இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஜேர்மனியும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இரு நாடுகளிலும் உருவானது. அதுவே ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலியது. உருக்கிற்கும் நிலக்கரிக்குமான ஐரோப்பிய ஒன்றியம் முதலில் 1951இல் சில ஐரோப்பிய நாடுகளிடையான ஒத்துழைப்பை உருவாக்கியது. பின்னர் 1958இல்ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, லக்சம்பேர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாகப் பல நாடுகள் இணைந்து கொண்டன.1973-ம் ஆண்டு பிரித்தானியா ஒரு கருத்துக் கணிப்பின் பின்னர் இணைந்து கொண்டது. தற்போதுள்ள ஐரோப்பிய ஒன்றியம் 1993-ம் ஆண்டு மாசுடிரிச் ஒப்பந்தம் தற்போதுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியது. தற்போது 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன, அவற்றில் 18 நாடுகள் இணைந்து யூரோ நாணயக் கட்டமைப்பில் இணைந்து அவற்றின் நாணயங்களை யூரோவாக ஏற்றுள்ளன. எனைய 10 நாடுகள் தமதுசொந்த நாணயத்தையே தொடர்ந்தும் வைத்திருக்கின்றன. புதிதாக இனி இணைந்து கொள்ளும் நாடுகள் யூரோ நாணயத்தை தமது நாட்டு நாணயமாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடன் ஐஸ்லாந்து,லீச்சேன்சுதீன், நோர்வே ஆகிய நாடுகளை இணைத்து ஐரோப்பிய பொருளாதார வலயம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுவிற்சலாந்து இந்த ஈர் அமைப்புக்களில் இல்லாத போதும் ஒரு சுதந்திரவர்த்தக வலயமாக இணைந்துள்ளது.
யூரோ நம்பிக்கையற்றோர்
பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் நைஜல் லோசன், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் மைக்கேல் போர்ட்டில்லோ, இலண்டன் நகர பிதா பொறிஸ் ஜோன்சன் ஆகியோர் 2013-ம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு மீண்டும் நெருப்பூட்டினர். அப்போது அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஸ்கொட்லந்துச் செயலர் மல்கம் ரிவ்கிண்ட் இவர்கள் ஒரு சிறு அறைக்குள் கைக்குண்டை வீசியுள்ளார்கள் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களை யூரோநம்பிக்கையற்றோர் என அழைக்கின்றார்கள்
வாழைப்பழக் கதை
12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளும் மகிழூர்தில் பாதுகாப்புப் பட்டி அணிய வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை தொடர்பான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஒன்றியத்தின் தேவையற்ற தலையீடுகள் என யூரோநம்பிக்கையற்றோர் கடும் விசனமடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழம் எப்படி இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கூட ஒன்றியம் விதித்திருந்தது. இதைத் திரித்து யூரோ நம்பிக்கையற்றவர்களின் ஊடகங்கள் வாழைப் பழம் நேராக இருக்க வேண்டும் என ஒன்றியம் கட்டுப்பாடு விதித்ததாக கதையைக் கட்டி விட்டனர்.
கட்டுப்பாடான சட்டங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான கடைப்பிடிப்புக்களும் ஊழியர் நலன் தொடர்பான நியமங்களும் பிரித்தானியாவினதிலும் பார்க்கச் சிறப்பானவை. இது பலபிரித்தானிய வலதுசாரிகளை விசனப் படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத்திலும் ஐரோப்பியப் பாராளமன்றத்திலும் இடதுசாரிக் கொள்கையுடையவர்கள் பலரின் ஆதிக்கம் நிலவுகின்றது. இதுவும் பிரித்தானிய வலதுசாரிகளை ஆத்திரப்பட வைத்துள்ளது. ஒத்மன் அபு கட்டாடா என்ற ஜோர்தான் நாட்டைச் சேர்ந்தஇஸ்லாமியத் தீவிரவாதியை பிரித்தானியாவில்இருந்து ஜோர்தானுக்கு நாடுகடத்துவதை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடை செய்திருந்தது. இதையும் யூரோநம்பிக்கையற்றோர் தமக்கு ஆதாரமான விவாதமாக முன்வைக்கின்றார்கள். பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியில் மேலும் நெருக்கமாக இணைய வேண்டும் என விரும்புகின்றன. பிரித்தானியர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிப்பதை விரும்பவில்லை.
