போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்

104

போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் 1969ல் மார்லின் பிராண்டோ நடித்து வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளான படக்கதையின் அடிப்படை கருத்துக்களுடன் மாவீரர்களுக்கான அகவணக்கத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

1840க்கும் 50க்கும் இடைப்பட்ட காலம். இடம்கரிபியனில் உள்ள ஒரு கற்பனைத்தீவு. போர்த்துக்கேயக் காலணியான இத்தீவின் கறுப்பினஅடிமைகள் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பிரித்தானியா அங்கு `வாக்கர்’ என்னும் கூலிப்படைப்பிரதிநிதியை அனுப்புகிறது. அவர் கிளர்ச்சியாளருக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி, போர்த்துக்கேயக் கவர்னர் கொல்லப்படும் அளவிற்கு மேலோங்க வைக்கிறார். வெள்ளை நிறத்தவர் செல்வாக்குக் கொண்ட ஒரு பொம்மை அரசு நிறுவப் படுகின்றது. அடிமைகள் அத்தனைபேரும் சுதந்திரக் குடிமக்களாக்கப் படுவார்கள் என்ற நிபந்தனையும் அம்மக்கள் மத்தியில் உள்ள நிர்வாகத் திறன் இன்மையையும் காரணமாக வைத்து டொலோஸ் தலைமையிலான கரந்தடிப் படையினர் புதியஅரசாங்கத்தை அங்கீகரித்து தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள்.

10 ஆண்டு காலத்தில் அந்த அரசாங்கத்தின் பிரித்தானிய நலன் காக்கும் நடவடிக்கை கண்டுவிரக்தியடைந்த கறுப்பின மக்கள் திரும்பவும் கிளர்தெழுந்து போராடத் தொடங்குகிறார்கள். பிரித்தானியக் கூலிப்படைப் பிரதிநிதிக்கு உதவிய அதே டொலோஸே கிளர்ச்சிக்கு தலைமைதாங்குகின்றான். படத்தின் பெயர் `BURN’.

திரும்பவும் அதே பிரதிநிதி வாக்கர் அங்கு அனுப்பப்படுகிறார். கிளர்ச்சி அடக்கப் படுகிறது. தலைவன் கைது செய்யப்படுகின்றான். வாக்கர் அவனைச் சந்தித்து அவன் தப்பிச் செல்வது பற்றி பேச முற்பட்டபோது அவன் மறுக்கின்றான். காரணம் சுதந்திரம் என்பது போராடிப்பெறவேண்டிய ஒன்று. யாரும் அதைக் கொடுக்க முடியாது. அத்துடன் ஒரு போராளியை கொல்வதை அரசு தவிர்ப்பது அவன் ஒரு மாவீரனாகி வரலாற்று நாயகனாகினால் அரசுக்கு பாதகமாக அமையும் என்பதனாலேயே. எதிரிக்கு எது சாதகமாக அமைகிறதோ அது போராளியின் இலட்சியத்திற்கு தீங்காக அமையும் என்பதால் அத்தலைவன் தான் தூக்கிலிடப் படும்வரை தன்இலட்சியம் பலம் குன்றுவதற்கு காரணியாக விரும்பவில்லை.

விடுதலைப் புலிகளும் ஒட்டுமொத்த சரணாகதியை கடைசி நேரத்தில்கூட விரும்பவில்லை. அவர்கள் ஒட்டுமொத்த சரணடைவை விரும்பாதிருந்தாலும் அவர்களை திட்டமிட்டு இழிவு படுத்தவேண்டிய தேவை அரசுக்கு இருப்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல. ஒரு நாயைக்கொல்வதானலும் முதலில் அதன் பெயரைப் பழுதடைய வை என்பது ஒரு ஆங்கிலப்பழமொழி. பல வழிகளில் இந்த முயற்சி நடக்கும். அவர்களை ஆற்றல் குறைந்தவர்களாக, கோழைகளாக, சுயநலவாதியகளாகக் காட்ட எத்தனையோ வழிகள் கையாளப்படும். இந்த முயற்சியின் ஒரு அங்கம்தான், 2009 மே மாதத்தில் ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்னணியில் தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் விடுதலைப் புலிகளைக் கோழைளாÖகக் காட்டும் நோக்கில் பல கதைகள் கட்டிவிடப்பட்டன. அனைத்துலக விசாரணை காரணமாக உத்தியோகபூர்வமாக இவை பற்றிய விபரமான பகிரங்க அறிக்கை விட முடியவில்லை என்று கரடி வேறு விட்டார்கள். இக்கதைகளை எங்கள் மத்தியில் பரப்புவதற்கு எம்மினத்தின் கோடரிக் காம்புகளையே பயன்படுத்தினார்கள். இதில் கவலை தரும் விடயம் எதிரியினதும் கோடரிக் காம்புகளினதும் செயல் அல்ல. ஆழமற்ற சிந்தனைகொண்ட பலர் உண்மை என்றுநம்பி பேசுவதுதான் எம் உள்ளத்தை கொதிக்கச் செய்கிறது. விடுதலைப் புலிகளின் கொள்கை உறுதி கட்டுப்பாடு ஆகியவைபற்றி இக்கூட்டம் அறிந்திருந்தவற்றை இம்மியளவு என்றாலும் மீளாய்வு செய்திருந்தால் இப்படி உளறாது.

