பனாமா பத்திரக் கசிவும் பன்னாட்டு அரசியலும்

120

உலகெங்கும் உள்ள அமெரிக்காவின் தூதுவராலயங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை வெளிவிட்டது விக்கிலீக்ஸ் என்னும் பெயரில் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்க உளவுத்துறைக்காகப் பணிபுரிந்த எட்வேர்ட் ஸ்நோடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினதும் உளவுத் துறையினதும் பல இரகசியங்களை அம்பலப்படுத்தினார். இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு உலக வரலாற்றில் என்றுமில்லாத அளவு அதிகஅளவிலான இரகசியத் தகவல்களை மொஸ்ஸாக் பொன்சேக்கா அம்பலப்படுத்தியுள்ளார். பனாமா நாட்டில் இரகாசியமாக தமது நிதிகளை மறைத்து வைத்திருப்பவர்கள் வரி ஏய்ப்புச் செய்தவர்கள் பற்றிய தகவலகளை அவர் அம்பலப் படுத்தியுள்ளார். விளையாட்டுத் துறையினர், சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் எனப் பலதரப் பட்டவர்கள் சிக்கலில் சிக்க வைக்கப் பட்டுள்ளனர். 78 நாடுகளைச் சேர்ந்த அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் இந்த இரகசியங்களை வெளிக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தது. 7.6 ரில்லியன் அல்லது 7.6 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் வருமானவரிப் புகலிடங்களில் ஒளித்து வைக்கப் பட்டுள்ளன.

வருமான வரிப் புகலிடம்

பனாமா என்றால் புகையிலையும் கால்வாயும் தான் எம் நினைவிற்கு வரும். அது வருமானவரிப் புகலிடமாக இருப்பது பலருக்குத் தெரியாது. பலருக்கு வருமானவரிப் புகலிடம் என்றால் என்னவென்று தெரியாது. ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனை வரி போன்றவை அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர் கொடுக்கத் தேவையில்லை, தங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை. பனாமாவின் வாங்கிகள் தகவல்களை வெளியிட்டால் அது ஒருஇலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதண்டப் பணத்தை பனாமிய அரசுக்குச் செலுத்த வேண்டும். பொருளாதாரத் தடைகளில் இருந்துதப்ப முயற்ச்சிப்பவர்களும் ஊழல் மூலம்பெரும் நிதி பெற்றவர்களும் வரி ஏய்ப்புச் செய்பவர்களும் விவாக இரத்துக் கோரும் மனைவியிடமிருந்து சொத்தை மறைப்பவர்களும், சட்ட விரோத நிதியை )அதில் பெரும்பாலானவை போதைப் பொருள் விற்பனையால் பெற்றவையாக இருக்கும்) மாற்றீடு செய்ய அல்லது முதலீடு செய்ய முயல்பவர்களும் வருமானவரிப் புகலிடத்தைப் பெரிதும் விரும்புகின்றார்கள். பனாமா உலகின் மிகப் பழமையான வருமானவரிப் புகலிடமாகும். 1919-ம் ஆண்டில் இருந்தே பனாமாவில் பல நிறுவனங்களும் தனிநபர்களும் தமது கப்பல்களைப் பதிவு செய்யும் முறை உருவாக்கப்பட்டது. பனாமாக் கொடியுடன் உலகக் கடலெங்கும் வலம் வரும் கப்பல்களால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பிற்கு வழிவகுக்கப் பட்டது. 1927-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் பனாமாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வரி தவிர்ப்பிற்காக தம்மைப் பதிவு செய்யும் முறைமையையும் சட்டங்களயையும் உருவாக்குவதற்க்கு உதவி செய்தன. 1970-ம் ஆண்டு பனாமா அரசு இரகசியக் காப்புச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனால்உலகில் நிதி தொடர்பான இரகசியம் பேணும் நாடுகளின் பட்டியலில் பனாமா 11-ம் இடத்தில் இருக்கின்றது. இப்பட்டியலில் சுவிஸ் முதலாம் இடத்தில் இருக்கின்றது. சர்வாதிகாரி மானுவேல் நொரியேகாவின் ஆட்சியில் உலகின் பெரும் மோசடிக்காரர்களின் சொர்க்கமாக பனாமா உருவானது.

panama-papers-evasion-into-month-journalists-probe_438f3376-fb0a-11e5-89a7-e0427befb59e

பணச்சலவையும் வருமானவரிப் புகலிடமும்.

உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00 இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாகஉலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் நிதிச் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் மொஸ்ஸாக் பொன்சேக்காவினுடையது. அதுதான் இப்போது பெருமளவு இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 11.5மில்லியன் பத்திரங்கள், 2000,000இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான தகவல்கள் மொஸ்ஸாக் பொன்சேக்காவினால் வெளியிடப்பட்டுள்ளன. 1977-ம்ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டின் இறுதிவரை இத்தகவல்கள் செல்கின்றன. இதில் இடைத் தரகர்களாகச் செயற்பட்ட 14,000 ஆலோசனை நிறுவனங்களின் பெயர்களும் அம்பலமாகியுள்ளன.