மற்ற ஒன்றிய நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வந்து பிரித்தானியாவில் குடியேறி வேலை செய்வதைப் பல பிரித்தானியர்கள் விரும்பவில்லை. பிரித்தானிய வர்த்தக நிறுவனங்களில் 5 விழுக்காட்டிலும் குறைவானவையேஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் எல்லா வர்த்தக் நிறுவனங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறிய நாடுகளான ஐஸ்லாந்தும் சுவிற்சலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியில் இருப்பதால் சீனாவுடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திடக் கூடியதாக இருந்தன. பிரித்தானிய ஒன்றியத்தில் இருப்பதால் அப்படி ஒர் உடன்படிக்கையைக் கைச்சாத்திட முடியவில்லை.
உறுதியற்ற பொருளாதாரச் சூழல்
பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் பொருளாதார உறுதியற்ற நிலை உருவாகும் என பிரித்தானிய அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த உறுதியற்ற தன்மை இலண்டனின் பொருளாதாரத்தையும் நிதிச் சந்தையையும், புதிய முதலீடுகளையும், நாணய மதிப்பையும் பாதிக்கும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்பணி செய்யும் பிரித்தானியர்களின் வருமானத்திலும் மருத்துவப் பராமரிப்பிலும் அவர்களது ஓய்வூதியக் கொடுப்பனவுகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த யூரோ நம்பிக்கையற்றோர் இது கமரூன் கிளப்பிவிட்ட பூச்சாண்டி என்றனர்.
ஸ்கொட்லாந்து வெளியேறுமா?
பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜோன் மேஜர் பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து வெளியேறும் என்றார். ஸ்கொட்லாந்து ஒன்றியத்தில் இணைந்து இருப்பதையே விரும்புகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிவது பற்றி மீண்டும் ஒருகருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துன் படியான கோரிக்கை வலுப்பெறும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கொலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்துபிரியும் ஸ்கொட்லாந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது. இணைவதற்கான நிபந்தனைகளை அது நிறைவு செய்ய சில ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஸ்கொட்லாந்தின் வர்த்தகத்தில் அறுபது விழுக்காடு ஏனைய பிரித்தானியாவுடன் செய்யப்படுகின்றது. மேலும் 20 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் செய்யப் படுகின்றது.
இலண்டன் நிதிச் சந்தையும் பிரெஞ்சுப் பொறாமையும்
உலகின் முன்னணி நிதிச் சந்தைகளில் இலண்டனும் ஒன்றாகும். இது பிரான்சில் ஒரு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது!. இலண்டன் நிதிச் சந்தை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை இலண்டன் விரும்பவில்லை. முன்னணி வங்கிகள் தமது ஊழியர்களுக்குக் கொடுக்கும் மில்லியன் கணக்கான ஊக்கக் கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்தியும் வங்கிகளிடமிருந்து வரி அறவிட்டும் கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்கால வங்கி முறிவுகளைச் சமாளிக்கக ஒரு நிதியம் அமைக்கும் ஒன்றியத்தின் திட்டம் இலண்டனை ஆத்திரப்படுத்தியது
நோர்வே போல
யூரோநம்பிக்கையற்றோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிநோர்வேயைப் போல் ஐரோப்பியப் பொருளாதார வலயத்தில் இணைந்திருக்கலாம் எனச் சொல்கின்றனர். நோர்வேயிற்கு ஐரோப்பிய சந்தைதிறந்து விடப்பட்டுள்ளது என்றாலும் ஐரோப்பியஒன்றியம் இயற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டது. அச் சட்ட உருவாக்கத்தின் போது நோர்வேஎந்தவிதப் பங்களிப்பும் செய்ய முடியாது.
