அந்தக் காலத்து அடுமணை பற்றி பார்ப்போம்…

223

பொதுவாக அடுப்படி என்பது தென்கிழக்குலதான் இருக்கும் விறகு வச்சு சமைப்பதால் நம்மூருல அடிக்கிற வடக்குக்காத்து புகையை வெளிய கொண்டு போயிடும்

தனி அடுப்பு ஒன்னும் பெரிய அடுப்போடு ஒரு சின்ன அடுப்பு சேர்ந்த கொடி அடுப்பும் பதிச்சு வச்சிருப்பாங்க (இப்ப சிம்ல வைக்குற மாதிரி தீ மிதமா எரியுறது கொடி அடுப்பு)

விறகு பெரும்பாலும் உடை விறகு தென்ன மட்டை தேங்காய் சிரட்டை மரக்கடை இழைப்பு பட்டறைகளில் விழும் மரத்துகளையும் கொடி அடுப்பில் போட்டு எரிப்பதுண்டு ஒரு ஊதாங்குழாயும் நெருப்பு கங்கைத் தள்ள தீயைப் பிரிக்க ஒரு இடுக்கியும் வேண்டும்

அந்தக்காலத்தில் பொண்ணுக்கு சீர் கொடுக்கும் ஐட்டங்களில் டிரங்குப்பெட்டி சமுக்காளம் பால்சங்கு சினுக்கருக்கி ஈருஉளி பேண்சீப்பு அதோட இந்த ஊதாங்குழாயும் இடுக்கியும் இருக்கும்

அடுப்படில முக்கியமான ஒன்னு அஞ்சரைப்பெட்டி இப்ப உள்ள மாதிரி அலுமினியத்தில் இல்லாம நல்ல கள்ளிப்பலகையில செவ்வகமா பெட்டியாவே இருக்கும் பெட்டி மூடி இழுத்து திறந்து மூடுற மாதிரி இருக்கும்

மல்லி மிளகாய் மஞ்சள் துண்டு வெந்தயம் கடுகு உளுந்தம்பருப்பு நச்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை ஏலக்காய் மிளகு இப்படி தனித்தனியே வைக்க தடுப்பு தடுப்பா இருக்கும்

அரிசி புடைக்க இரண்டு சொலவு அடுப்படியிலே ஆணி அடிச்சு மாட்டியிருக்கும்
அதில் அரிசியைப் போட்டு லாவகமா புடைச்சாங்கன்னா கல்லு குருணை எல்லாம் தனித்தனியா பிரிச்சு எடுத்திடுவாங்க

அரிசி பெரிய குளுமையில் கொட்டி வச்சிருப்பாங்க அதில் ஒரு படி உள்ளே கிடக்கும் காப்படி அதாவது உலக்கு ஒன்றும் இருக்கும் இது போக புளிப்பானை கல் உப்புக்கு ஒரு பானை பருப்பு பானை என பானை மேல் பானை வச்சு அடுக்கி இருப்பாங்க

சோறு பொங்க பல பானைகள் இருக்கும் அரைப்படி அரிசி பானை முக்காப்படி ஒருபடி ஒன்னேகால்படி என ரகம் ரகமா பானைகள் கருப்புக் கலரில் இருக்கும்
இந்த பானைகளுக்கு அடியில் வைக்க பிரிமனைகளும் தனித்தனியே இருக்கும்

குழம்புச்சட்டிகளும் இதே போல கறிக்குழம்புக்கு ஒன்னு மீன் குழம்புக்கு ஒன்னு சாம்பாருக்கு ஒன்னு மீன் உரச ஒன்னுன்னு சட்டிகள் நிறைய இருக்கும் ஒவ்வோரு சட்டிக்கும் ஒரு மூடி வேறு
அரிவாள் மனையும் அப்படித்தான் சைவ அரிவாள்மனை ஒன்று கறி மீனுக்கு தனி அறிவாமனை ஒன்று

கரண்டி என்பது அகப்பை என சொல்லுவோம் தேங்காய் சிரட்டையை அவ்வளவு சுத்தமாக சுரண்டி அதில் கம்பு வச்சு செருகி இருக்கும்
அந்தக் காலத்துல சிறிய தவறுகளுக்கு விசிறி மட்டை அடி பெரிய தவறுகளுக்கு ஆப்பைக் கம்பால்தான் அடி விழும் சேட்டை பண்ணுற பிள்ளைகளுக்கு

இது போக பித்தளைக் குண்டா அண்டா வேறு இருக்கும் கஞ்சி குடிக்க பித்தளை கும்பா வேறு உண்டு

குடிதண்ணி பெரும்பாலும் குளத்திலே அள்ளுவாங்க அந்த பானையிலே தேத்தாங்கொட்டை அரைச்சு விட்டு தண்ணிய தெளியவைத்து வடிகட்டி பின்னர் வைக்கோலை சுத்தி வைச்சு நெருப்பு வச்சு புகைமூட்டம் போட்டு மழைத்தண்ணி மாதிரி கார்பனேட்டட் தண்ணி பக்கா டேஸ்டுல் தயார் பண்ணி வைப்பாங்க

வாழை இலை தாமரை இலை ஆலமர இலை கொண்டு தைத்த தையல் இலையில் பெரும்பாலும் சாப்பிடுவது

சோறு பொங்குவது மதியம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு முடிச்சவுடன் சோத்துப் பானையில் தண்ணி ஊத்திடுவாங்க இரவு பழைய குழம்பை வச்சு கஞ்சி காலையிலே வெங்காயம் பச்சை மொளகாயை கடிச்சுகிட்டு கஞ்சி

ஊறுகாய் எல்லாம் ஜாடியிலே இருக்கும் எண்ணை பெரும்பாலும் பித்தளை தூக்குல இருக்கும் மசாலா அம்மி வச்சு அரைக்கிறது இட்லி தோசைக்கு ஆட்ட உரல் குழவி

இந்த மாதிரி அடுப்படில சாப்பிட்டதும் ஒரு சுகம் அது இப்ப உள்ள மாடுலார் கிச்சன்ல சமைச்சு டைனிங் டேபிள்ல கரண்டியும் போர்க்கும் வச்சு சாப்பிறதுல கிடையாது