உலகிலேயே மிகவும் செல்வந்தமான தீவிரவாத அமைப்பாக தற்போது ஐ எஸ் அமைப்பு இருக்கின்றது. ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பு இலாபத் திறன் மிக்க எரிபொருள் கிணறுகளைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் வருமானத்தில் பெரும்பாலானவை இந்த எரிபொருள் கிணறுகளில் இருந்து கிடைக்கின்றன. சிரியாவின் அரைப் பங்கு நிலப்பரப்பையும் ஈராக்கின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பையும் ஐ எஸ் அமைப்பு கைப்பற்றி வைத்துள்ளது. தனது கட்டுப்பாடில் உள்ள பிரதேசங்களின் அனைத்துப் பொருளார நடவடிக்கைகளையும் ஐ எஸ் கட்டுப்படுத்தி நிர்வகிக்கின்றது. எங்கெங்கு பணம் வசூலிக்க முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் கை வைக்கின்றார்கள். ஐ எஸ் அமைப்பு தான் ஒரு அரசு நடத்து போல் காட்ட பல வழிகளில் செலவும் செய்கின்றது. நகர் துப்பரவாக்குதல், உணவுகள் விலை குறைவாகவிற்க நிதி உதவி வழங்குதல் போன்றவற்றைச் செய்கின்றது.
முன்னை இட்ட நிதி சவுதியிலிருந்தே
அரபு வசந்தம் சியா முஸ்லிம்களின் ஆட்சி நடக்கும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவிற்குப் பரவிய போதுசிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு சவுதி அரேபியாஉதவி செய்தது. சுனி முஸ்லிம் அரசர் ஆட்சிநடக்கும் சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாஹ்ரேனிற்குப் பரவிய போது ஈரான் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியது. ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது கடற்படைப் பிரிவு நிலை கொண்டிருக்கும் பாஹ்ரேன் ஈரான் வசமாவதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. சவுதி அரேபியா பாஹ்ரேனிற்குப் படை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது. சியா அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கான ஈரானின் வழங்கல்கள் சிரியாவூடாக நடப்பதால் அது கை நழுவிப் போவதை ஈரான் விரும்பாததால் அது தன் கட் என்னும் சிறப்புப் படையணியை சிரியாவிற்கு அனுப்பியது. சவுதி அரேபியப் படைகள் சிரியாவிற்குப் போய் தாக்குதல் செய்யுமளவிற்கு படைத்துறைச் சமநிலைசவுதி அரேபியாவிற்குச் சாதகமாக இருக்கவில்லை. இதனால் அது ஈராக்கிற்கான அல்கெய்தாவிற்கு நிதி உதவி வழங்கியது. ஈராக்கிற்கான அல் கெய்தா தன்னைப் 2014-ம் ஆண்டு ஈராக்கிற்கும் சிரியாவிற்குமான (Levant) இஸ்லாமிய அரசு என மாற்றிக் கொண்டது. அதற்கு சவுதி அரேபிய அரசு மட்டுமல்ல மற்றும் பல வளைகுடா நாடுகளும் நிதி உதவி செய்தன. இதுவே இஸ்லாமிய அரசின் முதல் நிதி மூலம். பல செல்வந்தர்களின் அன்பளிப்புக்களும் ஐ எஸ் அமைப்பினருக்கு இன்றுவரை கிடைக்கின்றன.
