அசோக மன்னனால் கழுவேற்றி கொல்லப்பட்ட 18000 ஆசீவகர்கள் – புத்த மதத்தின் கொடூர முகம்

227

கழுவேற்றம் என்றாலே பலருக்கும் பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றம் நினைவிற்கு வரலாம். ஆனால் காலத்தால் மிகவும் முற்பட்ட கழுவேற்றமாக நமக்கு வரலாற்றில் கிடைப்பது இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற மன்னனான அசோகன் செய்த கழுவேற்றமே.

இன்றைய அசோக கல்வெட்டுகளை படித்திருப்போம்/கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அசோகனது கல்வெட்டுகளாக கூறப்படும் முக்கியமான கல்வெட்டுகள் எதிலுமே ‘அசோகன்’ எனும் பெயர் இடம்பெறவில்லை என்பது தான் கசப்பான உண்மை. கர்நாடகத்தில் மாஸ்கி எனும் இடத்தில் ஒரேயொரு Minor Edict என சொல்லக்கூடிய கல்வெட்டு தவிர்த்து வேறு எங்கும் ‘அசோகன்’ எனும் பெயர் இடம்பெறவில்லை. அதுபோக கர்நாடகத்தில் இந்த Minor Edict ஐ கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே மற்ற கல்வெட்டுகளும் அசோகனது கல்வெட்டுகள் தான் என்ற முடிவுக்கு வரலாற்றாளர்கள் வருவதற்கு பெரிதும் உதவிய நூல் அசோகவதனா, திவ்யவதனா எனும் இரண்டு நூல்கள் தான்.

இந்த அசோகவதனா, திவ்யவதனா எனும் நூல்கள் அசோகனை பற்றிய வரலாற்று தகவல்களை தருகின்றன. இந்நூல்கள் அசோகனது காலத்திற்கு அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிலர். இதில் தான் அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.

அதாவது ‘நிர்கந்தர்கள்’ என்போர் புத்தரை தவறாக சித்தரித்து ஓவியம் வரைந்ததை அறிந்த அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றினான் என்கிறது அசோகவதனா. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் மீண்டும் இதேபோன்ற சித்தரிப்புகள் நடக்க , அந்த ஓவியம் வரைந்த ‘நிர்கந்தரை’ குடும்பத்துடன் எரித்ததாக கூறுகிறது இந்நூல். அதன்பின்னும் கோபம் தீராத அசோகன் தன் நாட்டில் சுற்றித்திரியும் நிர்கந்தர்களின் தலைகளை கொண்டுவருவோருக்கு ஒரு பொற்காசும் வழங்குவதாக அறிவித்திருந்தான் எனவும் இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.

இதில் ஏ.எல்.பாஷம் உற்பட பல வரலாற்றாளர்கள் அசோகன் ‘நிர்கந்தர்கள்’ வரைந்த ஓவியத்திற்கு தவறுதலாக ஆசீவகர்களை கழுவேற்றியிருக்க கூடும் என எழுதியிருக்கிறார்கள். அதாவது பாஷம் ‘நிர்கந்தர்கள்’ என்பவர்களை ஜைனர்களாக கருதுகிறார். ஆதலால் ஜைனமும் ஆசீவகமும் ஒன்றுக்கொன்று தத்துவங்களில் முரண்பட்டாலும் வெளி தோற்றத்தில் ஒரேமாதிரி இருந்தார்கள் என்பதால் அசோகனே இருவருக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பியிருக்கலாம் என்கிறார்.

அசோகன் உண்மையில் வேறுபாடு அறியாமல் கழுவேற்றினானா அல்லது இருவருமே புத்தரை தவறாக சித்தரித்தார்களா என்பதெல்லாம் தனித்த விவாதம். ஆனால் புத்தரின் மேல் தீவிர பற்றுக்கொண்டதால் அசோகன் மற்ற பிரிவினரை எதிர்த்து கழுவேற்றினான் என்பது இந்நூலில் இருந்து அறியப்படும் தகவல். கலிங்க போரினால் மனம் திருந்தி கொல்லாமையை போதித்து சக மனிதரிடம் அன்பு பாராட்ட வலுயுறுத்திய பௌத்தத்தை கடைபிடித்த அசோகனே மதத்தின் பெயரால் கழுவேற்றத்தினை நிகழ்த்தியிருக்கிறான் என்பது பலரும் இதுவரை அறியாத தகவல்.