A Gun & A Ring | புலம்பெயர் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்

1964

நாளை சனிக்கிழமை லண்டனில் திரையிடப்படவிருக்கிற A Gun & A Ring என்ற புலம்பெயர் தமிழ்த்திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்காக ஒவியர் கருணா வின்சென்ற் எழுதிய குறிப்பிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.

ஈழத்தில் பல விடுதலை இயக்கங்கள் இருந்த காலப்பகுதி. ஏதோ ஓர் இயக்கத்தின் முகாமிலிருக்கும் விசாரணைக் கூடம். மண்டியிட்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு விசாரணை நடக்கிறது. விசாரணையில் அவன் பல பெயர்களைக் கூறுகிறான். அதன் பலனாக விடுதலை செய்யப்படும் அவன் வந்தடைகிற நாடு கனடா. இப்படித்தான் துப்பாக்கியும் கணையாழியும் (A Gun & A Ring ) படம் ஆரம்பிக்கிறது.

தனது பணியை நேசிக்கும் ஒரு புலனாய்வு அதிகாரி, போரை மறந்து அமைதியாக வாழ முனையும் ஓர் உணவக ஊழியன், போரில் இருந்து மீண்டு கனடாவுக்கு வரும் ஒரு பெண்,தினமும் சுதந்திரமாகப் பூங்காவில் விளையாடச் செல்லும் ஒரு சிறுமி, தந்தையின் நிர்பந்தத்தில் அல்லாடும் ஓர் இளைஞன், மனைவி காதலனுடன் சென்றுவிட விரக்தியில் வாழும் ஒருவன். இப்படி ஆறு பேரின் வாழ்க்கையில் இரண்டு வாரங்களில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை. ஆறு வெவ்வேறு கதைகள் ஒரு சிலந்திவலைபோல பல்வேறு புள்ளிகளால் இணைக்கப்படுகின்றன. கணையாழியும் துப்பாக்கியும்இந்தக் கதைகளினூடே பயணிக்கின்றன. சிலகதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்றன. சில கதைகள் தொடர்பின்றி இருக்கின்றன. ஆரம்பத்தில் முற்றிலும் புதிர் நிறைந்ததாக இருக்கும் கதைகளின் தொடர்புகள், ஒவ்வொன்றாக அவிழ்கின்றன. ஒவ்வொரு புதிரும் அவிழும் போதும் ஒவ்வொரு செய்திசொல்லப்படுகிறது. இறுதியில் படம் நிறைவு பெறும்போது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நகரில் வாழ்க்கை எவ்வாறு தவிர்க்க முடியாதவாறு ஒவ்வொருவருடனும் பிணைந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.

போர் நிகழும் ஒரு சமூகத்தின் வாழ்வு கற்பனை செய்ய முடியாத வலியுடன் கூடியது.போர் முடிந்தது என்று சொன்னாலும் அந்தப்போரானது வாழ்க்கையை நிழல் போலத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் தாக்கங்கள் பல தளங்களில் நிகழும். போரிலிருந்து மீண்டு வந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கின்ற இடங்களிலெல்லாம் ‘போர்’ பற்றிப் பேசப்படுவதைப் பல தலைமுறைகளுக்குத் தவிர்க்க முடியாது. ஹ்ட்லரின் வதை முகாம்களில் ஒன்றான அவுஸ்விட்ச்சில் இருந்து உயிர்தப்பிப் பின்னர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய ப்றிமோ லீவி (Primo Levy) ஒருமுறை சொன்னது போல, “எதைப் பற்றி எழுதமுனைந்தாலும் இந்தக் கொடூர நினைவுகளைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை”. துப்பாக்கியும் கணையாழியும் நுணுக்கமாக நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

பல தமிழகத் திரைப்படங்களில் ஈழப்போர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றால் ஒரு குறித்த எல்லைகளுக்கப்பால் போகமுடிவதில்லை. போரின் பின்னணியிலிருந்து வந்திருக்கும் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அந்தச் சமூகத்தின் கதைகள் நூறாயிரம். ஆனால் உணர்வூற்றோடு புரிந்துகொள்ள வெளியிலிருக்கும் சமூகத்தால் பெருமளவுக்கு முடிவதில்லை. லெனினின்A Gun & A Ring திரைப்படத்தில் வரும் ஆறு கதைகளும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கும் மிகவும் புதியவை.

