சின்ன வயது சினிமாப்படங்கள்

228

சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இன்று வீட்டில் இருந்தபடியே விரும்பிய படத்தை விரும்பிய நேரத்தில் தொலைக்காட்சியை இயக்கிப் பார்க்கின்றோம்.

தொலைக்காட்சிப் பெட்டிகளே இல்லாத அந்த நாட்களில் எங்கள் பள்ளிக் காலத்தில் தியேட்டர்களில் சென்று தான் படம் பார்க்க முடியும். தியேட்டர்கள் என்றால் அது நகரப் புறத்தில் தான் இருக்கும். 1960களை ஒட்டிய பின்னைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் பஸ் நிலையத்தையொட்டி ராணி சினிமா அப்பால் வொலிங்டன் தியேட்டர், வின்சர் தியேட்டர் என்று நாலு தியேட்டர்கள் இருந்தன. போகும்போதும், வரும்போதும் பஸ்ஸில் இருந்தபடியே தியேட்டர்களின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெரிய கட்டவுட் படங்களைப் பார்ப்பதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.

சென்ற வாரம் கூட புலி படம் யாழ்ப்பாணத்தில் வெளியானதாகவும், விஜய் படத்திற்கு, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடியதாக செய்தி வந்தது. ஆனால், அந்த நாட்களில் இந்தளவிற்கு இல்லையென்றாலும், முன்டியடித்து முதல் நாள் படம் பார்ப்பதுஎம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் முன்னணி கதாநாயகர்களாக அன்றைய கறுப்பு, வெள்ளைப் படங்களை அலங்கரித்தார்கள்.

ஆரம்பகாலத்தில் சினிமா படம் பார்க்கின்ற அறிவும், ஆசையும் எனக்குள் விரிந்த பருவத்தில் முன்னிலை வகித்தவர்கள் சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, பானுமதி, கே.ஆர்.விஜயா என கதாநாயகிகள் படிப்படியாக பின்னர் உருவானார்கள். ஆபாச உடைகள், ஆபாச நடனங்கள் அந்த நாட்களில் சினிமாப் படங்களில் மிகமிகக் குறைவு. கறுப்பு, வெள்ளைப் படங்களை கண்டுகழித்த எங்களுக்கு காதலிக்க நேரமில்லை என்ற படம் முதல் ஈஸ்ட்மென்ட் படமாக வொலிங்டன் சினிமாவில் ஸ்ரீதர் இயக்கத்தில் திரையிடப்பட்டது. அந்த நாட்களில் கலரியிருந்து படம் பார்க்க 0.69 சதம், இரண்டாம் வகுப்பு என்றால், ஒரு ரூபா 25 சதம், முதலாம் வகுப்புக்கு 1 ரூபா 90 சதம், ரிசேவுக்கு 2 ரூபா 50 சதம் என்று இருந்ததாக நினைவு.

புதுவருடத்திற்கு, கைவிஷேடத்திற்கு என்று கிடைக்கின்ற சில்லரைகளை அவ்வப்போது வெங்காயம் கட்ட உதவுவதற்காக சரவணமுத்து மாமா தருகின்ற சில்லறைகள், சின்னச்சின்ன வேலைகளுக்கு அம்மாவிடம் பேரம்பேசி செய்து கொடுத்து வாங்கும் காசு என்று சேர்த்து வைப்போம். சித்திரை, ஆவணி விடுமுறைகளில் தான் படம் பார்க்க அனுமதி பெரும்பாலும் கிடைக்கும். இடையே நல்ல படம் வந்தால் கெஞ்சி, அழுது அனுமதி வாங்கி போய் வருவோம்.

தெல்லிப்பளை சந்திக்குப் போய் தான் யாழ்ப்பாணத்திற்கு பஸ் எடுக்க வேண்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. நடந்து போய் 737 இலக்க பஸ் யாழ்ப்பாணம் போவோம். பஸ்சுக்கு சிறுவர்களாக எங்களுக்கு அரைக்கட்டணம் தான். 18 சதம். படம் பார்க்க கலரிக்கு 65 சதம். 1 ரூபாவுடன் ஒரு படத்தை பார்க்க முடியும் என்ற நிலை எங்கள் சிறுவயது காலத்தில் இருந்தது. காலை 10 மணிக்கு காலைக் காட்சி, பகல் 2.30 காட்சி என்று ஒரே பஸ் செலவில் இரண்டு காட்சி பார்த்து விட்டு இடையில் மலையன் கபேயில் வடை சம்பலோடு சிக்கனமாக மதிய உணவை முடித்துவிட்டு சந்தோஷமாக வீடு திரும்புவோம்.

