வீரத் தெய்வங்களே வெளியே வருக….

91

கண்ணைப்பறிக்கும் மின்னல் வெட்டுக.
கருமோகங்கள் கட்டிப்புரள
இடியெழுக.
பூமிகுளிர மழைபொழிக.
கோபுரமணிகள் அதிர
குத்துவிளக்குகள் ஒளிர
கருவறைக் கதவுகள் திறந்து
தெய்வங்கள் தெருவிலிறங்குக.
தம்புரா
வீணை
மத்தளமேந்திய
சாந்தசொரூபங்கள் சன்னதிக்குள்ளே
தூங்கிக் கிடக்க.
வேலும்
வாளும்
சூலமும் ஏந்திய
வீரத்தெய்வங்கள் வெளியே வருக.
புழுதி எழுத்துப்போய்ச் சூரியனைத் திரையிட
கோபவிழிகள் குருதி நிறமாக
தண்டையும் சிலம்பும் சப்திக்க
சக்திகள் தாண்டவமாடுக.
ஊழிக்கூத்து இதுவென
உலகம் வேகமெடுத்துச் சுழல்க.
பகைவனுக்கருள் செய் பாடுவோர் வேண்டாம்
நாமார்க்கும் குடியல்லோம் நமனை ஆஞ்சோம்
பாடிய நாவுக்கரசரே வருக.
சகடை, தண்டிகை
சாமரம் யாவும் எழுக.
குடை
கொடி
ஆலவட்டம்
தீவெட்டி
வாகனக்கொம்பு
கொடிமரமெல்லாம் குதிக்க.
பூசையற்றுப் போனது திருக்கோயில்
நேரத்துக்கு உணவு யார் தருவார்?
விளக்கேற்ற யாருமற்ற போது
இருட்சிறைக்குள் ஏனிருத்தல் வேண்டும்?
Òபுனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லவும்
புத்தனார் தலை தத்தெனத் தத்தவும்Ó
செந்தமிழ்ப் பதிகம் பாடிய திருக்குரவர் யாவரும்
வந்தெம் இடர்களையக் கோளாறுபதிகம்
பாடுக.
அனந்த சயனத்திருக்கும்.
ஆதிமூலத்தின் கருடவாகனமே!
காற்றில் எழுக.
குண்டு வீசவரும்
யந்திரப் பறவையை குதறுக.
கூந்தல் கலைய கொற்றவை வருக
உன் கோயில் எரித்த கொடியவர் குருதியை
தலையிற் தடவி நீராடுக.
ஊருள் நாம் புகுவோம்
விளக்கேற்ற வீடு வாருவோம்
அதுவரை எண்ணை தண்ணீரற்று
எப்படியிருப்பீர்?
தெய்வப்பொருளெல்லாம்
பொய்யுரையெனவே
பேசவும் அறிவிலோம்
உண்மைப்பொருளென
உணரவும் தெளிவிலோம்
இருதலைக் கொள்ளியாய் ஞானம் கைவராது
எம்நாட்கள் கழிகின்றன.
உண்மைப்பொருளென உணர
ஒருவரம் தருக.

போரிடப்புறப்படுக…
வன்னிமண் இன்னொரு திருச்செந்தூராகட்டும்
சூரர் படையளிக்க
வேலாயுதம் எழுக.

– புதுவை இரத்தினதுரை