பின்னை அடித்த நிதி கொள்ளையினிலே
2014-ம் ஆண்டு ஜ×ன் மாதம் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கின் சுனி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மொசுல் நகரையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் அதிரடியாகவும் அதேவேளை இலகுவாகவும் கைப்பற்றினர். ஈராக்கிய அரச படையினர் தமது சீருடைகளைக் களைந்து எறிந்து விட்டு பொதுமக்கள் போல் உடை அணிந்து தமது படைக்கலன்களையும் கைவிட்டுத் தலைதெறிக்க ஓடினர். இதனால்அமெரிக்காவின் பல பாரவகைப் படைக்கலன்கள் மட்டுமல்ல அவர்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் உள்ள வங்கிகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் இருந்து 500 மில்லியன் பணத்தைக் கைப்பற்றினர். சிரிய அரச படைகளுக்கு எதிராகப் போராடக் கொடுத்த பணத்தையும் படைகளையும் பாவித்து அவர்கள் ஈராக்கில் தமது கைவரிசையைக் காட்டினர். ஈராக்கிய அரச படையினரின் வீடுகள், தளபாடங்கள், கதவுகள் வாகனங்கள் மற்றும் பல பொருட்களை ஐ எஸ் அமைப்பினர் விற்றுப் பணம் பெற்றனர்.
மசகு எண்ணைப் பிசகு தீர்த்தவர் பலர்
சிரியாவின் ஏறத்தாழ முழு எரிபொருள் உற்பத்தி நிலையங்களும் ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் எட்டு மின் உற்பத்தி நிலையங்களும் மூன்று நீர் மூலம் மின் உற்பத்தி நிலையங்களும் ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அத்துடன் சிரியாவின் மிகப் பெரிய எரிவாயு உற்பத்திநிலையமும் ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றை நிர்வகிக்கும் திறன்ஐ எஸ் அமைப்பினரிடம் உள்ளது. சிரிய அரசஊழியர்கள் ஐ எஸ் வசமுள்ள எரிபொருள் வளங்களைப் பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் ஐ எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயற்படுவதாக சிரிய அரசு சொல்கின்றது. ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பு சிரியாவில்நாள் ஒன்றிற்கு 44,000 பீப்பாய் எண்ணெய்யையும் இராக்கில் நாள் ஒன்றிற்கு 4,000 பீப்பாய்எண்ணெய்யையும் உற்பத்தி செய்கின்றது. மசகு எண்ணெய்க்கான சந்தை விலை 90அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும்போது ஐ எஸ் அமைப்பு தனது மசகு எண்ணெய்யை 20 முதல் 35 டொலர்களாக விற்பனை செய்தது. ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து சிரியஅரச படையினர், துருக்கியின் வர்த்தகர்கள், குர்திஷ் கடத்தல்காரர்கள் யூத வியாபாரிகள் எனப் பலதரப்பட்டவர்களும் மசகு எண்ணெய்யை வாங்குகின்றார்கள். குர்திஷ் கடத்தல்காரர்கள் மாதம் ஒன்றிற்கு ஐ எஸ் அமைப்பினரின் எரிபொருளைக் கடத்துவதன் மூலம் மூன்று இலட்சம் டொலர்கள் வரை சம்பாதிக்கின்றனர். ஐ எஸ்அமைப்பினரின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு அறுநூறு பார ஊர்திகள்துருக்கிக்கு செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க வரி இல்லாத அரசா?
பல பார ஊர்திகள் சிரிய அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளினூடாகத் துருக்கிக்குச் செல்வதிலும் பார்க்க ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளினூடாகச் செல்வதை விரும்புகின்றன. அப்படிச்செல்வது பாதுகாப்பானதும் இலகுவானதுமாகும். சிரியப் படையினரின் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் போது ஒவ்வொரு சாவடியிலும் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஐ எஸ் பகுதியினுள் ஓரிடத்தில் ஜபத் செலுத்தினால் போதும். ஈராக்கின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து துருக்கிக்குச் செல்லும் பார ஊர்திகளிடம் இருந்து அறவிடும் சுங்கவரி மூலம்ஐ எஸ் அமைப்பினர் ஆண்டுக்கு 140மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுகின்றனர்.
கடவுச் சீட்டு லாபாய்
ஐ எஸ் அமைப்பில் பல்வேறு நாடுகளில் இருந்து 15,000 போராளிகள் இணைந்துள்ளனர்.இவர்களின் கடவுட்சீட்டுக்களை ஐ எஸ் அமைப்பினர் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கடவுட்சீட்டு ஒன்றை விற்கு 15,000 டொலர்கள் வரை பெறலாம். இப்படிக் கடவுட்சீட்டுக்களை விற்பதன் மூலம் அந்தக் கடவுட்சீட்டுக்கு உரியவர்கள் தமது நாடுகளுக்கு மீண்டும் தப்பிச் செல்லாமல் தடுக்கவும் முடிந்தது.
