இது எப்போதென்பது எளிதில் பதில் சொல்லும் கேள்வி அல்ல. 1866 ல் மேற்குலக மொழி அறிஞர்கள், பாரிசில் இந்தக் கேள்விக்கு பதில்கண்டு கொள்ள முடியாதென்று கருதி அதுபற்றிய ஆய்வே தேவையற்றது என்று முடிவெடுத்தார்கள். கடந்த நூற்றாண்டில் அறிவியலும் தொழில்நுட்பமும் அடைந்த அதீத வளர்ச்சி காரணமாக இந்தக் கேள்விக்கு பதில் பெறமுடியும் என்ற நம்பிக்கையொளி தென்படுவதால் அந்த கருப்பொருள் பற்றி மீண்டும் பேசுகிறார்கள்.
ஆனாலும் மனிதர் எப்போதிலிருந்து பேசத்தொடங்கினார்கள் என்பது இன்றும் தர்க்கத்திற்குரிய விடயமாகவே உள்ளது. நாம் எம்உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தி மிக எளிதாகக் குரல் எழுப்புகின்றோம், தொடர்புகளை ஏற்படுத்துகிறோம். மற்றைய மிருகங்களும் குரல் எழுப்புகின்றன. உடல் அசைவுமூலம் பரிமாற்ற சைகைகள் கூடச் செய்கின்றன. சில சிம்பன்சிகள் சைகைகள் மூலம் பிச்சை கேட்பதுபோல் பாவனை செய்கின்றன. மனிதர் மட்டும்தான் நாக்கைப் பயன்படுத்தி ஒலியை வசப்படுத்தி எத்தனையோ சொற்களை உருவாக்குகிறார்கள். அதன் விளைவு, சொற்கள் ஒழுங்கில்அமையப்பெற்று இலக்கணமாகி எழுத்துகள்மூலம் பதிவாகி, வாயைத் திறக்காமலே துல்லியமான கருத்துப் பரிமற்றம் செய்யுமளவிற்கு ஆற்றல் அவர்கள் கைக்கு வந்துவிட்டது. நாக்கைவளைத்து ஒலி எழுப்பும் ஆற்றல் மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. 99 சதவீதம் வரை எம்மை ஒத்த பண்புக் காரணி அமையப் பெற்றுள்ள, ஜிப்பன், ஒறேங்குற்ரான், கொரில்லா, சிம்பன்சி, பொனபஸ் ஆகிய ஐந்து மனிதக் குரங்குகளாற்கூட மா, பா போன்ற எளிய அடிப்படைச் சொற்களைக் கூற முடிவதில்லை. நாக்கை பயன்படுத்த முடியாத தன்மையே அதற்கான காரணம்.
அறிவியலில் ஒரு கோட்பாடு திடப்படுத்தப் படும்வரை குழப்பங்கள் ஏற்படுவது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. வெப்பம், ஆற்றலின் வடிவங்களில் ஒன்று. இன்று இது சாதாரண விடயம்.ஒரு காலத்தில் வெப்பம் திரவ நிலை கொண்டது என்று ஒரு கோட்பாடு இருந்தது. பல நேரடி நிருபணங்களால்தான் அது முறியடிக்கப் பட்டது.
கிழக்கில் என்றாலும் சரி மேற்கில் என்றாலும்சரி இதுபற்றிப் பலர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தாம் எதை ஊகிக்கிறார்களோ அதையே சரி என்பார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் எம்மதிப்பிகுரிய பலர்கூடபேச்சு பற்றியும் மொழி பற்றியும் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையே கூறியுள்ளார்கள். தம் சிறந்த பாடல்கள் மூலம் எம்மைகிறுகிறுக்க வைக்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட அறிவியலுக்கு புறம்பான கருத்தையே கூறியுள்ளார். தமிழை வானில் இருந்துகுதித்த மொழியாக சொல்கிறார். ஆதிசிவன் பெற்று விட்டானாம். அகத்தியர் என்னும் வடமொழிக்காரர் நிறை மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தாராம். கேவலம். இங்கு தொல் காப்பியர் கூட மரத்துள்மறை மாமதயானையாகி விட்டார். அகத்தியர் சிவன் பெயரைச் சொல்லி இங்கு வந்த வடநாட்டு உளவாளி என்றும் ஒரு தகவலில் பேசப்படுகிறது. மேற்கிலும் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் இதுமாதிரியான கதைகள் உள்ளன. எல்லோருமாகச் சேர்ந்து கட்டிக்கொண்டிருந்த பாபெல் (Babel) கோபுரம் கட்டிப் பூர்த்தியாகக் கூடாது என்பதற்காக கட்டிக் கொண்டிருந்தவர்கள் பல மொழி பேசுபவர்களாக மாற்றப் பட்டார்கள் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
மனிதர் மரத்திலிருந்து இறங்கியதால் பலமாற்றங்கள் ஏற்பட்டது. இது 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிகழ்வு, எம்மைப்போல் 99 சத வீதம் ஒத்துப் போகும் பண்புக் காரணிகொண்ட ஐந்து மனிதக்குரங்கு இனங்களும் முன்பு கூறியதுபோல் மா, பா போன்ற எளிய அடிப்படைச் சொற்களை வாய் திறந்து கூறமுடியாத நிலையில் உள்ளன. 30 இலட்சம்ஆண்டுகளின் மாற்றம் என்றாலும் வேறுபாட்டுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே பாரிய வேறுபாடுதான்.
