அப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்

62
[poll id= “5”]

அண்மைக்காலமாக சட்டத்தரணிகளை ‘புலமைச் சொத்தாக’ விவரிக்கும் செய்திகளை படிக்க நேர்ந்தது. இதற்கு முன்னரும் அரசியலில் சட்டத்தரணிகளின் வகிபாகத்தை பற்றி ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். இதில் கொஞ்சம் விரிவாக சொல்லலாம் என எண்ணுகிறேன்.

சிறந்த சட்டத்தரணிகள் தர்க்கத்தில் (logic) சிறந்தவர்களாகவும், குறித்த சட்ட விடயம் ஒன்றை பொருள்கோடல் அல்லது உள்ளடக்கம் செய்தல் தொடர்பில் நுணுக்கமாக வாதம் செய்யத் தெரிந்தவர்களாகவும் (ability to make highly technical arguments – முட்டையில் மயிர் பிடுங்கத் தெரிந்தவர்கள் என சாதாரண தமிழில் சொல்லாலாம். சக சட்டத்தரணிகள் மன்னிக்கவும் 🙂 ), வாதங்களை முறையாக ஒழுங்கமைக்கும் வல்லமை உள்ளவர்களாகவும் (ability to categorise and organise arguments in an intelligent manner), குறுகிய காலத்தில் பல்வேறான விடயங்களை தீர்க்கமாக முன்வைக்கக் கூடியவர்களாகவும் (ability to make precise arguments within a very short period of time – experts in the economic use of language) இருப்பார்கள்.

பொதுவாக சட்டத்தரணிகளுக்கு தமது தொழில் சார்ந்து கருத்தியல் இல்லை. கட்சிக்காரரின் கொள்கையே எனது கொள்கை என்று வரித்துக் கொள்வது தான் சட்டத்தரணிகளின் தர்மம்.

அரசியல்வாதியான சட்டத்தரணிகள் சிலர் அரசியலிலும் சட்டத்தரணிகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியலில் கோட்பாடு என்பது யதார்த்ததிற்கு முரணானதாக தெரியும். கருத்தியலை அவசியமற்றதாக கருதுவார்கள்.

‘சாணக்கியம்’ ஒன்றே முக்கியம் எனக் கருதுவார்கள். வழக்கில் வெல்வது போன்று முகம் கொடுக்கும் அந்த பொழுதை வென்று வருவது தான் அவர்களுக்கு பிரதானம். (உதாரணமாக நேர்காணல் செய்யும் ஊடகரை தோற்கடிப்பது)

இனப்படுகொலை அவர்களுக்கு ஒரு சட்ட எண்ணக்கருவாக (legal concept) மாத்திரம் தான் தெரியும். அதை நிரூபிக்க முடியுமா என்பதை வைத்துத் தான் எமக்கு நடந்தது இனப்படுகொலையா இல்லையா என்பதனை சொல்லலாம் என்பார்கள். அதனை ‘அறிவாற்றல்’ என்றும் கருதுவார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள் தம் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்பார்கள்.

இப்படியான சிந்தனை தான் போதை பாவிப்பதால் ஏற்படும் வன்முறையையும் ஆயுதம் ஏந்திப் போராடுவதையும் ஒரே தராசில் வைத்து – ஒரே விதமான வன்முறையாக வைத்துப் பார்க்க தூண்டும் ‘அறிவாற்றல்’. இது புலமைத்துவத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது.

சட்டத்தரணிகளில் சிலர் தமது சட்டத்தரணித்தனத்தை விடுத்து அரசியல் சித்தாந்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பர். ஒரு பிரச்சனையை முதற்கண் அந்த சமூகத்தின் அனுபவ வழியாக வரித்துக் கொள்ளப்பட்ட கருத்தியல் நிலைப்பாடுகளில் இருந்து பார்ப்பார்கள் (ஆங்கிலத்தில் approaching a problem on first principles என்பார்கள்) தமது சட்டத்தரணி பயிற்சியை இந்த கருத்தியலுக்கு இரண்டாம் பட்சமாக வைத்திருப்பார்கள். சாணக்கியம் கருத்தியலுக்கு சேவகம் செய்ய வேண்டும் (strategy should serve ideology). சாணக்கியமே கருத்தியல் என்பதை மறுப்பவர்கள். (Strategy cannot be ideology)

முதலாம் வகையினரை நாம் உபகாரணப்படுத்த வேண்டும். எமக்காக அவர்கள் வழக்கு பேச நாம் அவர்களை நாட வேண்டும். எமக்கு ஓர் சட்ட ஆவணம் வேண்டுமென்றால் அதன் வரைபை எழுதித் தர வேண்டும் என்றால் சட்டத்தரணிகளில் சிறந்தவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். எமக்கு பெரிய வளமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலில் தீர்மானம் எடுப்பவர்களாக இருக்க முடியாது. நல்ல சட்டத்தரணி வேண்டுமென்றால் அவரை உங்கள் வழக்கில் ஆஜராக சொல்லுங்கள். அரசியலை அவரிடம் தாரை வார்க்காதீர்கள்.

இரண்டாம் வகையினரை சட்டத்தரணிகள் என்பதற்காக தெரிவு செய்ய வேண்டாம். அவர்களின் அரசியலை வைத்து அவர்களை தெரிவு செய்யுங்கள் அல்லது நிராகரியுங்கள். அப்புக்காத்துக்கள் நிறைந்த எமதரசியலில் அப்புக்காத்தனத்தில் இருந்து விடுபட நாம் இந்த தெளிவைப் பெற வேண்டும்.

குருபரன்