எமது பிரச்சனைகளை பரப்புரை செய்யவேண்டியது மிகமுக்கியமானதொன்று. அதிலும் எமது பிரச்சனையை தெரியாதவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது அவசியமானதொன்று. இங்கு யார் பார்வையாளர் என்பது முக்கியமானதொன்று. முன்பொருமுறை நலன்புரி அமைப்பொன்று எயிட்ஸ் நோய் பற்றியதமிழர்களுக்கான கூட்டம் ஒன்று நடாத்தியது.அக்கூட்டத்தில் மிகவும் அக்கறையோடு அந்நோய்பற்றி விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் பார்வையாளர்களில் 80 விகிதமானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், மற்றையவர்கள் வைத்தியத்துறை சார்ந்தவர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்தார்கள்.சில விடயங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ கொல்லர் தெருவில் ஊசிவிப்பது போல,செய்ய வேண்டும் என்பதற்காக செய்வது போலச் செய்து வருகின்றோம். இதனால் யாருக்கும் பிரயோசனம் இல்லை. இதைச் செய்தோம், இன்னார் செய்தார்கள் என்று பதிவு செய்யப்படுவதைத்தவிர. மனிதவலுவும், பொருளாதாரவலுவும் குன்றியுள்ள இக்காலப்பகுதியில் மிக கவனமாக குறைந்த வளத்தைக் கொண்டு கூடியபலன் பெறுவது இன்றியமையாதது.
இதைவிடக் கொடுமையானதொன்று, அதை பாலா அண்ணாவும் நகைச்சுவை கலந்த மனவருத்தத்தோடு ஒருமுறை குறிப்பிட்டார். அதாவது “இவங்களை லொபி பண்ண என்று விட்டால் இவங்கள் கொஞ்சம் தலையெடுத்தவுடன், அவங்களுடைய சொல்லக் கேட்டுக்கொண்டு வந்து, எங்களை லொபி பண்ண வெளிக்கிடுகிறான்கள்” இப்பிடி தீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பவர்கள் எத்தனை பேர்!
இப்பொழுது கூட “நாங்கள் சர்வதேசத்தை பரப்புரை செய்து, மிகவும் கடினமாக உழைத்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்,அதில் பல குறைகள் இருந்தாலும் `do not rock the boat’ என்ற பாங்கில் மக்களை அமைதியாக இருக்கும் படி, எமக்கு அவர்கள் சொன்னதைஅப்படியே உள்வாங்கி வந்து, இங்கு ஒப்புவிக்கிறார்கள். எம்மவர்கள் எங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பரப்புரை செய்கிறார்களா? அல்லது அவர்களின் முன்வைக்கும் தீர்வை எம்மை ஏற்கும் படி, எம்மவர்களே எமக்கே பரப்புரைசெய்கிறார்களா? நாங்கள் எவ்வளவோ இழந்து விட்டோம், இனி இழப்பதற்கென்று ஒன்றுமே பெரிதாக இல்லை. இழந்ததை மீட்பதைத் தவிர.
வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை அகற்றுகிறார்களா, இல்லை. சரி குறைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இராணும் ஒருபுறம், சி.ஐ.டிகள் எல்லாப்புறமும் என அங்குள்ள மக்கள் நித்திய சோதனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிலமீள் கையளிப்பு, கைதிகள் விடுதலை எல்லாம் மிகவும் மந்தகதியிலேயே நடக்கின்றது. ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள், இன்னும் சிலர் 15,20 வருடங்கள் என சிறை கம்பிகளுக்கு பின்னால்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இலவுகாத்த கிளி போல அவர் வந்து பிரச்சனையைத் தீர்ப்பார், இவர் எங்களைப்பற்றிபேசிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
காலத்திற்கு காலம் தமிழ் பிரதேசங்களில் மனிதப்புதைகுழிகளையும், பாழடைந்த கிணறுகளில் உடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உலகத்திலே காணாமல் போனவர்கள் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் முதலாது இடத்தை பிடித்துவிடும் சாத்தியமும் உள்ளது. குடும்ப உறவுகள்இருக்கின்றார்களா? இல்லையா? என்று எதுவித முடிவும் இல்லாத நிலையில், எதிர்பார்ப்புகள், ஏங்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தான் இந்த அரசியல் தீர்வு காணுமா?இனி தருவதை வேண்டிக்கொண்டு மௌனமாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களே வீதிக்கு இறங்கி மழையையும், வெய்யிலையும் பார்க்காது போராடும்போது, எமது பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களுக்கு விளங்கவேண்டும் தமக்களிக்கப்பட்ட கடமையோ, தாங்கள் முன்வந்து ஏற்றுக்கொண்ட கடமையோ தீரவில்லை என்று.
இது போதாதென்று இப்போ இரகசிய தடுப்புமுகாங்களும், சித்திரவதைக் கூடங்களும் இருப்பதை சர்வதேசமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி இன்னும் எத்தனை வதைகூடங்களில் அங்கு எமது உறவுகள் தினமும் செத்துக்கொண்டிருக்கிறார்ளோ தெரியாது. இந்த நிலையில் எமது பரப்புரையை விடாது, எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரைதொடர்ந்து செய்வது முக்கியமானது. தொடர் போராட்டங்கள்தான் அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கும், நிரந்த தீர்வை நோக்கி பயணிக்க வழிவகுக்கும்.
பரப்புரையாளர்கள், தமிழ் அரசியல் வாதிகளை கட்சி கடந்து மக்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும். புலம் பெயர் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் எம் பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருக்காமல், சிங்கள அரசியல் தலைவர்வரும் போது கொடுக்கும் அதே அழுத்தத்தை, வேறு கோணத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கொடுத்து அவர்களையும் அவர்கள்வகிக்கும் பொறுப்புக்கு பதில் அளிக்க வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் மட்டும் ஏதாவது சாக்கு போக்குசொல்லி அங்கு தலையையும், இங்கு வாலையும் காட்டி இரு இடத்திலும் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வார்கள். அந்த நிலை மாற வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதோடு அது பற்றி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தின் போதும் கேள்வி கேட்க வேண்டும். அடுத்தமுறை வெளிநாட்டுக்கு வருவது என்றால் அவர்கள் ஒருதடவைக்கு இருதடவை யோசித்து பதிலோடு வரவேண்டும்.