எப்படிப் பிரியும்?
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதென்பது சிக்கலான நீண்ட காலநடைமுறை. முதலில் பிரித்தானியத் தலைமை அமைச்சர் ஒன்றிய நாடுகளின் மற்ற அரசு தலைவர்களுக்கு பிரிந்து செல்லும் போக விரும்பத்தை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். பின்னர் 27 அரசுகளின் தலைவர்களும் பிரித்தானியத் தலைவருடன் பேச்சு வார்த்தை நடாத்துவர். அவர்கள் முதன்மைப் பேரம்பேசுபவர் ஒருவரை நியமிப்பர். அவர் பிரித்தானியாவுடன் பேச்சு வார்த்தை செய்து ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரிவினை உடன்படிக்கையின் வரைபைத் தயாரித்து ஒன்றியத்திடம் சமர்ப்பிப்பார். இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு மூன்று நிபந்தனைகள்உண்டு. குறைந்தது 15 நாடுகளாவது இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட நாடுகளின் மொத்த மக்கள்தொகை ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகையின் 55 விழுக்காட்டிற்குக் குறையாமல் இருக்க வேண்டும். மூன்றாவது ஐரோப்பியப் பாராளமன்றம் அதைச் சாதாரண பெரும்பான்மையுடன் ஏற்க வேண்டும். இந்த உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். அதை எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சம்மதத்துடன் நீடிக்கமுடியும். இவை நடக்காவிடில் பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து விலகமுடியும் எந்த வகையான சிறப்புத் தொடர்புகளும் இருதரப்பினருக்கும் இடையில் இருக்காது.
இந்தியா போன்ற நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்கும் தொடர்பு போன்ற ஒரு தொடர்பை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணலாம். உலக வர்த்தக நிறுவானத்தின் விதிகளின் படி பிரிந்த்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்வதை ஒன்றியத்தால் தடுக்க முடியாது.ஐரோப்பிய ஒன்றியம் என்பது சுதந்திர வர்த்தக வலயம் அல்ல ஒரு சுங்கவரி ஒன்றியம் மட்டுமே. பிரித்தானிய ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் சுங்க வரி விதிக்கலாம்.
பிரித்தானியா ஒன்றியதில் இருப்பதை அமெரிக்கா விரும்புகின்றது
பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை ஐக்கிய அமெரிக்கா விரும்புகின்றது. டேவிட் கமரூனைச் சந்தித்த பராக் ஒபாமாபிரித்தானியா ஒன்றியத்தில் இருக்க வேண்டும்எனத்தெரிவித்தார். ஒன்றுபட்ட ஐரோப்பிய நாடுகள் இரசிய அச்சுறுத்தலுக்கு உகந்தது என அமெரிக்கா நம்புகின்றது. அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் ஐரோப்பியப் பொதுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு பிரித்தானியாவில் முதலிட்டுள்ளன. உலக விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒத்துப் போவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உலக அரசுறவியல் தொடர்பான நெம்புகோலாகப் பிரித்தானியாவை அமெரிக்காவால் பாவிக்க முடியும்.
வரவா செலவா
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவிற்கு 19.2பில்லியன் பவுண்களை பிரித்தானியா2015-ம் ஆண்டு செலுத்தியுள்ளது. அதேவேளை 9.8பில்லியன் பவுண்களை பங்கீடாகத் திரும்பப்பெற்றுள்ளது. ஒன்றியத்திற்கு செய்யும் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த மேலதிகக் கொடுப்பவை ஈடு செய்கின்றது என்கின்றனர் யூரோ விரும்பிகள்.
(Brexit = British exit)