இரசியப் படைகள் சிரியாவில் இருந்து கொண்டு இது நம்ம ஏரியா உள்ளே வராதே என அமெரிக்காவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்க, விளடிமீர் புட்டீன் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்க, தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் தமது ஆட்சியை இழந்த பின்னர் முதற்தடவையாக ஒரு மாகாணத் தலைநகரை அதிரடியாகக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றியது கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த குண்டூஸ் நகராகும். அங்கிருந்து ஆப்கானிஸ்த்தானின் பல பகுதிகளின் மீது அவர்களால் தாக்குதல் செய்ய முடியும். குண்டூஸ் நகரை மீளக்கைப்பற்ற அமெரிக்கப் படைகள் தலிபானகளுக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் செய்தனர். ஆனால் அவர்கள் ஒரு மருத்துவமனையில் குண்டுகளை வீசி 22 பேரைக் கொன்றதுடன் பலரைக் காயப் படுத்தியுள்ளனர். இதற்கு மனிதஉரிமைக்கழக ஆணையாளர் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இது ஒரு குற்றச் செயலாகக் கருதப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முதலில் தவறுதலாக நடந்த விபத்து என்ற அமெரிக்கா
கம்பள உற்பத்திக்குப் பெயர் போன ஆப்கானிஸ்த்தானின் குண்டூஸ் நகரில் எல்லைகளற்ற மருத்துவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்திய மருத்துவ மனையின் மீதே அமெரிக்கவிமானப் படையினர் துல்லியமாக தாக்கக் கூடிய குண்டுகளை வீசினர். முதலில் இது தவறுதலாக நடந்த விபத்து என்றது அமெரிக்கா. வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டதும் வலிமை மிக்க உணரிகளைக் கொண்டதுமான Lockheed AC-130 போர் விமானங்களில் இருந்து வீசிய குண்டுகளே மருத்துவமனையில் நோயாளர்களையும் ஊழியர்களையும் கொன்றது.
முதலில் பதக்ஸ்தான் மாகாணத்தின் வர்துஜ் மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து குண்டூஸ் மாகாணத்தின் மீது அதிரடித் தாக்குதல்களைச் செய்து அதைக்கைப்பற்றினர். அவர்களிடமிருந்து அதை மீளக் கைப்பற்ற ஆப்கானிய அரச படைகள் பெரும் முயற்ச்சி செய்கின்றன.
அமெரிக்கா வேண்டுமென்றே குண்டு வீசக் கூடியது
அமெரிக்கப் போர் விமானங்கள் 1999-ம் ஆண்டு மே மாதம் 7-ம் திகதி பெல்கிரேட் நகரில் உள்ள சீனத் தூதுவரகத்தின் மீது ஐந்து குண்டுகளை வீசி சீன அரசுறவியலாளர்களைக் கொன்றது. அதையும் அமெரிக்கா ஒரு தவறுதலாகநடந்த விபத்து என முதலில் தெரிவித்தது. சீனத்தூதுவரகத்திற்கு அண்மையில் உள்ள Yugoslav Federal Directorate for Supply and Procurement என்னும் கட்டிடத்தின் மீது நடத்தவிருந்த தாக்குதல் தவறிவிட்டது என்றது அமெரிக்கா. ஆனால் யூக்கோஸ்லாவியப் படைகளின் கட்டளைக் கட்டுப்பாட்டகம் இருந்த இடமெல்லாம் நேட்டோப் படைகள் அப்போது குண்டு வீசிக் கொண்டிருந்தன. அதனால் யூக்கோஸ்லாவியப் படைகள் தமது கட்டளைக் கட்டுப்பாட்டகத்தை சீனத் தூதுவரகத்திற்குள் மாற்றின என அப்போது இரகசியத் தகவல்கள் வந்தன. அமெரிக்கா இரகசியமாக தெரிவித்த ஆட்சேபனைக்கு சீனா செவிமடுக்காததால் அமெரிக்கா தெரிந்தே தாக்குதல் நடத்தியது எனப் பிரித்தானிய கார்டியன் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதை மூன்று நேட்டோ அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் அது செய்திவெளியிட்டது.