இது தொடர்பாக ‘tamilnation.org’ இணையத் தளத்தில் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது. தலைவர் இறந்து விட்டார். புலிகள் அமைப்பு கலைக்கப் பட்டு விட்டது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழரின் தமிழீழத் தாயக நனவும் மறைந்து விடுமா என்றால், இல்லை அது திரும்பவும் எழும், புதிய போரும் தொடங்கும் புதிய போர் நிறுத்த ஏற்பாடும் ஏற்படும். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சமாதான சூழலாகக் கொள்ளும்.. (Comment by tamilnation.org “..But imagine it happens: Killinochchi is flattened, Mr P is dead, LTTE dissolved. Will the Tamil dream of a Tamil Eelam die? Of course not. It will be revived, and new cycles of violence will occur. And probably new CFAs. And possibly the same mistake, confusing ceasefire with peace, using it as a sleeping pillow to do nothing…” Conflict Resolution in Tamil Eelam – Sri Lanka: the Norwegian Initiative- Professor Johan Galtung)

நாம் இப்போது என்னத்தைப் பெற்றுவிட்டோம் அமைதி காக்க. நல்லாட்சி என்று பெயர்பெற்ற இன்றைய அரசு பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் விடயத்திலேயே திக்குமுக்கு நிலையில் உள்ளது. 30 ஆண்டுகள் சிங்களக் குடியேற்றம் தடைப்பட்ட கவலை வேறு அவர்களுக்கு.

எம் இஸ்லாமியச் சகோதரர்களை 25 ஆண்டுகளக்கு முன்பு வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறுதான். ஆனால் அது எந்தச் சூழலில்நடந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாது கனவான்கள் உருவில் தமிழ் அரசியலுள் புகுந்த தசரதனின் அமைச்சர் போன்றோர்நிகழ்வைத் திசைதிருப்பி, அதைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்த எம்மை எல்லாம் வெட்கப்படச் சொல்லுகிறார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராளிகÛக் கொச்சைப்படுத்தும் இவர்கள் போன்ற கயவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாது போவார்கள். தமிழ் மக்கள் போராட்டம் தொடரத்தான் போகிறது. தவறுகள் திரும்ப நிகழாது தடுக்கும் நோக்கில் மட்டும் விமர் சிக்கலாம்.

மாவீரர்களை உள்ளத்தின் ஆழத்தில் பதியவைத்து செயல்படல் அவசியம். ஆதனால்தான் நவம்பர் 27 ஐ, உலகெங்குமுள்ள தமிழ்பற்றாளர்களாகிய நாம், எம் உள்ளத்தில் உறைந்திருக்கும் மாவீரர்களுக்கு, அகவணக்கம் செலுத்துகின்றோம். எம் இனத்தை துச்சமாக மதித்து, எம் தாயகத்திலேயே எம்மை சிறுபான்மையினராக்கி பேரினவாதத்தின் கொடூரப் பற்களால் இன்னல் தந்து அவமானப்படுத்த எத்தனித்த கயவர்களின் செயல்கண்டு தரியாதுதங்கள் அரிய உயிர்களையே துச்சமாக கருதி கடும் சீற்றத்துடன் களம் இறங்கிய போராளிகள் அல்லவோ அவர்கள். அவர்கள் இலட்சியம் அவர்களை வழி நடத்திய தலைவனின் ஆணையின்படி செயற்பட்டு எம் இனத்தின் மானம் காத்தலே. அவர்கள் இலட்சியம் நிறைவேறுமுன்பே உலகின் வல்லாதிக்கம் ஒன்றுதிரண்டு அந்த இளம் தளிர்களின் எழுச்சியை செயல் குன்றச் செய்துவிட்டது.

