அந்நிய தேசத்தில்
ஆர்ப்பாட்டம் இல்லாது
ஆழிபோல சுழன்றுகொண்டு
அகல் விளக்காய்
அன்னையவள் ஒளிர்கின்றாள்
ஆ(யா)ரறிவார் அன்னையின் குமுறலை
ஆறாத வலிகளோடு
ஆற்றிடவும் யாருமின்றி
ஆழ்கடலில் தவிக்கின்றாள்
இருண்டுவிட்ட இவ்வுலகில்
இழந்துவிட்ட உறவுகளுக்காய்
இன்னுயிரை மெழுகாக்கி
இனமானமே பெரிதென்று
இரந்து கேட்கின்றாள்
ஈழத்தின் தாயாக
ஈனர்களை பாடையேற்ற
ஈகையின் வடிவாக
ஈட்டி முனையின் கூர்மையாக
ஈடேற்றிட துடிக்கின்றாள்
உணர்வோடு உலகத்திடம்
உரிமையாக விடைதேடி உரைத்தபடி உருகுகின்றாள்
ஊன் உறக்கம் மறந்து இன்று
ஊமைகளான எமக்காக
ஊர் தடுத்தும் தனை மறந்தாள்
எட்டாத தேசத்தில்
எங்களுக்காய் எரிகின்றாள்
ஏதிலிகளான தமிழருக்காய்
ஏக்கத்தோடு குமுறுகின்றாள்
ஐயமின்றி அமர்ந்துகொண்டு
ஐம்புலனும் அடக்கிக்கொண்டு
ஒற்றையாய் கரைகின்றாள்
ஓர்மங்கண்ட நெஞ்சத்தோடு
ஓராயிரம் உறவுகளுக்காய்
ஓலமின்றி தளர்கின்றாள்.
-ஈழம் வாகீசன்-