1. இத்தாலியின் நப்பிள்ஸில் இருந்து ஒரு விமானப் பறப்புக் கட்டுப்பாட்டாளர்.
2. மசடொனியாவில் இருந்து வானொலித் தொடர்புகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு உளவுத்துறை அதிகாரி.
3. பிரஸ்சல்ஸில் நேட்டோத் தலைமையகத்தில் இருந்த ஒரு அலுவலர்
ஆகியோர் அமெரிக்கா தெரிந்து கொண்டே சீனத் தூதுவரகத்தில் தாக்குதல் நடத்தியது என கார்டியனிடம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கானிஸ்த்தான் முறுகலின் வரலாற்றுப் பின்னணி
ஆப்கானிஸ்த்தானில் ஐக்கிய அமெரிக்கா 1978-ம் ஆண்டு நிர்மாணித்த மிக உயரமான தொலைத் தொடர்புக் கோபுரம் இரசியாவை உளவு பார்க்க உருவாக்கப் பட்டது எனச்சினமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானை 1979-ம் ஆண்டு ஆக்கிரமித்தது.சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிராகப் போர் புரிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட முஜாஹ்தீன் போராளிகள் பின்னர் தலிபான் என்றும் அல் கெய்தா என்றும் இரு பெரும்அமைப்புக்களாக உருவெடுத்தனர். பதினையாயிரம் படையினரை இழந்த பின்னர் 1988இல் சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறின. அதைத் தொடர்ந்து 1996-ம்ஆண்டுஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றிய தலிபான்கள் சோவியத்தால் பதவியில் அமர்த்தப்பட்ட முஹம்மட் நஜிபுல்லாவையும் அவரது சகோதரரையும் கொன்று கம்பத்தில் தொங்க விட்டனர்.ஆப்கானிஸ்த்தானில் பல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டே இருந்தன.தலிபான்கள் இஸ்லாமியச் சட்டங்களைக் கடுமையாக நிறைவேற்றியதுடன் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதிகரித்தனர். சீட்டாடுதல், கணனிகள், இணையத்தொடர்புகளையும் தடைசெய்தனர், மற்ற மதப்பெண்களையும் இஸ்லாமிய மத நெறிகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தனர்.
பாக்கிஸ்த்தானின் வாரிஜிஸ்த்தான் பிராந்தியத்திலும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் பல சதுர மைல்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்த்தானில் இருந்து செயற்படும் பின் லாடன் தலைமையிலான அல் கெய்தா இயக்கம் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தன. 1998இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் உள்ள அல் கெய்தா நிலைகள் மீது குண்டுகள் வீசியது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் திகதிஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்த மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்துஆப்கானிஸ்த்தானில் இருந்த பின் லாடானைக்தம்மிடம் கையளிக்கும் படி அமெரிக்கா வலியுறுத்தியது. பில் லாடன் தாக்குதல் செய்தார் என்ற சாட்சியமின்றி அவரைக் கையளிக்க முடியாது என தலிபான்கள் மறுத்தனர். 2001-ம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 6-ம் திகதி அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலிபான்கள் மீதுவிமானக் குண்டுத் தாக்குதல்கள் தொடுத்தன.வட கூட்டமைப்பு என்ற அமைப்பு பல இடங்களைத் தம் வசமாக்கின. ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றிய நேட்டோப்படைகள் 2009இல் அமெரிக்கா தனது அணுகுமுறைகளை மாற்றியது. அமெரிக்கப்படைகள் அதிகரிக்கப்பட்டன. ஆப்கானியர்களுக்கு படைப்பயிற்சி வழங்குவது அதிகரிக்கப்பட்டது. 2011இல் நேட்டோப்படைகளில் ஒன்றான டச்சுப்படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறினர்.2012இல் நேட்டோ நாடுகள் 2014இல் ஆப்கானில் இருந்து நேட்டோப்படைகள் வெளியேறும் என முடிவெடுத்தன. 2012 ஜனவரியில்தலிபான் அமைப்பினர் அமெரிக்காவுடனும் ஆப்கான் அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்ததுபாயில் தனது பணி மனையைத் திறக்க ஒப்புக்கொண்டது. 2012ஜ×லை ஆப்கானிற்கானடோக்கியோ நன்கொடை மாநாடு கூட்டப்பட்டது. அதில் ஆப்கானிற்கு 16பில்லியன்அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்றநிபந்தனியுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 2013யூனில் நேட்டோவிடமிருந்து ஆப்கான் படைகள் நாட்டின் பாதுகாப்புப்பொறுப்பை ஏற்றுக்கொண்டன. பின்னர்தலிபானுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சு வார்த்தைகளை நடத்த முயல்வது ஆப்கான் அரசை அதிருப்திக்குள்ளாக்கியது.
