அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்.

199

அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரில் இந்திய தமிழ் பூர்வீகம் கொண்டவர். இவர் அமெரிக்க அரசியல்வாதி மட்டுமின்றி, வழக்கறிஞரும் கூட. இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க மேலவையின் இளம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்க மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறந்தார். இவரது தாயார் சியாமளா கோபாலன், தந்தை டொனால்ட் ஜெ ஹாரிஸ். இந்த தம்பதிக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

கமலா ஹாரிஸின் தாயாரான சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் உயர் படிப்புக்காக 19 வயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திற்கு 1958 ஆம் ஆண்டு வந்தார். அங்கு படிப்பை வெற்றிகரமாக முடித்து டாக்டர் பட்டம் பெற்றார் மற்றும் புகழ்பெற்ற அமெரிக்க மார்பக புற்றுநோய் நிபுணர்.

கமலா ஹாரிஸின் தந்தையான டொனால்ட் ஜெ ஹாரிஸ் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். இவர் ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியாக பணி புரிந்தார்.

கமலா ஹாரிஸின் பெற்றோர்கள் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, பின் பிரிந்துவிட்டனர். அதன் பின் சியாமளா கோபாலன் தான் கமலா ஹாரிஸ் மற்றும் மாயா ஹாரிஸை தனியாக வளர்த்து ஆளாக்கினார்.

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவான கோபாலன் மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வாழ்ந்து வந்தார். இவரைப் பார்க்க சியாமளா அடிக்கடி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்து போவார். இப்படி தான் கமலா ஹாரிஸ்-க்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டது.

ஓக்லாந்தில் பிறந்த கமலா ஹாரிஸ் ஹோவர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றார். இவர் ஒரு வழக்கறிஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2011 வரை பணிபுரிந்தார்.

2010 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் தலைமை வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேப் போல் 2014 ஆம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கடுமையான குற்றக் கொள்கைகளால் சீர்திருத்தவாதிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

2016 இல் அமெரிக்காவின் மேலவை உறுப்பினரானார். இதனால் கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெண், இரண்டாவது ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் மற்றும் அமெரிக்காவின் மேலவையில் பணியாற்றும் முதல் ஆசிய-அமெரிக்க பெண் ஆகிய சிறப்புக்களையும் பெற்றார். இவர் மேலவை உறுப்பினராக இருக்கும் போது, ஐக்கிய அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸ் மற்றும் வில்லியம் பார் மற்றும் இணை நீதிபதி வேட்பாளராள பிரட் கவனாக் போன்ற டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதன் மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார்.

2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயக கட்சியின் அதிபர் வேர்பாளராக கமலா ஹாரிஸ் தனது பெயரை அறிவித்தார். இது தேசிய அளவில் அவர்மீது கவனத்தை ஈர்த்தது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 இல், அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். பின்னர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அதிபர் தேர்தல் போட்டியின் முடிவில், ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டார்.