பால் தக்கரே,ஒரு பார்வை…

176

#பால்தாக்கரே

சாலைவழியாக மும்பைக்குள் நுழைவதாயிருந்தால், ஆர்.கே.ஸ்டூடியாவுக்கு முன்பாக, தேவ்னார் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கிற சத்ரபதி சிவாஜி சிலையைக் கடந்தே அனைவரும் சென்றாக வேண்டும். சராசரியை விடவும் உயரமான பீடத்தின் மீது, குதிரையில் சவாரி செய்யும் சிவாஜியின் உருவச்சிலையைக் கவனிக்காமல் மும்பை நகரத்துள் நுழைவது கடினம். அந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பால் தாக்கரே அப்போது சொன்னது: “நமது மும்பை நகரத்துக்குள் எவர் வந்தாலும் சரி, சத்ரபதி சிவாஜியின் காலடியைப் பாராமல் உள்ளே செல்ல முடியாது.”

சிவசேனா அரசியல் கட்சியாக உருமாறும் முன்னரே, மும்பையைத் தனது கிடுக்கிப்பிடியில்தான் வைத்திருந்தது. ‘ஷாகா’ என்றழைக்கப்படுகிற கிளை அலுவலகங்களை எங்கெங்கும் காண முடிந்தது. ‘ஜெய் மகாராஷ்ட்ரா’ என்று ஒருவருக்கொருவர் வந்தனம் சொல்லும் சிவசேனைக்காரர்களை அங்கெங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம். ‘குட் மார்னிங்’ என்று ஆங்கிலத்தில் பேசுகிறவர்களை அவர்கள் பார்க்கிற பார்வையில் ஒரு அந்நியம் இருக்கும். இரண்டு மராட்டியர்கள் சந்தித்தால், சுற்றியிருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, தங்களது சம்பாஷணைகளை மராட்டியிலேயே தொடர்வதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இது மொழிப்பற்றா அல்லது மொழிவெறியா என்பதை அவரவரின் புரிதலுக்கு விட்டுவிடுதலே நல்லது.

ஒரு தமிழனாக, பால்சாஹேபின் ‘லுங்கி ஹடாவோ(வேட்டியை ஒழி!)’ என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையும் இயல்பாகவே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது உண்மைதான். நாளாவட்டத்தில் அவரது அசூயை மராட்டிய மண்ணின் மைந்தர்கள் தவிர்த்து அனைவரின் மீதும் பாரபட்சமின்றிப் படர்ந்திருந்தது என்பதைப் புரிந்தபோது, இப்படிப்பட்ட கண்ணோட்டம் கொண்ட ஒரு மனிதரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாரையும் போலவே எனக்கும் எழுந்ததுமுண்டு. மும்பையைத் தவிர சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதும் ஒரு பொதுப்படையான கருத்தாக முன்வைக்கப்பட்டது. கொங்கண் தவிர, கரும்பாலை முதலைகளின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மராட்வாடா, விவசாயிகளும் தொழிலாளிகளும் மிகுந்திருந்த விதர்பா ஆகிய பகுதிகளில் சிவசேனா தவழும் குழந்தையாயிருந்த சூழலில், ‘மண்ணின் மைந்தன்’ என்ற ஒற்றைக்கொள்கையை மட்டும் வைத்து தேசீயக் கட்சிகளுக்கு இவர் எப்படி முட்டுக்கட்டைகள் போடப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், அவரால் அது அவரால் முடிந்தது. சிவசேனா ஆட்சிக்கு வந்தது – ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ‘களப்பணி’யை முடித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது என்றால், அது பால் தாக்கரே என்ற ஒற்றை மனிதருக்காகவே!

இந்த மிரட்டல் அரசியல் மும்பைவாழ் மராட்டியர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸும், தொழிலாளர்களின் நலத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிலதிபர்களுடன் கைகோர்த்துவிட்டு சொகுசுவாழ்க்கையில் ஈடுபட்ட ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்ததை இப்போது நினைவுகூர பலர் தயாராக இல்லை. ஆனால், இந்தியாவிலேயே பிற மாநிலத்தவர் மிகமிக அதிகமாக வாழ்கிற மும்பையென்ற நகரத்தில், மராட்டியர்களில் பெரும்பாலானோரை ஒன்றிணைக்க ‘ஜெய் மகாராஷ்ட்ரா’ என்ற கோஷம் மட்டுமே உதவியது என்று சொன்னால், அது மூர்க்கத்தனமான வன்மத்தில் சொல்வதாகவே இருக்கும். பால்தாக்கரேயை மராட்டியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்வதற்குப் பல உளவியில்ரீதியான காரணங்கள் இருந்திருக்கலாம். அவர் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் அவரவர்க்கு எதிர்காலம் மீதிருந்த அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பால்தாக்கரேயை எதிர்மறையாக விமர்சிக்கக் காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், சற்று யோசித்தால் அவரது அரசியல் அணுகுமுறைகளில் பலவற்றை, பலர் பல்வேறு கட்டங்களில் தங்களால் இயன்றவரைக்கும் முலாம் பூசிப் பயன்படுத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ‘அம்ச்சி மாத்தி அம்ச்சி மாணூஸ்’ (#எனது மண்; என் மக்கள்) என்ற கோட்பாடு பால்தாக்கரேவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய உதாரணங்களல்ல.

பம்பாய் மும்பை ஆனதும் அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் சில நகரங்களின் பெயர்கள் மாறின. அறிவிப்புப்பலகைகள் மராட்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை, பின்னாளில் பல மாநிலங்களிலும் பின்பற்றினார்கள். எல்லாத் திரையரங்குகளிலும் மராட்டிப் படங்களுக்கென்று குறிப்பிட்ட காட்சியில் எண்ணிக்கை வரையறுத்தே ஆக வேண்டும் என்பதும் பின்னாளில் மகாராஷ்டிரம் தாண்டிப் பரவியது. இவையெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள் என்றாலும், நமக்கும் பரிச்சயமான நிகழ்வுகள்.

பால் தாக்கரே ‘சாம்னா’வில் எழுதிய தலையங்கங்களைப் போல வேறு எவரேனும் எழுதியிருந்தால் பல உரிமைப்பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள். அவர் ஒவ்வொரு விஜயதசமியன்றும் சிவாஜி பார்க்கில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களைச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சியிருப்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகளும் அரசியல்வாதிகளும் அஞ்சின. சொல்லப்போனால், அவரைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு இருந்த அச்சமே அவரது வெற்றியோ என்று எண்ண வேண்டிய துரதிருஷ்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை.

அவரை விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.

நன்றி – Rock Bala ji