ஆளுமையின் சிகரம் தளபதி கேணல் துரோணா்…

325

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய்வு நடவடிக்கையின் சிறந்த தளபதி கேணல் துரோணர்.

“தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி”

புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும்.
போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது.
காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான்.

விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர்.புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார்.
இவரின் செயல் திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர்.

அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது.
தனது பொறுப்பை சிரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார்.
கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார்.
போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார்.பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி.

இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம்.
எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர்.
மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர்.

தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும்.அந்த ஆள் என்ன செய்யிறது,எத்தனை என்று கவனிக்கிறது.அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம்.
ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி.

தமிழீழத்தின் வெளி புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது.எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலஓட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர்.

இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது.எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன்.

தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது.

விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன்.
எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன்.

13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார்.
தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக…

மாவீரர்களின் வீரவரலாறுகளோடு “ராஜ் ஈழம்”

“புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்”