ஆப்கான் அரசின் மாகாணக் ஆளுநர்களின் மோசமான ஊழல் நிறைந்த ஆட்சி மக்கள் மத்தியில் தலிபான்களுக்கான ஆதரவை வளர்க்கின்றது. தலிபான் அமைப்பு அல் கெய்தாவுடனும் பாக்கிஸ்த்தானில் இருந்து செயற்படும் ஹக்கானி அமைப்பு, லக்சர் ஈ தொய்பா ஆகியஅமைப்புகளுடனும் இணைந்து செயற்படுகின்றது.அண்மையில் தலிபான் வெளியிட்ட காணொளியில் உலகப் புனிதப் போராளி அமைப்பான அல் கெய்தாவின் தலைவர் Dr.Ayman al Zawahiri எனப் புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தது. ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்த்தானில் தலையிடுவதை தலிபான் விரும்பவில்லை. ஆப்கானித்தானில் ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஈரான் தலிபானிற்கு ஆதரவு வழங்குகின்றது. தலிபானும் அல் கெய்தாவைப் போல் சுனி முஸ்லிம்கள் மீது குரோதம் காட்டுவதில்லை. இதனால் இவ்விரு அமைப்புக்களும் ஈரானின் ஆதரவைப் பெறுகின்றன.
மீண்டும் இரசியா உலக அரங்கில் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் அமெரிக்காவிற்கு எதிராக நிலை நாட்ட முயல்கையில் ஆப்கானிஸ்த்தான் அமெரிக்காவிற்கு மேலும்முக்கியத்துவம் பெறுகின்றது. அமெரிக்க அதிபர்பராக் ஒபாமா தனது 2016-ம் ஆண்டு இறுதியுடன் முடிவடையும் முன்னர் அமெரிக்கப் படைக்களை முற்றாக ஆப்கானிஸ்த்தானில் வெளியேற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் இருக்கின்றார். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் தலிபான்கள் அல்லது ஐ எஸ்அமைப்பினர் அதைக் கைப்பற்ற அங்கு மீண்டும் இரசியப் படைகளை அனுப்பி ஆக்கிரமிக்கலாம். ஆப்கானிஸ்தானில் உள்ளஅமெரிக்கப் படைகளின் தளபதி ஜோன் கம்பல்ஊடகவியலாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தானின் அரச படைகளின் வேண்டுதலின் பேரிலேயே தாம் குண்டூஸில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் துல்லியமாக குண்டு வீசக்கூடிய Lockheed AC-130 விமானத்தில் எப்படித்தவறு நடந்தது என்ற விபரத்தை ஜோன் கம்பல் தெரிவிக்காமல் விட்டது ஊடகவியலாளர்களை ஏமாற்றியது.
இறுதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பிற்கு தொலைபேசி மூலம் தனது மன்னிப்பைத் தெரிவித்தார் ஆனால் யாரையும் தண்டிப்பதாக அவர் சொல்லவில்லை.