நாம் இவ்வாறு அகத்தில் அவர்களை வைத்துச் செயற்படத் தவறும் பட்சத்தில் நடந்த சிறு தவறுகளைக்கூட பூதாகரப் படுத்தி தமிழீழக் கனவை மழுங்கடிக்க வைக்க எத்தனையோ கோடரிக் காம்பாகச் செயற்படுபவர்களும் அபிவிருத்தி, சகவாழ்வு போன்ற பதங்களைக் கையாளும் கனவான்களும் உள்ளனர். போராட்டம் அது காலத்தின் கட்டாயம் என்று கூறுவதுநாம் எவ்வளவுக்கு விடுதலையில் அக்கறை வைத்துள்ளோம் என்பதை வைத்தே பொருந்தும். வரலாறு எப்பவுமே தேவையற்று ஒன்றைச்செய்யாது.

இங்குள்ள பலருடன் பேசியிருக்கின்றேன். அநேகரின் அபிப்பிராயம், எல்லாம் முடிந்துவிட்டது என்பதுதான். எங்களுக்கோ எந்த உரிமையும் கிடைக்கவில்லை. உள்ள உரிமைகளையும் படிப்படியாகப் பறித்து சிங்களவர்களை தமிழ் பிரதேசங்களிற் குடியமர்த்தி விகிதாசாரத்தில் தமிழர்கள் கூடிய பிரதேசம் என்று ஒன்று இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரலுடன்அரசு செயல்படுவது கண்கூடு. இந்த நிலையில் எல்லாம் முடிந்துவிட்டது என்றால் தமிழர் பிரதேசமற்ற ஒரு இனமாக இலங்கையில் வாழவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. உண்மை அப்படி அமையாது. இந்தச் சூழல் தொடருமாயின் அது நிச்சயம் இன்னும் பல போராளிகளை எதிர்காலத்தில் உருவாக்கியே தீரும். அடுத்த தலைமுறைக்கு இந்தச் சுமையை விடக்கூடாது என்று செயற்பட்ட நல் உள்ளங்களைதான் இப்போது மாவீரர்களாய் நினைவு கூரும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதே. இந்தத் தலைமுறையின் வீர உள்ளங்கள் வீரமரணம் அடைந்தாலும் வருங்காலச்சந்ததி அப்படி இருக்கப் போவதில்லை. என்னசெய்வது உண்மையான நாட்டுப்பற்று என்பதுதங்களை அர்பணித்து நாட்டின்மேல் வைக்கும் பற்றுத்தானே. அதுவும் பெரும்பான்மை இனத்தின் கையில் ஆட்சி போகும் தன்மையில் உருவான, அரசியல் முதிர்ச்சி அற்ற இலங்கையின்அரசியல் அமைப்பில், பதவிக்காக அரசியல்வாதிகள் பெரிய நாட்டுப் பற்றாளர்கள் போல் நடிப்பார்கள்.

அதற்கமையச் செயற்படுவார்கள். ஆகையால் எந்த அரசாங்கம் வந்தாலும் தங்கள் பதவியைக் காப்பாற்ற இனவாதம் பேசத்தான் போகின்றது. வாசுதேவா போன்ற சிலர் பேச்சளவில் மட்டும் எமக்காக சிறிது பேசினார்கள், இன்று முதல் தர இனவாதியாக வாசுதேவாவே மாறிவிட்டார் எமக்காகக் குரல் கொடுக்க ஆட்சி அதிகாரம் கொண்ட நீதி நியாயம் கொண்டஅண்டை நாடுகளும் இல்லை. இந்தியா இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆகையால் உரிமை வேண்டுமென்றால் எம்மினம் போராடியே தீரவேண்டும். உலகின் அரசியல் மாற்றங்கள் அனுகூலமாக மாறினால் எமது அழிவுகள் குறையுமே அன்றி போராட்டம் தவிர்ந்த இன விடுதலை இல்லை.