பா.ச.க.வின் ஆன்மிகம் – ஒழுக்கம் சார்ந்ததா?

121

கடவுள் அச்சம் இல்லாத கட்சி பா.ச.க.! கடவுளும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு கருவிதான் பா.ச.வுக்கு!

உண்மையான கடவுள் பற்றும், உள்ளம் நிறைந்த தூய ஆன்மிக உணர்வும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆரியத்துவாவாதிகளுக்கு இல்லை; இருந்தால் இவ்வளவு இழிவான சனநாயகத் துரோக – ஊழல் அரசியல் நடத்துவார்களா?

பன்னாட்டு நிறுவனங்களிடம் கரவாகப் பெறும் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அள்ளி வீசித்தான் எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்.

நாட்டின் வளங்களையும் மக்களையும் சூறையாடப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவு திறந்து விடுவதற்கான கையூட்டாகவே அந்நிறுவனங்கள் பா.ச.க.வுக்குப் பண மழை பொழிகின்றன. கொரோனா கொடுங்காலம் பா.ச.க.வுக்குப் பொற்காலம் ஆகிவிட்டது.

கொரோனாத் துயர் துடைப்பின் பெயரால் தணிக்கை இல்லாத வசூல் வேட்டை நடக்கிறது. அதிகத் தொலைவுக்கு வலை வீசலாம்; அதிகத் தொகைக்கு விலை பேசலாம்!

விலை பேசும் “ஒழுக்கம்” பா.ச.க.வுக்கு இருக்கிறது. விலைபோகும் “ஒழுக்கம்” காங்கிரசுக்கு இருக்கிறது.

இவ்வளவையும் நாம் ஏன் எடுத்துரைக்கிறோம்?

எதிரியை அம்பலப்படுத்துவதற்காகவா? இல்லை! தமிழர்கள் எதிரியை அடையாளம் காண்பதற்காக!

அடைவதற்கு சொந்த இலக்கும், அதற்குரிய இலட்சியப் பாதையும் இல்லாதவர்கள் எதிரியை அம்பலப்படுத்துவதையே தங்களின் இறுதி நோக்கமாக வைத்துக் கொள்வார்கள்! இலட்சிய வீரர்களோ, எதிரியை வெல்வதையே தங்கள் இலக்காகக் கொள்வார்கள்!

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளை அடிக்காமல் பா.ச.க., காங்கிரசு, அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளால் உயிர்வாழ முடியுமா? தண்ணீருக்கு வெளியே முதலைகளால் உயிர் வாழ முடியுமா?

ஊழல், ஒழுக்கக் கேடு, கட்சி மாற்றும் கருப்புச் சந்தை போன்றவை இல்லாமல் இக்கட்சிகளால் “அரசியல்” நடத்தவே முடியாது.

பா.ச.க.வின் “பாரத மாதா”, “ஜெய் ஸ்ரீராம்” போன்ற “புனித முழக்கங்கள்” எல்லாம் தங்களின் ஆரிய ஆதிக்கத்தை, பண வேட்டையை, பதவி வேட்டையை மறைத்துக் கொள்ளும் போலிப் பக்தி முழக்கங்கள்!

கடவுளை ஏமாற்றுவதையே அன்றாடக் கடமையாக்கிக் கொண்ட சங்கிகளுக்கு, மக்களை ஏமாற்றுவது மலிவான பொழுது போக்கு!

ஐயா பெ. மணியரசன்,

தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.