மகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்!

320

சமீபமாக நண்பர்கள் வட்டாரத்தில் நிறைய தம்பதிகள் பிரிவு தொடர்பான செய்திகளே காதுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது..

இப்படி வரும் தகவல்களையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கிறேன்.. அவை எல்லாம் ஒரு பொதுவான ஒரு புள்ளியில் போய் நிற்கிறது…

அது பெண்ணின் அம்மா..

காலமாற்றம் மற்றும் சமூக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் கல்வியில் வளர்ச்சிப் பெற்று பொருளாதார தன்னிறைவு பெறுகிறார்கள்.. இது மிக ஆரோக்கியமானது. அவசியமானது.

ஆனால் பொருளாதார தன்னிறைவு இருப்பதாலயே சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் திருமண உறவை துண்டித்துக் கொள்வது என்பது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அத்தனை ஆரோக்கியமானது அல்ல..

ஆல் பர்ப்பஸ் அங்கிள்ஸ் மற்றும் ஆல் பர்ப்பஸ் ஆண்டிகளுக்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சியை கொடுக்கலாம்.

மற்றவர்களுக்கு துன்பம்தான்.. வெளியே வேண்டுமானால் நாங்க சுதந்திரப்பறவை என்று சீனைப் போட்டுக் கொள்ளலாம். அவர்களின் மனசாட்சி அறியும்.

இப்படி மணமுறிவு அதிகரிக்க பல காரணிகள் இருந்தாலும் கூட முக்கியமான காரணமாக இருப்பது பெண் வீட்டார்.

முன்பெல்லாம் பெண்ணின் அம்மா, கணவன் வீட்டார் குறித்து புகார் வாசிக்கும் மகளிடம்.. “குடும்பம்னா அப்படிதான் இருக்கும்.. விட்டுக் கொடுத்து போ.. ” என்று அந்த சமயத்திற்கு ஏதாவது ஆலோசனை சொல்வார்கள்.

பொண்ணும் அந்த நேரத்திற்கு கண்ணை கசக்கிவிட்டு அடுத்த வாரமே `வீட்டில் விசேசம்’ என்று வந்து நிற்கும்.

ஆனால் இப்போது பெண் சேர்ந்து வாழ விரும்பினாலும் சரி, பெண் வீட்டார்.. குறிப்பாக பெண்ணின் தாயார், “வா பார்த்துக்கலாம்..” என்று மகளை பிரித்து அழைத்து செல்வதிலே குறியாக இருக்கிறார்கள். அல்லது மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினை வர காரணமாகவும் இருக்கிறார்கள்.

பெண்ணை திருமணம் செய்து கொடுத்தப்பின் அது அவர்கள் வாழ்வு என்று விடாமல் அவர்களின் குடும்ப வாழ்வில் ஆதிக்கம் செலுத்த மூக்கை நுழைப்பது, பையனை பிரித்து தனிக்குடித்தனம் போக திட்டம் போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களை பெண்ணின் அம்மா செய்ய ஆரம்பிக்கிறார்.

ஒத்து வரல.. பையன் சரிப்பட்டு வரமாட்டான் எனில் உடனே இருக்கவே இருக்கிறது.. வரதட்சணை கொடுமை வழக்குதான்..

யார் வீட்டில்தான் பிரச்சினை இல்லை.. 60 வயது கடந்த தம்பதிகளிடம் கேட்டுப்பாருங்கள்.. எவ்வளவு குடும்ப பிரச்சினைகளை கடந்து வந்திருப்பார்கள் என்பது புரியும்.

சின்ன விசயமாக இருக்கும்.. தம்பதிகள் உட்கார்ந்து மனம் விட்டு பேசினால் சரியாகக் கூடியதாக இருக்கும்.. ஆனால்.. எதுக்கு விட்டுக்கொடுக்கணும்.. வேணாம்.. அத்துட்டு வா.. பார்த்துக்கலாம் என்று அம்மாவே ஆலோசனைகள் சொன்னால் பெண் என்ன செய்வார்.. கோர்ட்டில் போய் நிற்பார்.. (வக்கில் பேனை பெருமாளாக்கி காசு பார்ப்பார்.)

இதற்கு மறைமுகக்காரணமாக , மகள் வேலைக்கு போகிறார்.. சம்பாதிக்கிறார்.. அப்புறம் எதுக்கு மணமகன் வீட்டாரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்று பெண் வீட்டார் நினைப்பதுதான் என்று நினைக்கிறேன்.

அதனால் அவர்கள் சமாதான பேச்சில் ஆர்வம் காட்டுவதில்லை.

அதற்காக மணமகன் வீட்டார் எல்லாம் யோக்கியமில்லை.. அவர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. குடியும் கள்ளக்காதலும் ( திருமணத்திற்கு மீறிய உறவு என்றெல்லாம் கௌரவமாக எழுத முடியாது) பிரச்சினை உருவாக முக்கிய பங்காக இருக்கிறது. ஆனால் தவறை உணர்ந்து சேர்ந்து வாழ ஆண்கள் தரப்பில் விரும்பினாலும் பெண் வீட்டார் தரப்பில் பெரும்பாலான கேஸ்களில் இணைப்பை விரும்புவதில்லை.

திடீரென்று அதிகளவில் கணவர் வீட்டு உறவினர்கள் வந்துவிட்டால்கூட பெண் பிள்ளைகள் கோவித்துக் கொண்டு, “பத்துபேருக்கு காபி போட்டு கொடுக்க சொல்றாங்கம்மா…” என்று

அம்மா வீட்டுக்கு போகும் கேஸ்கள் எல்லாம் சகஜமாகிவிட்டது.

இந்த பிரிவுகளால் குழந்தைகளின் வாழ்வுதான் சூன்யமாகிறது.

அமெரிக்காவில் இருப்பதுபோல், “அது எங்க அம்மாவின் கணவர்..” “இது எங்க அப்பாவின் மனைவி என்று பிள்ளைகள்..” அறிமுகப்படுத்தும் சூழலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது..

ஆமா.. அதில் என்ன தப்பு.. சுயமரியாதைதான் முக்கியம் என்று ஒரு குரூப் வரும்..

இரு தரப்பும் உறவை துண்டிக்காமல் எவ்வளவு முடியுமோ சேர்ந்து வாழ முயற்சிக்காமல் துண்டிப்பதிலே குறியாக இருக்கும் செயல் தவறு என்பதுதான் நம் விமர்சனம் என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்கள்.

யார் குடித்தாலும் குடி ஆபத்து என்று நாம் கதறும்போது,

ஆம்பள குடிக்கும்போது பொம்பள குடிச்சா என்ன தப்பு.. என்ற கேள்வி போல் எதற்கு விட்டுக் கொடுக்கணும்.. எதுக்கு ஒரே மண வாழ்க்கையில் இருக்கணும் போன்ற எண்ணங்கள் இரு தரப்பிலும் பரவுவது சமூக சீரழிவின் அறிகுறியே..

Cartoonist Bala