இவ்வாறாக தொடர்ந்த இந்ந சினிமா ஆர்வம், பின்னாளில் சித்தியோடு சென்று பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். அண்ணாமார், அயல்வீடு, நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து போய் வருவோம்.

இடையே இணுவிலில் ஒரு தியேட்டர் இருந்தது. காங்கேசன்துறையிலும் பின்னாளில் தியேட்டர் ஆரம்பமானது. சைக்கிளில் போய் பார்க்கின்ற ஆர்வம் வந்ததும் 6.30 காட்சி, இரவு இரண்டாம் காட்சி என்று மொக்கன் கடை சாப்பாட்டுடன் எங்கள் பட்ஜெட் விரிவானது.

இரவு நேரகாட்சி பார்க்கின்ற எங்கள் வாலிப பருவத்தில் சைக்கிள் சவாரி தான். டபிள்ஸ் சிலவேளை போவோம். அந்த வேளைகளில் இரண்டு மூன்று பேர் சைக்கிளில் பயணம் செய்த காலமும் உண்டு. சிலவேளை சைக்கிள் முகப்பு விளக்கு எரியாது. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வரும்போது நல்ல பிள்ளைகளாக நடந்து அதைக் கடந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு போவோம். இடையே பொலிஸாரைக் கண்டால் சைக்கிள் சில்லுக் காற்றை கழற்றி விடுவார்கள். சிலவேளை வால் டியுப்பையும் பிடுங்கி வைத்துக் கொண்டு விடுவார்கள். உருட்டிக் கொண்டு தான் வீடு வந்து சேர வேண்டும்.

பின்நாளிலில் வால்டியூப், கை பம் என்று தயாராக கொண்டு போக பழகிவிட்டோம். பள்ளிக்கூடம் போவதாக சொல்லிவிட்டு படம் பார்க்க போகின்ற சினேகிதர் அந்தக் காலத்தில் எங்கள் வகுப்பிலும் இருந்தார்கள். பாடப்புத்தகத்Ûதை மறைத்துவிட்டு படத்திற்குப் போவார்கள். வீட்டுக்கு அது தெரிய வருவதும், வீட்டில் தகப்பன் பிரம்படித் தண்டனை, ஆசிரியரின் தண்டனை என்று அந்தக் கால சினிமா சங்கதிகள்.

முதல் நாள் படம் பார்ப்பது என்பது சாதனைக்குரிய விடயமாக அந்தக் காலத்தில் இருந்தது. நாங்கள் 8ஆம் வகுப்பு படிக்கும் போது வாமதேவன், புண்ணியம் என்று இரு நண்பர்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை படம் முதல் காட்சி பார்க்கப் போனார்கள். அந்த நாட்களில் கலரி, இரண்டாம் வகுப்பு எல்லாம் வரிசையில் நின்று ரிக்கட் எடுக்கக் கூடிய வகையில் தகரத்தாலும் அடைத்து கியு வரிசை வொலிங்டன் தியேட்டரில் செய்யப்பட்டிருந்தது. கலரி வரிசையில் ரிக்கட் வாங்க காத்திருந்த வாமதேவன் சலித்துப் போய் குழாய் வேலியால் பாய்ந்து முன்புறம் குதித்துள்ளான். குதிக்காலை தகரம் பதம் பார்த்து ரத்தம் வடிய வடிய படம் பார்த்து அது முடிந்த பின்னர் தான் ஆஸ்பத்திரிக்குப் போனான்.

நல்லபடம் வெளியானால் எங்கள் சித்தி வாடகைக் காரில் அழைத்துக் கொண்டு போவா. பெண்களும் படம் பார்த்து செல்லும் அளவிற்கு பண்பாடு தியேட்டரில் இருந்தது.

படத்தில் ஆரவாரம், சண்டைக் காட்சி வரும் போதுதான் விசில் அடிப்புகள் தொடரும். தீபாவளி, பொங்கல் என்று புதிய படம் வரும்போது முன்வரிசை ரிக்கட் எடுக்கும் அமளிகளை பொலிஸ் அடக்கி விடுவார்கள். இடைவேளை வந்தால் ஓப்பினரால் ஒலி எழுப்பிக் கொண்டு தியேட்டர் காரர்கள் ஆசனங்களை தேடி வந்து குடிபானங்கள், சிற்றுண்டிகள் என்று விற்பனை செய்வார்கள். விலைஇரண்டு மடங்காக இருக்கும்.

நாங்கள் சினிமா பார்க்கும் சங்கதிகளை எண்ணிப் பார்க்கின்ற போது, அந்த அவலத்திலும் ஒரு இனிமை மனதிற்குள் ஓடத் தான் செய்கிறது.

Photo Courtesy : The Hindu