இந்த மாற்றங்கள் பற்றி சால்ஸ் டார்வின் கூறுகிறார் `இயற்கை எழுப்பிய சத்தங்கள், அதுஅளித்த சைகைகளும் அடையாளக் குறியீடுகளும், மற்றைய மிருகங்களின் சத்தங்கள் ஆகியவற்றோடு மனிதரின் சொந்தச் சத்தமும் சேர்ந்துதான் மொழிக்கு தொடக்கப் புள்ளி இட்டனபீ என்று. அவரைத் தொடர்ந்து வேறு பல கோட்பாடுகளும் முன் வைக்கப் பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றையே இங்கு பார்க்கப் போகிறோம்.
[tie_list type=”starlist”]
- ஒரு சாரார் கூறுகிறார்கள் அது என்ன பேச்சு, மொழி, சைகை என்று பிரிக்கிறீர்கள். மனிதர் படி நிலை மாற்றம் அடையும்போது எல்லாம் ஒருங்கிணைந்து மாறியதன் விளைவுதான் இன்றைய மனிதரின் நிலை என்று.
- இன்னொரு சாரார் மேலும் நீடிக்கின்றனர்.எம்மிடம் என்னவெல்லாம் இருந்ததோ அதுவே தொடர்கிறது. படிநிலை மாற்றமடைகிறது. கற்பனையில்கூடச் சிந்திக்க முடியாத சிக்கல் கொண்ட பேச்சு, மொழி போன்ற அம்சங்கள் வெளியில் இருந்து உள்ளே வருவது எப்படி சாத்தியம் என்கிறார்கள்.
- இன்னொரு சாரார் அதற்கு சரி எதிர்மறையாக மற்றைய உயிரினங்களில் காணமுடியாத பேச்சு மொழி ஆகியவை இடையில்தான் படிநிலை வளர்ச்சியில் மரபுப் பிறழல் மூலம் மனிதருக்கு கிடைத்துள்ளதென்கின்றார்கள்.
- சிலர் மொழி என்பது எம்முடன் மரபு ரீதியாக பின்னிப் பிணைக்கப் பட்ட ஒன்று என்கிறார்கள்.
[/tie_list]
இவற்றைவிட சில கோட்பாட்டாளர்கள் மொழி சமுதாயத் தொடர்புகளால் ஏற்பட்ட ஒரு கலாச்சார ஒழுங்குமுறை என்கிறார்கள். இதனால்தான் நான் ஏற்கனவே கூறியிருந்தேன் அறிவியலில் ஒரு கோட்பாடு திடப்படுத்தப் படும்வரை குழப்பங்கள் ஏற்படுவது ஒன்றும் புதிய நிகழ்வு அல்லவென்று.
அறிவியலில் கோட்பாடுகளை முன்வைக்கலாமே அன்றி ஊகித்து எதையுமே சொல்லக்கூடாது. எங்கள் கையில்தான் கருத்துப்பரிமாற்றத்தின் கருவியாம் மொழி உள்ளதே. அதுபற்றியும் மேலோட்டமாகப் பார்ப்போம்.
இந்தப் பரிமாற்றத்தை சைகை மூலமும் குறியீடு மூலமும் செய்யலாம். அது தொடக்க நிலை.நுண்ணிய கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி அமைக்காது. இன்று மனித சமுதாயம் மொழி என்னும் கருவியைப் பயன்படுத்தி பேச்சாலும் எழுத்தாலும் எவ்வளவோ நுண்ணிய கருத்துக்களை வெளிக் கொணருமளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது, வளர்ந்து கொண்டே போகின்றது. மனிதன் மட்டுமல்ல வேறு உயிரினங்களும்சைகை குறியீடுகள் மூலம் ஒன்றுடன் ஒன்றுதொடர்பு கொள்ளுகின்றன. அவற்றின் செயற்பாடுகளுக்கும் மனிதச் செயற்பாட்டுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது. டொல்பின் என்னும் நீர்ப் பிராணிகள் மத்தியில் ஒன்றை ஒன்று பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளும் தன்மை அவதானிக்கப் பட்டுள்ளது. ஒருவகைக் குரங்குகள் தம் கூட்டத்திற்கு விடும் எச்சரிக்கை குரல்கள் அவை எதிர்நோக்கும் அபாயத்தை இனம் காட்டக் கூடியதாக 10 வகைகளுக்கு மேல் வேறுபட்டுவருவது அவதானிக்கப் பட்டுள்ளது. வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த இடத்தில் உள்ள வாலில்லாக் குரங்குகள் மனிதரைப்போல் பலசத்தங்களை எழுப்பும் ஆற்றல் பெற்றிருக்காவிட்டாலும் சைககள் மூலம் நுÖற்றுக் கணக்கான சொற்களைக் கற்கின்றன. அச் சொற்கள்,சொற் தொடரும் இலக்கணமும் குன்றியவையாகவே காணப்பட்டாலும் அவற்றைக் கற்கும் திறனை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அந்த நிலை ஒரு காலத்தில் நாம் இருந்தநிலையை ஞாபகத்துக்கு கொண்டு வருகின்றதுதானே.
