பெருந் தொற்றின் விளிம்பில்…

66

டிசம்பர் 2, 1984 யை மனித குலத்தை நேசிக்கும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. போபால் விச வாயு தாக்குதல் நடந்தேறிய நாள்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட அந்த காேர நிகழ்வு இன்றும் 5 இலட்சத்திற்கும் மேலானவர்களிடம் அதன் தாக்கத்தை விட்டுச் செனறுள்ளது.

விச வாயு தாக்குதலால் ஏற்கனவே உடல் குறைபாட்டுடனும் நோய் எதிர்ப்பு சக்தி இன்றியும் இருக்கும் இவர்கள் இன்று கொரோனா பெருந் தொற்றிற்கு உடனடி இலக்காக மாறியுள்ளனர். ஏனையோரைவிட கூடுதல் சிரத்தையுடன் கவனிக்கப்பட வேண்டிய இவர்களின் நிலை பற்றி அரசு எதுவும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மாறாக, போபால் பெருந்துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு என இயங்கி போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (BMHRC) கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட பின் கொரோனா நோயாளி என ஒருவருக்கு கூட இங்கு சிகிச்சையும் அளிக்கப்படவிமில்லை. விச வாயு துயரர்களுக்கு முறையாக வழங்க வேண்டிய சிகிச்சையும் அளிக்கப்படாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

விச வாயு தாக்குதலுக்கு உள்ளாகி நுரையீரல் நோயுடன் வாழும் துயரருக்கு கொரோனா பெருந் தொற்று ஏற்பட்டால் என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசின் வழிகாட்டுதல் ஏதும் இன்று வரை வழங்கப்படவுமில்லை.

தொழிற்சாலை மாசு நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு இயல்பாகவே நுரையிரல் சார்ந்த நோய் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாலும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும் இப்பகுதியில் வாழும் மக்கள் கொரோனா பெருந் தொற்றுக்கு ஏற்பட 100% சாத்தியப்பாடு உள்ளது.

தொழிற்சாலை மாசு நிறைந்த பகுதிகளான எண்ணூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, கல்பாக்கம் போன்ற பகுதிகளில் துரிதமான பரந்துபட்ட அளவிலான பரிசோதனைகளையும், அலோபதியில் மருந்து இல்லாததால் கூட்டு முயற்சியாக மாற்று மருத்துவ மருந்துகளை நோய் தடுப்பு மருந்துகளாக வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியதே பொறுப்பான அரசின் செயல்.

இரவிச்சந்திரன்