ஆசிய பசுபிக்கில் அமெரிக்க – சீன இரட்டைத் தலைமை

52

கடந்த 2013 இல்; அமெரிக்க அதிபர் barack obama வும், சீன அதிபர் XI Jinping இணைந்து, கிழக்காசியாவில் ஓர் புதுவிதமான, அதிசக்திவாய்ந்த திட்டமொன்றை, குழப்பகரமான உறவினூடாக மேம்படுத்தும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உறுதியளித்துக்கொண்டார்கள். அதுவே கிழக்காசியாவிற்கான இரட்டைத் தலைமை (Dual – Leadership) எனப் பொருள்படுகிறது. பட்டுப்பாதை, மற்றும் முத்துமாலை ஆகிய திட்டங்களினூடாக, அதிவேகமாகத் தனது பொருளாதாரப்பலத்தைக் கட்டியெழுப்பிவரும் சீனாவைத் தவிர்த்து, ஆசியப்பிராந்தியத்தில் எவ்விதமான நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக மேற்கொள்வது இலகுவாக இருக்காது என்பதன் வெளிப்பாடே, இந்த ´கிழக்காசியாவிற்கான இரட்டைத் தலைமை´´ என்ற நிலையை நோக்கி அமெரிக்காவை வரவைத்திருக்கிறது.

ஓர் நாடானது சர்வதேச விவகாரங்களில் தனது தலைமைத்துவத்தைத் தக்கவைத்திருக்க, அது தன்னகத்தே கொண்டிருக்கவேண்டிய 5 முக்கிய கூறுகள் ;

a) அது தன்னகத்தே கொண்டிருக்கும் பரிமாணத்தில் அதியுச்ச தகைமையும் பலமும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

b) இயல்பான நாட்களிலும், பேரிடர் காலங்களிலும் தனது மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை வழங்குவதில் சமச்சீரைக் கொண்டிருத்தல் வேண்டும்.

c)விதிகளை உருவாக்குவதிலும், தூரநோக்கிலான நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதிலும் தலைமைப்பண்பைக் கொண்டிருத்தல் வேண்டும்.

d)தனது தலைமைத்துவ இருப்பின் மூலம், அதிமுக்கிய சர்வதேச அமைப்புகளில் காத்திரமான பங்கைக்கொண்டிருத்தல் வேண்டும்.

e) உயர்ந்த தார்மீகநிலையையும், பொறுப்புக்கூறலுக்கான தகுதியும் கொண்டிருத்தல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட தலைமைத்துவத்திற்குரிய கூறுகள், அந்நாட்டினுடைய செல்வாக்கில் ஆதிக்கம் செலுத்துமளவிற்குத் தகுதிகொண்டவை. மேற்கூறிய தகுதிகளைப் பரிசீலித்தே அனைத்து நாடுகளும், தமக்குரிய நட்பு நாடுகளைத் தீர்மானித்துக்கொள்கின்றன. மேற்கூறிய தகுதிகளில், ஒன்றையேனும் திறனாகக் கொண்டிராத நாடுகளை, ஏனைய பலம்கொண்ட நாடுகள்; பூகோள அரசியலின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மோடு இணைப்பதும், கழற்றிவிடுவதுமாக இருப்பார்கள். மேற்கூறிய தகுதிகளில்; பல வளங்களைக் கொண்டிருந்தும் அதைச் சரியாக நிர்வகிக்கும் திறனற்ற நாடுகளின் பட்டியலில் ஆசியாவில் பலநாடுகள் உள்ளன. உதாரணமாக இலங்கையையும் , பாகிஸ்தானையும் எடுத்துக்கொள்ளலாம். இலங்கையானது ; சீனா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய அணைத்து நாடுகளிடமும் கையேந்தி நிற்பதோடு மட்டுமன்றி, பூகோள அரசியலில் தனது இருப்பைத் தக்கவைக்கும் திறனற்றதாகவும் இருக்கிறது. . ஆனால்; பாகிஸ்தான் அப்படியல்ல, அமெரிக்காவிடம் ஆயுதமும், சீனாவிடம் அபிவிருத்தியையும் பெற்று நின்றாலும், பூகோள அமைவிடத்தில் தனது அரசியலும் இருப்பும் இந்தியாவிடம் பறிபோய்விடக்கூடாது என்பதில் கங்கணம்கட்டி நிற்கிறது. (தமிழீழத்தின் விடுதளை மீது இந்தியா சாதகமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருந்திருப்பின், இந்த வல்லரசுப் போட்டியில் இந்தியாவும் தவிர்க்கமுடியாத இடத்தைத் தக்கவைத்திருக்கும். தமிழீழத்தை அழித்து, தமிழர் படை பலத்தை நிர்மூலமாக்கத் துணைநின்றதன் விளைவே, இந்தியாவை அதன் பூகோள அமைவிடத்தின் நிமித்தம் கூட பொருட்டாக மதிக்க எந்த நாடும் தயாரில்லை. இந்தியா தனது நகர்வின்மூலம் தமிழர் தரப்பிற்குத் துணை நின்றிருப்பின், ஆசியத் தொண்டைப்பகுதியின் இருப்பு இந்தியாவிடமும், தமிழீழ அரசிடமும் இருந்திருக்கும், இந்தியாவை மீறிய எவ்வித நடவடிக்கைகளும் ஆசியப்பிராந்தியத்தில் நடைபெற்றிராது.)