மொழி என்றால் அது குரல்வளையில் இருந்துவரும் ஒலியில் மட்டும் தங்கியுள்ளது என்று எண்ணினால் அது தப்புக் கணக்கு. மேலே நான்குறிப்பிட்ட டொல்பின், வாலில்லாக் குரங்கு ஆகியவைகளைவிட கிளிப்பறவை சொற்களைஒவ்வொன்றாக உச்சரிக்கின்றது. இதை வைத்து கருத்துப் பரிமாற்றத்தில் கிளி வளர்ச்சி கூடியது என்றால் அது தப்பு. சொற்களைத் தொடரியல் படுத்தி உள்ளத்தின் எண்ணங்கÛளையும் கருத்தையும் வெளிப்படுத்தப் பேசப்படுவதுதான் மொழி. என்னதான் தெளிவாகக் கிளி பல சொற்களைச் சொன்னாலும் அவை எல்லாமே அதன் குரல்வளை ஆற்றலைப் பயன் படுத்தி திரும்பத்திரும்பக் கேட்ட சொற்களை ஒப்புவிக்க எற்படுத்தும் ஒரு ஒலி அலையே.
மனித மூளையின் படிநிலை வளர்ச்சியால் ஏற்பட்ட படிமலர்ச்சி மாற்றம் எம்மினத்தை எங்கேயோ உச்சிக்குக் கொண்டு போய் விட்டது.எடுத்துக் காட்டிற்கு பிறவியிலேயே உடற்கூற்றின் குறைபாடு காரணமாக சொற்கள் என்றால் என்னவென்று செவியால் கேட்டு அறிய முடியாத பிறவிச் செவிடர்கள், அதாவது பேச்சென்றால் என்னவென்று புரியாதவர்கள், சைகை மொழி படித்து பல கருத்துக்களை வெளிப் படுத்துகிறார்கள். பட்டதாரிகளாகின்றனர். இதற்கு காரணம் மனிதனின் நரம்பு மண்டலமும் உடற் கூற்று இயல்பும் படிநிலை வளர்ச்சியில் பெற்றுள்ள திசு மரபுப் பிறழ்வு மாற்றங்களே.
மரத்தில் இருந்து இறங்கி இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்த 30 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளை ஒரு தொடக்கப் புள்ளியாக வைத்து அதே காலத்தில் வாழ்ந்த மனித உயிர்ச்சுவடு ஆய்வுடன் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித உயிர்ச்சுவட்டு ஆய்வை ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் தென்பட வில்லையாம். அதன் பின் எமது மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றில் ஏற்பட்டமாற்றம்தான், எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் மூளைக்கு ஏற்பட வழி வகுத்திருக்கலாம். அதன் தொடர்ச்சியே அர்த்தமுள்ள ஒலிகள் உருவாகும் ஆற்றலை மூளை பெற வழி வகுத்து மொழிகளின் தொடக்கத்திற்கு வித்திட்டது.
ஒரு மொழியிலிருந்துதான் இன்று உலகிலுள்ள 100 வரையான மொழிக் குடும்பங்கள் (6,000 க்கு மேற்பட்ட மொழிகள்) தோன்றினவோஅல்லது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டுஉருவான ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலிருந்துதான் பல்வேறு குடும்பங்கள் உருவானதோ என்பதைத் திடப் படுத்திக் கூற முடியாத நிலையே உள்ளது. இதிலுள்ள சிறப்பு அம்சம்கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இத்துறை முற்றிலும் அறிவியல் மயப் படுத்தப் பட்டுள்ளது. சரியான பதிலை நிச்சயம் தரும். அதுவரை அர்த்தமற்ற ஆதி சிவன் பெற்றுவிட்டான் போன்ற பதங்களைத் தூக்கி எறிவோம்.