அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது இறந்ததைக் கண்டித்து திங்கள் கிழமை ஏழாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன.
40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஃபிலடெல்ஃபியா போன்ற இடங்களில் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் பெப்பர் குண்டுகள் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பல நகரங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் சூறையாடப்பட்டன.
ஞாயிற்று கிழமையன்று, பாதுகாப்பு படையினர் 5000 பேர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 15 மகாணங்களிலும் வாஷிங்டன் டிசி யிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்கார்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனாதிபதிகள் தேவாலயம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் இப்போதுதான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது என பிபிசியின் நிக் பிரியண்ட் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன்னாள் வரை கொரோனா வைரஸால் காலியாக இருந்த சாலை தற்போது போராட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 75க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், “எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று தெரிவித்தார்.
கண்ணீர் மல்கப் பேசிய அவர், “பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்” என்றும் “கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்,” என்றும் தெரிவித்தார்.