அண்மையில் சட்டன் மூத்தோர் வட்ட வழமை நிகழ்வில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. போரில் முன்பு உபயோகத்திலிருந்த உபகரணங்களை நாங்கள் சேகரித்து காட்சிப்படுத்துவதாக ஒரு நிறுவனத்தின் இரு இஸ்லாமிய பெண்கள் வந்து சில பொருட்களைக் காட்சிப்படுத்தினார்கள். குழல் புட்டு அவிக்கப் பயன்படுத்தப்படும் புட்டுக்குழல், இடியப்பத்தட்டு, நீத்துப்பெட்டி என்பன போன்ற சிலதே அவை. ஊரில் அன்று முதல் பேராசிரியர் ராகுபதிபோன்றவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது நினைவுக்கு வந்தது. ஆர்வமே மூலதனமாகக்கொண்டு இருபலம் இல்லாத நிலையிலும் அவர்களுடைய முயற்சி கந்தரோடை, உருத்திரபுரம், பல்லவராயன்கட்டு, விஸ்வமடு போன்ற பிரதேசங்களில் நிலத்துக்குக் கீழ் பண்டைய ராசதானியின் எச்சங்கள், மட்பாண்டங்கள், கருங்கல் செதுக்கிய சுடவங்கள் என பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அன்றைய உபகரணங்கள் என்று எண்ணியதும்அம்மம்மா தான் என் நினைவுக்கு முதலில் வந்தா.1989ஆம் ஆண்டு தன் 90 ஆம் வயதில் இறக்கும் வரை அம்மம்மா சேலையைத் தவிர வேறு எந்த உடையையும் அணிந்ததை நான் காணவில்லை. வெளியே செல்லும்போது விதவைக் கோலத்தில் சின்னக்கரை போட்ட வெள்ளைச் சீலை அணிந்து போவா. வீட்டில் இருக்கும் போது பச்சை அல்லது நீல நிறத்தில் மெல்லிய சருகை போட்ட லங்கா சீலை அணிந்திருப்பா. இவை பெரும் பாலும் நெசவுச் சேலைகள் தான். சேலை கட்டுவது வித்தியாசமானது தான். பின்புறம் மடித்த குஞ்சம் தொங்கும். அழகான கை வைத்த கழுத்து வரையான சட்டை. வாயில்வெற்றிலை சிவப்பு துலங்க அசையும் அழகும் அழகு.
மாரி காலத்தில் அவ்வப்போது புகையிலையைச் சுற்றி சுருட்டு புகைக்கின்ற பழக்கமும் இருந்தது. அம்மம்மா சுத்தசைவம். பழம் சோறு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, கூழ்,பனாட்டு என்று நாங்கள் அவவினுடைய கை வண்ணத்தில் தான் அவற்றைக் கண்டிருந்தோம். பாக்கு உரல் பாக்கு இடிப்பதற்கு தயாராக வைத்திருப்பா. இடிப்பதற்கு ஒரு பாக்குச் சாவி. வட்டமான பெரிய செம்பு வெற்றிலைத் தட்டம், ஈரச் சீலையில் சுற்றி காயாமல் இருக்க பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வெற்றிலை, சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு என்பன புகையிலைத் துண்டு,நொங்குப் பாக்குத் துண்டு என்பனவற்றோடு எந்தவேளையும் அவவின் கையில் இருக்கும். பாக்கு எந்த நேரமும்போடும் பழக்கம் இருந்தது. அம்மம்மாவின் சீதனப் பொருட்கள் என்று சொல்லிக் கொண்டு அந்த வீட்டில்பல உபயோகப் பொருட்களும் இருந்தது. வீட்டுக்குசினிக்குள் அம்மி, ஆட்டுக்கல் சம்பல் அரைக்க, குழம்புக்குகூட்டு அரைக்க என்று பயன்படுவதற்கு அந்த அம்மி, ஆட்டுக்கல் தான்.
குழல் புட்டுக்கு புட்டுக்குழல், நீத்துப்பெட்டி, இட்டலிச்சட்டி, தோசைக்கல், குண்டுத்தோசைச் சட்டி, திருவலகை அவ்வப்போது அப்பம் சுடப்பயன்படும் கறுத்த பெரிய சட்டிகள் எல்லாம் குசினிக்கு அடுத்த களஞ்சிய அறையில் இருக்கும். களஞ்சிய அறையில் அம்மம்மாவின் மரப்பெட்டகமும் இருந்தது. தட்டுகள், லாட்சிகள் கொண்ட பெரிய மரப்பெட்டி அது. அம்மம்மாவின் உடுப்புகள், நகைகள், கொட்டைப்பெட்டி எல்லாம் அந்தப் பெட்டகத்துக்குள் தான்இருக்கும். அந்தக் காலங்களில் பெரிய அலங்கார அமைப்போடு கூடிய அலுமாரிகளும் அந்தக் களஞ்சிய அறையில்இருந்தது. முக்கிய உபயோகப் பாத்திரங்கள் வைக்கின்ற அலுமாரியாக அது பயன்பட்டது. அந்தக் களஞ்சிய அறையில் குஞ்சுப் பெட்டி, குஞ்சுக் கடகம் என்று வர்ண பனை ஓலையில் செய்த ஓலைப் பெட்டிகளும் இருக்கும்.
