அம்பிகை தாயே..!

54

அம்பிகைத்தாயே இன்று நீங்கள் எம் இனத்திற்காக உண்ணாநோன்பிருப்பதை எம்மால் பார்க்க முடியவில்லையே

இந்த வயதிலும் தேசத்து உணர்வோடு நீங்கள் உணவின்றி வாடுவதை எப்படித்தாயே எம்மால் பார்க்க முடியும்

உங்கள் புகைப்படங்களை பார்க்கின்றபோது மனம் பதைபதைத்துப் போகிறதம்மா

அகிம்சை வழியில் திலீபன் அண்ணா.பூபதி அம்மாபோல் நீங்களும் இன்று உண்ணாநோன்பிருக்கின்றீர்கள்.

யுத்தமின்றி உணவின்றி உடல்வாடி இருவரும் மரணிக்கும்வரை உலகமேகூடி வேடிக்கை பார்த்ததே.

எம் வன்னிமண்ணில் தாய் குண்டுபட்டு இறந்தது தெரியாது தாயின்மார்பில் பிள்ளை பால் குடித்ததையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானே இருந்தது

ஆயிரம் ஆயிரம் உயிர்கள் துடிதுடித்து மாண்டபோது வராத உலக நாடுகள் இனியும் எமது குரலிற்கு செவிசாய்க்குமா..?

எம் தாயே எங்களிற்காக நீங்கள் மரணத்தை தழுவவும் தயாரானபோதே உங்களை நாங்கள் அறிந்துகொண்டோம்.

உங்களிற்காக எங்களால் என்ன செய்யமுடியும்.கண் இருந்தும் குருடர்களாகவும் காதிருந்தும் செவிடர்களாகவுமே இன்று நாம் நடைப்பிணங்கள்போல் வாழ்கிறோம்

தாயே தினமும் காலையில் எழுந்ததும் நான் முதலில் உங்கள் செய்தியைத்தான் தேடுகிறேன்
உங்கள் நலம் வேண்டுகிறேன்.

அம்மா எழுந்துவிடு பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்படும்போதும் வேடிக்கை பார்த்த இந்த உலகம் உன் பேச்சிற்கு ஒருபோதும் நியாயமான பதில் தரமாட்டுது

உடல் தளர்ந்துசெல்கின்ற போதும் உள்ளம் தளராது இருப்பவளே நாம் ஒன்றிணைந்து உன்னை மீட்கத்துடிக்கிறோம் தாயே

நீ எழுந்துவாம்மா உன் உயிர் எமக்கு முக்கியம் என்று கூறி கதறி அழுதிடவே மனம் துடிக்கிறது

வல்லாதிக்க சக்திகள் ஒரு உறுதிமொழி தந்து உன்னை காப்பாற்றிட வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் பதறித்துடிக்கிறோம்

என்றோ ஒருநாள் நான் உங்களை கட்டி அணைத்து தழுவவேண்டும்.

என் தாயவளை நேசத்தோடு ஆரத்தழுவ இந்த உலகம் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தரமாட்டுதா என்று ஏங்குகிறேன்

எங்கள் தியாகத்தாயே உங்களிற்காக கண்ணீர் சிந்துகிறோம் அம்மா

வார்த்தைகளின்றி மௌனித்து அழுகிறோம்..

கண்ணீரும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது தாயே

நீங்கள் நலமோடு வந்து எம்மோடு கதைபேசும் நாளிற்காக காத்திருக்கிறேன் அம்மா,…

-பிரபாஅன்பு-