மேலுள்ள கூறுகளில் சீனாவும் அமெரிக்காவும் a , c , d ஆகிய கூறுகளைத் தமது தகுதியாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் சீனா; தனது இருப்பின் முக்கிய அடையாளமாக உலக வர்த்தகத்தை ஆக்கிரமிப்பதன் மூலம், பொருளாதாரத்தை ஈட்டுவதில் முதலிடத்தில் நிற்கிறது. அமெரிக்கா தனது வர்த்தகத்தில் யப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஆகிய நாடுகளோடு மட்டுப்படுத்தி நின்றுவிட, சீனாவோ கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளையும், இப்பொழுது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலும் தனது வர்த்தகத்தை விரித்திருக்கிறது.
ஆசியாவில் தனது பொருளாதாரப் பலத்தை உறுதிசெய்வதற்காக சீனா பல பிராந்திய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது. 2010 இல் Asean – China Free Trade Area வும், Mainland and Hong kong Closer Economic Partnership ArrangeMent ஐயும், Taiwan Economic cooperation தோற்றுவித்தது. இவற்றின் மூலம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி, உலகப் பொருளாதாரப் பலத்தில் அமெரிக்காவை வேகமாக நெருங்கிவருவதை இணைக்கப்பட்டுள்ள முதலாவது அட்டவணைப்படத்தில் காணலாம்.

US leadership Role – அமெரிக்காவின் தலைமைப்பாங்கு

இராணுவப் பலத்திலும், பாதுகாப்பிலும், சொந்த அரசியல்நிலைப்பாட்டிலும் சந்தேகமின்றி அமெரிக்கா உலகின் முதல்நிலையை வகிக்கிறது. அமெரிக்க இராணுவத்தின் 2011 ஆம் ஆண்டிற்கான மொத்தச் செலவு 711 பில்லியன் டொலர்கள். இது உலகநாடுகளின் மொத்தப்பாதுகாப்புச் செலவீனத்தின் 48.1 வீதமாகும். 142.9 பில்லியன் டொலர்களை மட்டுமே பாதுகாப்புச் செலவீனத்திற்காக சீனா ஒதுக்குகிறது என்றாலும், உலகின் இரண்டாமிடத்தை அது தக்கவைத்திருக்கிறது. (அட்டவணைப்படம் -2)

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 வீதத்தை தனது பாதுகாப்புச் செலவீனத்திற்காக அமெரிக்கா ஒதுக்குவதைப் போல, தனது மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக சீனாவால் ஒதுக்க இயலாது என்பதே உண்மை. அவ்வாறே கிழக்காசிய நாடுகளுக்கான ஆயுத விற்பனையில் பெரும்பகுதியைத் தன்வசம் வைத்திருக்கும் அமெரிக்கா, கிழக்காசியாவில் பலநாடுகளுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் செய்துவைத்திருக்கிறது. அமெரிக்க – யப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கை, அமெரிக்க – தென்கொரிய பாதுகாப்பு உடன்படிக்கை, மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா தாய்வான் ஆகிய நாடுகளுடனான கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்குமான உடன்படிக்கைகளும் இவற்றில் அடங்கும். இதில் யப்பானுடனும், தென்கொரியாவுடனும் 2012 ஆம் ஆண்டில் நூறுக்கு மேற்பட்ட இராணுவ ஒத்திகைகளை அமெரிக்கா நடத்தியிருக்கிறது. இவையெல்லாமே சீனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அமெரிக்காவின் தடாலடி நடவடிக்கைகளே.

சமநேரத்தில், சீனாவும் இரசியாவும் இணைந்து மத்திய ஆசியாவைக் கைக்குள் வைத்திருக்கும் நோக்கில், Shanghai Cooperation Organization என்ற பெயரில் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன. இது ஏறக்குறைய அமெரிக்காவின் NATO வடிவை ஒத்ததாகவே அமைகிறது. 1978 – 1987 வரை தனது இராணுவச் செலவீனத்தை 3.5 வீதமாக வைத்திருந்த சீனா, 1988 – 1997 வரையான காலத்தில் 14.5 வீதமாகவும், 1998 – 2007 வரையான காலத்தில் 14.5 விதமாகவும் உயர்த்தியது.

சீனாவுடன் இரட்டைத் தலைமைக் கொள்கையினைக் கடைப்பிடித்தவாறே, பொருளாதார மற்றும் உலக வர்த்தகப் பலம் ஆகியன மூலமாக சீனா உலகைத் தனது கைக்குள் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சமும், சீன இராணுவத்தின் வளர்ச்சியும் கண்டு, அமெரிக்கா தனது ஆட்டத்தை வேறுவிதமாக மாற்றுகிறது.

