ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான செயலாளர் பதவிக்கு ராணுவ அதிகாரியொருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
சுகாதார மற்றும் சுதேச அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றிருக்கிறார் .
அதுமாத்திரமன்றி, ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா, மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கி வைத்திருந்தார்.
இது இவ்வாறு இருக்க தற்போது குற்ற புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரியை நியமித்திருப்பது பாரிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.ஏனெனில் இவ் அமைச்சுகள் தமிழர் நிலங்களை துண்டாடி சிங்கள மயமாக்கலை செய்து வருவதே அதன் பிரதான செயற்பாடாக செய்து வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ராணுவ அதிகாரிகளை மிக முக்கிய பதவிகளுக்கு நியமித்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் எனும் அமைப்பு தெரிவிக்கின்றது.