் கலைஞன் வெளிய தெரிய ஆரம்பிக்கிறார். அதுவரைக்கும் இருந்த டெம்ப்ளேட் சினிமா உடைக்கபட்டு ஒரு புதிய வகை சினிமா உருவாகும் போது, இயக்குனர்கள், நடிகர்கள் மட்டுமில்லாம ஒரு புதிய இசை தேவைபட்ட போது இளையராஜாவுக்கான இடம் இயற்கையாவே உருவாச்சு.

பிரபுதேவாவுக்கும் அப்படியான ராஜபட்டை தமிழ் சினிமால இயற்கையா அமைஞ்சது. இதுக்கு பேரு நடனமானு ஆடிட்டு இருந்த சீனியர் நடிகர்கள் ஒவ்வொருத்தரா ரிடையர் ஆக ஆரம்பித்த காலம். புதிய சிந்தனையோட இளைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு படையெடுத்த காலம். மிகச்சரியா தமிழ் சினிமாவோட இசையில் மாற்றம் வந்த காலம். ஏ ஆர் ரகுமான் என்ற இசைப்புயலில் ரசிகர்கள் சிக்கிக் கொண்ட போதே பிரபுதேவா எனும் நடன்ப்புயலும் தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. ரகுமான் இசைக்காக பிரபுதேவா வந்தாரா? இல்லை பிரபுதேவா நடனத்துக்காக ரகுமான் வந்தாரானு தெரியாது. ஆனா அந்த மாற்றம் இயற்கை அமைத்து கொடுத்தது.

தந்தை சுந்தரம் ஒரு டான்ஸ் மாஸ்டர். அவர் காலத்துல தான் ஒரு பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர்ஸ் ஆடற பழக்கம் ஆரம்பிச்சதுனு நினைக்கிறேன். சூரியன், வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன், இதயம் படங்கள்ல பிரபுதேவா ஆடின அந்த ஒரு பாடல் தான் அந்த படத்துக்கு விசிட்டிங் கார்ட் மாதிரி. ஜெண்டில்மேன் முடிச்ச உடனே ஷங்கர் படத்துல ஹீரோ. ஒரு பக்கம் ஷங்கர், இன்னொரு பக்கம் ஏ ஆர் ரகுமான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு ஓபனிங் யாருக்கும் கிடைச்சிருக்காது. முதல் படத்துலேயே ஸ்டார் ஆனார் பிரபுதேவா.

தொடர்ந்து ஹீரோவா பயணம் செஞ்சாலும், தன்னோட டான்ஸ் மாஸ்டர் பணியையும் சிறப்பா செஞ்சுட்டே இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தினு ஆல் இண்டியா ஸ்டார்ஸும் பிரபுதேவா சொன்னபடி ஆடிட்டு இருந்தாங்க. அப்பலாம் ஒரு பாட்டு நல்ல பேமஸ் ஆச்சுன்னா அந்த பாட்டுக்கு டான்ஸ் யாரா இருக்கும்னு தான் பேச்சா இருக்கும். ரெண்டே சாய்ஸ் தான் ராஜுவா? இல்லை பிரபுதேவாவா? அந்தளவுக்கு ஒவ்வொரு படத்திலேயும் இவங்களோட பங்களிப்பு இருக்கும். பிரபுதேவா, ராஜு டான்ஸ் கோரியோகிராபி படம்னா பாட்டுக்கு நடுவுல தம்மடிக்க கூட போக மாட்டாங்க.
லேட் நைண்டீஸ்ல வந்த அத்தனை ஹிட் பாடல்களும் இப்ப டிவில போட்டாலும் உக்காந்து பார்க்கலாம். அந்த பெருமையெல்லாம் இவங்க ரெண்டு பேருக்கும் தான்.

பிரபுதேவாவோட கோரியாகிராபில ஸ்பெஷல்னா அது குரூப் டான்ஸ் தான். அந்த குரூப்ல வந்தவங்க தான் இன்னிக்கு தமிழ்சினிமால டாப் டான்ஸ் மாஸ்டர்ஸ். ஜெண்டில்மேன், சூரியன் பாட்டு பார்த்துக்கு அப்புறம், அக்னி நட்சத்திரம் படத்துல ராஜா, ராஜாதி ராஜனிந்த பாட்டு பார்க்கும் போது, அங்க பார்ரா பின்னாடி பிரபுதேவா ஆடறான்னு சந்தோஷபட்டோமோ அதே மாதிரி, நைண்டீஸ் பாடல்களை இன்னிக்கு பார்த்தா எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸையும் பார்க்கலாம்.

ஒவ்வொரு முறையும் ரகுமான் பாடல்களை கேக்கும் போது ஏதோ ஒன்னு புதுசா தெரியும்னு சொல்லுவாங்க. பிரபுதேவா ஆடின பாடல்களும் அப்படித்தான். ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதுசா பார்க்கற மாதிரியே இருக்கும். சிக்கு புக்கு ரயிலே, ரோஸ் இஸ் ரோஸ், காத்தடிக்குது, திருப்பதி ஏழுமலை, யப்பா யப்பா அய்யப்பா, ஆல டே ஜாலிடே இந்த பாட்டை எல்லாம் இப்பவும் பாருங்க. நீங்க என்ன மனநிலைல இருந்தாலும் இதை பார்த்தா உங்களுக்கு சந்தோஷம் பொங்கி வழிய நான் கியாரண்டி. ஒரு பாட்டுக்குள்ளேயே கதை சொல்லும் திறமை தான் பிரபுதேவாவோட ஸ்பெஷல்.

எப்படி சச்சினை சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்தோமோ அதே மாதிரி தான், மீசையில்லாத பிரபுதேவால இருந்து இப்ப தாடி நரைச்ச பிரபுதேவா வரைக்கும் நம்ம வாழ்க்கைல ஒருத்தர் மாதிரி.

என்னுடைய பர்சனல் பேவரைட்னா அது ரோஸ் இஸ் ரோஸ் பாடலும், ஆல்டே ஜாலிடே பாடலும் தான். இந்த ரெண்டு பாட்டுலேயும் அவ்வளவு விஷயம் இருக்கும். நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்க. டான்ஸ் ஆடத்தெரியாதவங்க எல்லாருக்கும் இந்த பாட்டுல வேலை இருக்கும். பாருங்க.

ஹாப்பி பர்த்டே நடனப்புயலே
பத்மஸ்ரீ பிரபுதேவா