அமெரிக்கக் கடற்படையின் 60 வீதமான பலத்தை , ஆசியப் பிராந்தியத்தை நோக்கி 2020 இன் இறுதிப்பகுதிக்குள் நகர்த்துவதற்கு பென்ரகன் உறுதியளித்திருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்ட முன்னேற்பாடாக; மூன்று Littoral போர்க்கப்பல்களை சிங்கப்பூரில் நிறுத்திவைத்திருப்பதையும், வரிசைக்கிரமமான கடற்படைக் கப்பல்களை அவுஸ்திரேலியாவில் நிலைகொள்ளவைத்திருப்பதையும், ஆசியாவில் தனது பிரசன்னத்துக்கான சைகைகளாக வெளிப்படுத்துகிறது அமெரிக்க அரசு. யப்பானுடனும், தென்கொரியாவுடனும் கைகோர்த்து இராணுவப்பயிற்சிகளை நடாத்தி, கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதில் மேலுமொரு அதீத நன்மையும் அமெரிக்காவிற்கு இருக்கிறது. கூட்டு நடவடிக்கைகளின் மொத்தத் செலவீனத்தில், யப்பானும், தென்கொரியாவும் தங்களது சொந்தப் பாதுகாப்பு நிதியிலிருந்தே அவர்களுக்குரிய பங்கினைச் செலவிடுவார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் தனித்துத் தரித்திருப்பதால் ஏற்படும் செலவீனங்களை விடவும், இவ்வாறான கூட்டுமுயற்சிகளில் ஏற்படும் செலவீனங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஒபாமா அரசின் இறுதிக்கால அறிவிப்புகளில்; ஆசிய, பசிபிக் பிராந்தியங்களில் இயங்கும் அமெரிக்கத் தளங்கள் மூடப்பட மாட்டாதென்றும், நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதென்றும் அறிவித்திருந்தது. இவையனைத்துமே; ஆசியப் பிராந்தியத்தில் நடைபெறப்போகும் பலப்பரீட்சையின் அறிகுறிகளே.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான உலக வல்லரசுப் போட்டியில்; அமெரிக்கா NATO ஐ உருவாக்கியது. இரசியா WARSAW ஐ உருவாக்கியது. இந்த இரண்டிற்குள்ளும் சேராத நாடுகள் ´´அணிசேரா நாடுகள்´´ என்றொரு அமைப்பை ஏற்படுத்தின. இலங்கை உட்பட, அனைத்துத் தெற்காசிய நாடுகளும் அணிசேரா நாட்டினுள் இணைய, இந்தியா மட்டும் தன்னை இரசியாவின் நட்பு நாடாகத் தன்னை அடையாளம் காட்டியது. சினமடைந்த அமெரிக்கா, பாகிஸ்தானை தனது நட்பு நாடாக்கியது. ஆனால்; சிந்திக்கத் திறனற்ற சிங்கள ஆட்சியாளர்களைக் கொண்ட இலங்கை மட்டும், காலத்திற்கேற்ற வகையில் இரண்டாகப் பிரிந்து நின்றது. இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளான; சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரசியச் சார்புடையதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்புடையதாகவும் நிற்க, பூகோளஅரசியலில் இலங்கையானது நிலையற்ற தளமாக மாறிப்போனது.

இன்றுள்ள அமெரிக்க – சீன வல்லரசுப் போட்டியானது, இராணுவ – வர்த்தகப் போட்டியாக சமநிலைப்படுத்தப் படுகிறது. இராணுவப் பலத்தை அதிவேகமாக அதிகரிப்பதன் மூலம் தனது நலனை அடைய முயலும் அமெரிக்காவும், ஏற்றுமதி வர்த்தகம் மூலம் தனது பொருளாதாரப் பலத்தைக் கட்டியெழுப்பி அதன்மூலம் உலகை ஆளத் துடிக்கும் சீனாவுமாக இந்த வல்லரசுப் போட்டி நிகழப்போகிறது. (கொரோனா வின் பின்பாக உலக ஒழுங்கு மேலும் உடைந்து , சீனாவின் தலைமையில் புதிய ஒழுங்கு தோன்ற வாய்ப்புண்டு என Parani Krishnarajani அண்ணை குறிப்பிட்டதும் முக்கியமானது ) இதில், யாரை நட்புச் சக்தியாகக் கொண்டு சிறுபான்மை இனங்களின் தமது இன விடுதலையை வென்றெடுக்கப் போகிறார்கள் என்பதுகுழப்பகரமான சதுரங்க ஆட்டமாக இருக்கும். அதுவும் இலங்கை அரசின் ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழர் தரப்பு தனது காய்களை நகர்த்தவேண்டும். ஆனால்; அதற்கேற்ற சரியான தலைமை முதலில் எமக்கு அமையவேண்டும். அதை மக்கள் நன்குணர்ந்து தெரிவுசெய்யவேண்டும்.

-தேவன்