மாற்று இயக்கங்களுக்காக சிங்கள பகை தீர்த்த புலிகள்

110

மாற்றியக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இலட்சிய உறுதியுடன் தமிழீழ விடுதளைக்காகப் போராடிய வரையில், அவர்களையும் தங்களில் ஒருவராக எண்ணி காப்பாற்றும் பணியினையும் விடுதலைப்புலிகள் செய்திருக்கிறார்கள். 1983 காலப்பகுதியில் வவுனியாவில் புளொட் இயக்கமே நிறைந்திருந்தது. ஒருமுறை வவுனியாவில் சென்றுகொண்டிருந்த சிறிலங்கா விமானப்படையினர் மீது புளொட் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். விமானப் படையினரின் எதிர்தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல், தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய புளொட் இயக்கத்தின் உறுப்பினர் ஓடிவிட, தாக்குதல் முற்றுப்பெறவில்லை. ஓடியவர்கள் கையிலிருந்த SMG ஐ அருகிலிருந்த கடையொன்றின் மிளகாய்ச் சாக்குக்குள் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

தாக்குதலில் காயமுற்ற இராமநாதன் என்ற புளொட் இயக்க உறுப்பினரைக்கூட யாரும் கூட்டிச்செல்லவில்லை. அவரோடு கைவிடப்பட்ட இன்னொரு உறுப்பினர், தனது மிதியூந்தில் இராமநாதனை காந்தீயம் பண்ணைக்குள் அழைத்துச் சென்றார். இவர்கள் இருவரையும் அவதானித்து வந்த ´´தர்மே´´ என்ற வாடகைக்கு மகிழுந்து ஓட்டும் சிங்களன் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறையினர் தொடுத்த தாக்குதலில், புளொட் உறுப்பினரான இராமநாதன் கைதாக மற்றவர் கொல்லப்பட்டார். புளொட் உறுப்பினர்கள் தற்கொலை செய்வதற்கு உரிமையில்லை என அவ்வியக்கத்தின் தலைமையாளர்கள் அறிவித்திருந்ததால், அவ்வியக்கத்திற்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனால் இராமநாதன் கைதின் பின்னர், பல புளொட் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

காட்டிக்கொடுத்த ´´தர்மே´´ என்ற சிங்களவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் மீண்டும் வவுனியா நகருக்குள் செல்லவேண்டும். ஆனால் அந்த விசப்பரீட்சைக்கு புளொட் இயக்கத்தினர் தயாராக இருக்கவில்லை. எனவே புலிகள் அதைச் செய்யத் தயாரானார்கள். வவுனியா நகருக்குள் சென்று தர்மேயின் மகிழுந்தை வாடகைக்கு அமர்த்துவது என்று முடிவாகிற்று. இரணைஇலுப்பைக்குளத்தைச் சேர்ந்த இரகுமான் எனப்பட்ட போராளி (சிறிலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இவர் சயனைற் உட்கொண்டு சாவடைந்தார்) அதனைச் செய்ய முன்வந்து, தர்மேயிடம் சென்று வாடகைக்கு மகிழுந்தைக் கேட்க, தான் களைப்பாக இருப்பதாகவும் வேறொரு மகிழுந்தைக் கேட்குமாறும் தர்மே சொல்ல அன்றைய திட்டம் பிழைத்துவிட்டது.

மறுநாள் இன்னொருவரை அனுப்பி, பட்டாணிச்சூர் என்ற இடத்தில் தொலைக்காட்சிப்பெட்டியொன்றை ஏற்ற வேண்டுமென தர்மே யை அழைத்தோம். தர்மேயும் சம்மதித்து பட்டாணிச்சூர் வந்து, தொலைக்காட்சிப் பெட்டியை ஏற்றுவதற்கு மகிழுந்தின் பின்புறப்பகுதியை திறந்துவிட்டு திரும்பியதும், சுழல்துப்பாக்கியொன்று முன்னே வந்துநிற்பதைக் கண்டு ஆச்சரியத்தால் கண்கள் விரிய…….. விடயம் முடிந்தது. புளொட் உறுப்பினரைக் காட்டிக்கொடுத்ததற்காக விடுதலைப்புலிகள் வழங்கிய தண்டனை இது. ஆனால், அதே புளொட் உறுப்பினர்கள் பின்னாளில் போராட்ட இலட்சியத்தை மறந்ததுமட்டுமன்றி, விடுதலைப்புலிகளை அழிக்க இராணுவத்தோடு கூட்டுச் சேர்ந்தனர்.

கண்ணீர் விட்டே வளர்த்தோம் – கரும்பறவை
முத்தமிழ் விழா சிறப்பு மலர் – 1992