விவசாயி ஐ.எஸ் விவசாயி
ஐ எஸ் அமைப்பினர் சிரியாவினதும் ஈராக்கினதும் விவசாய வளம் மிக்க நிலங்களையும்கைப்பற்றியுள்ளனர். அங்குள்ள விவசாயிகளிடமிருந்தும் ஜகத் அறவிடப்படுகின்றது. அத்துடன் விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை வாங்கி வைத்திருந்து விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்வதன் மூலமும் ஐ எஸ்அமைப்பினர் பணம் சம்பாதிக்கின்றார்கள்.
கடத்தலிலும் பணம் சம்பாதிக்கின்றார்களாம்
ஐ எஸ் அமைப்பினர் ஆட்கடத்தல் கப்பம் கோருதல் தமது ஆதிக்க நிலப்பரப்பில் மக்களிடம் வரிப்பணம் அறவிடுதல் போன்றவை மூலம் பணம் சம்பாதிக்கின்றார்கள் என பல மேற்கத்தைய ஊடகங்கள் அவ்வப்போது குற்றம் சுமத்துவதுண்டு. வரி ஏய்ப்புச் செய்பவர்களிடம் பெரும் தொகைப் பணம் தண்டமாகவும் அறவிடப்படுகின்றதாம். ஆனால் ஐ எஸ் போராளிகள் தாம் தமது மக்களிடமிருந்து ஜகத்பெறுவதாகச் சொல்கின்றது. ஜகத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு தானமாகக் கருதப்படுகின்றதாம். இது நபிகள் நாயகம் காலத்தில்இருந்தே கடைப்பிடிக்கப் படுகின்றதாம். ஐ எஸ்அமைப்பினர் பல ஜகத் சபைகளை அமைத்துள்ளனர். அரச ஊதியம் பெறுபவர்களிடம் இருந்துஐ எஸ் அமைப்பினரால் வசூலிக்கப்படும் வரி ஆண்டு ஒன்றிற்கு 20மில்லியன் டொலர்கள் எனவும் சொல்லப்படுகின்றது. ஈராக்கிய அரசு ஐ எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள அதன்நான்கு இலட்சம் ஊழியர்களுக்கு இன்றும்வேதனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் பலருக்கு வெளி நாடுகளில் இருந்து அவர்களின் குடும்பத்தினர் பணம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடமிருந்தும் ஜகத் பெறப்படுகின்றது.
ஒபாமா இறுக்கி அடிக்கிறாராம்
2015 டிசம்பர் 14-ம் திகதி ஐ எஸ் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர்பராக் ஒபாமா தாம் இப்போது ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலைக் கடுமைப் படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான அமெரிக்காவின் வான் தக்குதல்களுக்கு ஒரு நாளைக்கு $8.6 மில்லியன் டொலர்கள் செலவைச் செய்ய வேண்டி இருக்கின்றது. அமெரிக்கா கடந்த 18மாதங்களில் 24ரில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை சவுதி அரேபியாவிற்குமட்டும் விற்பனை செய்துள்ளது. நேட்டோப்படைகளின் வான் தாக்குதல் 78 நாட்களில் கொசோவேவை மிலோசோவிச்சின் படைகளிடமிருந்து மீட்டது. நேட்டோவின் வான் தாக்குதல்கள் ஒரு சில மாதங்களில் லிபியாவில் மும்மர் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்றிஅவரைக் கொல்ல வழி வகுத்தன. இவை இரண்டும் மரபுவழிப் படையினருக்கு எதிரான தாக்குதல்கள். அந்த வழி கரந்தடிப்படையணியைக் கொண்டதும் தனது உபாயங்களையும் நட்புக்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக சரிவருமா ?