பாடகர் ஹரிகரன் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

342

ஏ ஆர் ரகுமான் தனது இசையில் எத்தனையோ பாடகர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனா இவர் கொஞ்சம் ஸ்பெஷல். ரகுமானோட முதல் படம் தான் தமிழ்ல இவருக்கும் முதல் படம். அதுல ஒரு சின்ன பாட்டு தான். ஆனா பாடினது யாருனு முதல் பாட்டுல தேட வச்சாரு. அந்த பாட்டு தான் ” தமிழா தமிழா” , அந்த பாடகர் தான் திரு.ஹரிஹரன் அவர்கள்.

1977 ல இப்போ நடக்கற சூப்பர் சிங்கர் மாதிரி அகில இந்திய அளவில் பாடகர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். அப்போதைய பிரபல ஹிந்தி இசை அமைப்பாளர் திரு ஜெயதேவ் அவர்கள் தான் அவருடைய முதல் இசை அமைப்பாளர். ஹரிஹரன் திரை இசை பாடகரா தான் நமக்கு தெரியும், ஆனா அவர் இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ண கூடிய மிக சிறந்த கஜல் பாடகர்களில் ஒருவர். அவரது கஜல் பாடல்களின் மிக பெரிய ரசிகர் ஏ ஆர் ரகுமான். அதனால் கவரப்பட்டே அவரை தமிழ் இசை துறைக்கு அழைத்து வந்தார்.

ஆரம்ப கால ஏ ஆர் ரகுமானுடைய மிக பெரிய ஹிட் பாடல்களை ஹரிஹரன் தான் பாடி இருப்பார். 1992-ல் அறிமுகமானாலும் உடனடியாக அவருக்கு நிறைய பாடல்கள் கிடைக்கவில்லை. மீண்டும் ரகுமான் அழைத்து கொடுத்த பாடல் தான் “உயிரே உயிரே” பம்பாய்(1995) படத்தில் இடம் பெற்றது. ஒட்டு மொத்த இசை ரசிகர்களும் இந்த பாடலில் கரைந்து போனார்கள். அதற்கு பிறகு “நிலா காய்கிறது”, “டெலிபோன் மணி போல்”, “அன்பே அன்பே”, “குறுக்கு சிறுத்தவளே”, ” வெண்ணிலவே வெண்ணிலவே”, பச்சை நிறமே பச்சை நிறமே” என்று ஒவ்வொரு படத்திலும் ஹரிஹரனுக்காக ஒரு ஸ்பெஷல் பாடல் வைத்திருப்பார். அதற்கு பிறகு அவர் பாடாத படமே தமிழில் இல்லை என்னும் அளவிற்கு அத்தனை ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.

அந்த வருடத்திலேயே தேவாவின் இசை அமைப்பில் ஆசை படத்தில் இவர் பாடிய பாடல் “கொஞ்ச நாள் பொறு தலைவா” தமிழா அரசின் மாநில விருது பெற்றது. அவருடைய ஸ்பெஷாலிட்டியே அப்போதிருந்த அனைத்து இசை அமைப்பாளர்களும் இவருக்கென்று சிறந்த பாடலை வைத்திருப்பார்கள். தேவாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் தான் 90-களின் இறுதியில் இளைஞர்களின் காதல் தேசிய கீதங்கள்.காதலில் கரைந்து உருகும் இளைஞர்களுக்கு இவர் பாடல் தான் அருமருந்து. அது காதல் டூயட்டோ, இல்லை காதல் தோல்வி பாடலோ, ரெண்டுமே இவருடையது தான். “அவள் வருவாளா”, “ஊதா ஊதா பூ”, “எனக்கொரு சினேகிதி”, “காதலா காதலா”, “கோபமா என் மேல் கோபமா”, “மலரோடு பிறந்தவளா”, “ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்”, யார் சொல்வதோ”, முதன் முதலில் பார்த்தேன்”, “ஒரு மணி அடித்தால்”, “உன் உதட்டோர சிவப்பே”, போன்ற பல ஹிட் பாடல்களை அவர் பாடி இருக்கிறார். அப்போது பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்கள் இவருடையது தான்.

வித்யாசாகரின் இசையில் “நீ காற்று நான் மரம்”, அன்பே அன்பே நீ என் பிள்ளை”, “உடையாத வெண்ணிலா” தவமின்றி கிடைத்த வரமே” பாடல்கள் எல்லாம் நான் கேட்காத நாள் இல்லை. யுவனின் ஆல் டைம் ஹிட் பாடலான “சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்” பாடல் ஒன் ஆப் தி பெஸ்ட் என்று சொல்லலாம். பரத்வாஜ் இசையிலும் “வானும் மண்ணும் கட்டி கொண்டதே”, “இதற்கு பெயர் தான் காதலா” போன்ற பாடல்களும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவை. எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் இவர் பாடிய “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” பாடலை தமிழ்நாடே பாடியது.

ராஜாவின் இசையில் “என்னை தாலாட்ட வருவாளா” பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட். அதற்கு பிறகு அவர் இசையில் அதிகமாக பாடாவிட்டாலும் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்தது போல் இவரை மட்டும் வைத்து இளையராஜா ஒரு ஆல்பம் கொடுத்தார். ஹரிஹரனுடைய இசை வாழ்வில் ஒரு மைல்கல் இந்த படம். அந்த படம் தான் “காசி”. படத்தில் 6 பாடல்கள், எல்லாமே ஹரிஹரன் பாடியது தான். உயிரை உருக்கும் பாடல்கள் அவை.

இப்போதும் தனது முதல் காதலியான கஜல் பாடல்கள் பாடி கொண்டிருக்கிறார். தமிழில் 90 களுக்கு பிறகு எத்தனையோ பாடகர்கள் அறிமுகமானாலும் இவருடைய இடம் இன்னும் நிரப்பப்படாமல் அப்படியே இருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரிஹரன் சார்.

– மகாதேவன்