படத்தின் இறுதியில் நேர்த்தியான ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வன்னியாக இருந்தாலும் சரி, ஈராக்காக இருந்தாலும் சரி, சூடானாக இருந்தாலும் சரி போரின் பின்னணியிலிருந்து வரும் இருவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் விதம் வேறானது. சூடான் இனப்படுகொலையிலிருந்து தப்பித்துவரும் ஒருவருக்கு, ஈழப்போரிலிருந்து மீண்டு வரும் அந்தப் பெண் கூறுகிறாள்: ” நாங்கள் இருவரும் ஒன்று.” அந்தக் கதையுடனேயே படம் முடிகிறது. இதுதான் கனடியத் தமிழரான லெனின் எம். சிவம் எழுதி இயக்கிய A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் பதிவுசெய்யும் அழுத்தமான செய்தி.

A Gun & A Ring 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. இன்று முக்கியத்துவம் வாய்ந்த திரை விழாக்களில் ஒன்றாக ஷாங்காய்திரைப்பட விழா கருதப்படுகிறது. இதுவரை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் தங்கக்கிண்ண விருதுக்கு (Golden Goblet Award) போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாகஎந்தத் தமிழ்த் திரைப்படமும் தேர்வானதில்லை. இணையத்தில் தேடியதில் நான்கு இந்தியத் திரைப்படங்களே இதுவரை இந்தத் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டித் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது தெரிகிறது.

கடந்த வருடம் பிஜு இயக்கிய “ஆகாசத்திண்டே நிறம்” என்ற மலையாளப் படம் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது. அப்போது ஷாங்காய் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டியிடும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற அளவில் அது முக்கியத்துவமான செய்தியாக அமைந்தது.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 1993முதல் நடந்து வருகிறது. 2013ஆம் ஆண்டின்16வது விழாவில் தங்கக்கிண்ண விருதுப்போட்டிக்கு 112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து 1600க்கும் மேற்பட்ட படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 12 படங்களே போட்டிக்கான படங்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன.’A Gun & A Ring’ அவற்றில் ஒன்று.

‘A Gun & A Ring’ நகர்ப்புற நாடகம் என்கிற வகையைச் சேர்ந்த திரைப்படம் என்று லெனின் கூறுகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கில் வாழும் தமிழர்களுக்கு அருகிலேயே போர் உட்கார்ந்திருக்கிறது என்பதே கதையின் மையநாடி என்கிறார் அவர்.

திரைப்படத்தில் சுமார் ஐம்பது பேர் நடித்திருக்கின்றனர். பிரதியைத் தயார் செய்துஅதை நேர்த்தியாக்க லெனினுக்கு ஏறக்குறையஒரு வருடம் எடுத்திருக்கிறது. சுறுசுறுப்பான கனடா வாழ்வில் மிகவும் திட்டமிட்டு இரண்டேவாரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நிறைவுசெய்திருக்கிறார். படப்பிடிப்புக்குப் பிறகு தொகுப்பு, இசைச் சேர்க்கை போன்றவற்றுக்கு மேலும் ஒரு வருடம் எடுத்திருக்கிறது.

சந்தைப்படுத்துதலில் இருந்த சிரமங்களே ஒரு தமிழ்த் திரைப் படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கக் காரணம் என்று லெனின் கூறுகிறார். சந்தைப்படுத்துதலுக்காக மொழியை விட்டுக் கொடுப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை. தலைப்பு தமிழில் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

புலம்பெயர் திரைப்பட வரலாற்றில் வெளிவந்த ஒவ்வொரு திரைப் படமும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஏதோ ஒரு வகையில்பங்காற்றியிருப்பதாகவே லெனின் கூறுகின்றார். தான் எடுத்த ஒவ் வொரு திரைப்படங்களிலிருந்தும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறும் லெனின் இந்தத் திரைப்படத்திலும் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

‘A Gun & A Ring’ லேசுப்பட்ட சங்கதியல்ல. வரலாற்றுச் சாதனை. இனி புலம்பெயர் தமிழரின் கலை இலக்குகள் கூரையை நோக்கியல்ல, வானத்தை நோக்கியே அமையட்டும்.

கருணா வின்சென்ற்