அம்பலத்திற்கு வந்தோர்

பனாமாப் பத்திரக் கசிவினால் இதுவரை அம்பலத்துக்கு வந்த பெயர்கள் ஐஸ்லாந்தில் பதவியில் இருந்து விலகிய தலைமை அமைச்சர் சிக்மண்டுர் டேவிட் குன்லக்சன், உலக காற்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் ஜியன்னி இன்பன்ரினோ, உக்ரேனின் சொக்லட் அரசர் பெற்றோ பொரசெங்கோ, பிரித்தானியத் தலைமை அமைச்சரின் (காலம் சென்ற) தந்தை இயன் கமரூன், எ.எஸ்.பி.சி உட்படப் பலமுன்னணி வங்கிகள், அமெரிக்காவின் தடையையும் மீறி சிரிய அதிபர் அசத்திற்கு எரி பொருள் வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள், சீன அதிபரின் மனைவியின் உடன்பிறப்பு உட்படப் பலமுன்னணித் தலைகள், காற்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி, இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தியத் தலைமை அமைச்சருக்கு நெருக்கமான செல்வந்தக் குடும்பமான அதானி குடும்பத்தில் ஒருவர், ஹொங் கொங் நடிகர் ஜக்கிசான். மேலும் கிளறப்படும் போது இலங்கை, இந்தியா உட்படப் பல நாடுகளின் அரசியல்வாதிகளின் பெயர்களும் வெளிவரும். இந்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி மொஸ்ஸோ பொன்சேக்காவின் அம்பலப் படுத்தல் தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் விசாரணை என்ற சொல்லுக்கு இழுத்தடித்தல் எனலாம். சிரிய அதிபர் பஷார்அல் அசாத்தினது பெயரும் உண்டு.உலகின்முன்னணி செல்வந்தரான இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் பெயர் இல்லை. ஆனால்அவரது நெருங்கிய நண்பரான ஒரு பெரும் செல்வந்தரின் பெயர் வெளி வந்துள்ளது.

சீனா

ஊழல் ஒழிப்பிற்கு எதிராகப் குரல் கொடுத்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மைத்துனரின் பெயரும் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத் துறை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என அதை விபரித்தது. ஜி ஜின்பிங் பதவிக்கு வர முன்னர் சீனப் பொதுவுடமைக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தாம் ஊழல் மூலம்சம்பாதித்த நிதியை பெருமளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்தனர். சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சரின் சொத்து விபரங்களை வெளிவிட்ட அமெரிக்க ஊடகமான நியூயோர்க் ரைம்ஸ்ஸின் இணையத்தளம் இணையவெளி ஊடுருவிகளால் முடக்கப்பட்டடது. அதுசீனாவின் பழிவாங்கல் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இப்போது பனாமா பத்திரங்களின் அம்பலப் படுத்தல் தொடர்பான எல்லாத் தகவல்களும் சீன இணைய வெளியில் தடைசெய்யப் பட்டுள்ளன. சீனத் தேடு பொறிகள்பனாமா என்ற சொல்லுடைய எல்லாத் தகவல்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது. அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியம் மெஸ்ஸோ பொன்சேக்காவிடமிருந்து திரட்டிய தகவல்களை ஜேர்மனிய ஊடகம் ஒன்றிற்குப் பகுதி பகுதியாக அனுப்பியது. ஆனால் அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியத்தை உருவாக்கி அதன் பின்னால் நின்று செயற்படுவது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பொதுத்துறை நேர்மைக்கான நிலையம் என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்கா தன்னார்வத் தொண்டு அமைப்பு ஆகிய இரண்டு பதங்களையும் சேர்த்துப் பார்த்தால் வருவது அமெரிக்காவின் உளவுச் சதி என்பதாகும். இதனால் பனாமாப் பத்திரிகைப் பகிரங்கத்தின்பின்னால் அமெரிக்க உலக ஆதிக்கச் சதி இருக்கின்றதா என்ற ஐயம் எழுவது இயல்பே. 2008-ம்ஆண்டு உருவான உலகப் பொருளாதார் நெருக்கடியின் பின்னர் பல மேற்கு நாட்டு அரசுகள் வரி ஏய்ப்புச் செய்வோரால் தமது வரிவருமானங்களை இழந்து கொண்டிருக்கின்றன. மேலும் அண்மைக்காலங்களாக உலக அரங்கில் அமெரிக்காவிற்குத் தலை குனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோருக்கு வைத்த பொறியில் பலரும் மாட்டிக் கொண்டனரா?