களஞ்சிய அறையிலிருக்கும் தயிர் கடையும் மத்து, தயிர்ச்சட்டி என்பன ஒவ்வொரு நாள் காலையிலும் மோரைஉருவாக்கும். காலையிலேயே பழம்சோற்று தண்ணீரோடு ஊறுகாயோடு சேர்த்துத் தருகின்ற பதநீர் கோடை காலங்களில் குடிக்க அமிர்தமாக இருக்கும். இவ்வாறாக வெளி விறாந்தையில் அம்மி, ஆட்டுக் குழவி என்பன திருகை எல்லாம் இருந்தது. இட்டலி, தோசை, வடை என்றுஉழுந்தாட்ட பயன்படுவது அந்த ஆட்டுக்கல் தான். ஆட்டுக்கல்லில் அரைபட்டு கொண்டிருக்கும் மா வெளியே தள்ளஅவற்றை அம்மா கையால் உள்ளே தள்ளி மீண்டும் அரைபட செய்து கொண்டிருக்க நாங்கள் எதிர்ப்புறம் பலகையில் இருந்து குழவியால் உருட்டி உருட்டி அம்மா அரைக்க உதவி செய்வோம்.
திருகை என்பது குரக்கன், உழுந்து போன்ற தானியங்களை துÖளாக பவுடர் போல அரைக்க பயன்படுவது. மேலே இருக்கும் துவாரத்தின் வழியாக தானியங்களை சிறிதுசிறிதாக போட்டு கை பிடியால் ஆட்டி ஆட்டி அவற்றை மாவாக்கி பயன்படுகிறது திருகை. இந்த திருகையை இழுத்து அரைப்பது என்பது சிரமமான வேலை தான். தோட்டத்தில் அறுவடையாகும் குரக்கன் கதிர்களை போட்டு அடிப்பதற்கும் பெரிய கதிர்பாய் பயன்படும். சுருட்டிக் கட்டியபடி எங்கள் தலைவாசல் தாழ்வார முகட்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பது இன்றும் நினைவில் நிற்கிறது.
முற்றத்தில் அரிசி, நனையப் போட்டு இடிப்பதற்கும் மிளகாய் இடிப்பதற்கும் பயன்படும் உரல் உலக்கை உருட்டிஓரமாக தள்ளப்பட்டிருக்கும். கொட்டு உரல் என்றும்ஒன்று இருக்கும் அதனுடைய துவாரம் பெரிதாக இருக்கும். சரக்குச் சாமான்கள், மிளகாய் அடிக்கட்டைகள் இந்தக் கொட்டு உரலில் தான் இடிக்கப்படும். உரலில் மீதமுறும் மாவைக் கொறிக்க ஓடித்திரியும் அணில் கூட்டம்,மாக் குறுனிகளை உண்ண வரும் புலுனிக் கூட்டம், அடிக்கடி வீட்டுக்குள் வந்து பீச்சும் கோழிகள் அவற்றைக் கலைக்கதயாராக இருக்கும் தடி. கோழிப் பீயை அள்ளி எறிய தயாராக ஒரு புறம் இருக்கும் பொச்சு என அந்த பழைய வீட்டின்ஞாபகங்கள் ஒவ்வொன்றாக வந்த வண்ணம் உள்ளது.
வளவில் தேங்காய் உரிக்கத் தயாராக இருக்கின்ற அலவாங்கு எந்த நேரமும் குத்தி நிற்கும். பெட்டி, கடகம் இழைக்கத் தயாராக இருக்கும் ஓலைச் சார், காம்புச் சத்தகம், மாங்காய் புடுங்கப் பயன்படும் மாங்காய்ப் பட்டை,குழை புடுங்கப் பயன்படும் கொக்கைத்தடி, கொக்கைச்சத்தகம் என்றெல்லாம் வெளி ஆட்டுக் கொட்டிலுக்குள் அடக்கம் பெறும். மச்ச உணவுகளுக்கு பீங்கான் கோப்பை,மற்ற உணவுகளுக்கு அலுமினியக் கோப்பை, கோப்பி குடி செப்பு மூக்குப் பேணி என அந்த நாள் பாத்திரங்களும் வித்தியாசங்கள் தான். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஊரில் பயன்பாட்டில் இருந்தன.
நாகரீகம் முற்றாத, விஞ்ஞானம் வளராத அந்தக் காலங்களில் அவற்றின் உபயோகங்கள் தனியானதும், சுகாதாரமானதும் கூட. அந்தப் பொருட்களைப் பேணிப் பாதுகாப்பதும், காட்சிப்படுத்துவதும் கூட எதிர்காலச் சந்ததியினர் தங்கள் முதாதையர்கள் எப்படி எளிமையோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டும் பொருட்களாக இருக்கும். அந்த வகையில் இவற்றைச் சேமிக்க, பாதுகாக்க, காட்சிப் பொருட்களாக்க ஏதாவது நிறுவனங்கள் முன்வந்தால் அது சரித்திரத்தை நிலைப்படுத்த சேவையாக அமையும்.