கனடா கன்சவேட்டிவ் கட்சியும் அதன் புதிய தலைவர் தெரிவும்

101

கனடாவின் எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி அதன் புதிய தலைவரை இன்று மாலை அதாவது ஆகஸ்ட் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அது தனது இரண்டாவது தலைவரைத் தெரிவு செய்கிறது. தற்போதைய கோவிட்-19 சுகாதாரக் கெடுபிடிகளின் மத்தியிலும் அதற்கேற்றாற் போல் ஒரு தேர்தல் நடைபெற்றுள்ளது. வாக்களிக்கத் தகுதிபெற்ற 2 லட்சத்து 69 ஆயிர்து 500 கட்சி உறுப்பினர்களில் ஈற்றில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேரளவில் வாக்களித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 தலைவர் தேர்தலில் 2 லட்சத்து 59 ஆயிரம் கட்சி உறுப்பினர்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தனர்.

ஆனால் 2017 தலைவர் தெரிவில் 14 பேர் போட்டிக்களத்தில் குதித்திருந்தனர். ஆனால் இம்முறை நால்வர் மட்டுமே உள்ளமை அக்கட்சி சார்ந்து கரிசனையுடன் நோக்கப்படுகிறது. போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்கள் அதில் இருந்து தம்மை விலக்கிக் கொண்டமை கட்சி எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நால்வரில் முன்னாள் அமைச்சரும் 2015 இல் அரசியலில் இருந்து விலகிச்சென்று மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள பீற்றர் மக்கே முன்னணியில் உள்ளார். அடுத்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் முக்கிய கன்சவேட்டிவ் கட்சிப்பிரமுகருமான எரனே ரூள் உள்ளார். அடுத்து கறுப்பின பெண்மணியும் வழக்கறிஞருமான லெஸ்லின் லூயிஸ் உள்ளார். ஈற்றில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் கடும்கோப்பு கருத்துகளை வெளியிடடு சர்ச்சைக்குள்ளாகும் டெரிக் சலோன் பின்தங்கி உள்ளார்.

கனடாவில் உள்ள 338 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ள கட்சி உறுப்பின்களின் வாக்குகள் தொகுதிக்கு 100 புள்ளிகள் வீதம் விகிதாசார முறையில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும். ஆகவே இவ்வாறான வாக்குகள் ஈற்றில் மொத்தம் 33 ஆயிரத்து 800 புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதில் யாரொருவர் 16 ஆயிரத்து 901 புள்ளிகளைப் பெறுகின்றாரோ அவரே தலைவராக தெரிவு செய்யப்படுவார். வாக்காளர் ஒருவர் தனது தலைவர் தெரிவாக முதல் இரண்டு மூன்று என்று தனது தெரிவுகளை இலக்கமிட முடியும். முதல் எண்ணிக்கையில் ஒருவர் ஜம்பது சதவீதத்திற்கு மேல் புள்ளிகளைப் பெறவில்லை என்றால். இறுதியில் இருப்பவர் போட்யில் இருந்து நீக்கப்பட்டு அவரின் வாக்காளர்களின் இரண்டாவது தெரிவு வாக்குகள் ஏனையவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு ஒருவர் ஜம்பது சதவீதத்தை எட்டும் வரை தொடரும்.

2017 தலைவர் தெரிவில் முதல் சுற்றில் மட்டுமல்ல 13ஆவது இறுதிச் சுற்றுவரை யாரும் ஜம்பது சதவீதத்தை எட்டவில்லை. அது அதில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அன்ரூ செயரை பலவீனமான தலைவராக வெளிப்படுத்தியது. அவரால் கட்சியை ஒருமுகப்படுத்த முடியவில்லை. இறுதிச்சுற்றிக்கு முன்னர்வரை முதலில் இருந்து இறுதிச்சுற்றில் தோற்றுப் போன மக்சி பேனியர் அவருக்கு குடைச்சலாகவே கட்சியில் தொடர்ந்து ஈற்றில் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியையும் கண்டார். அதேபோன்று இம்முறையும் முதல் சுற்றில் ஒருவர் தெரிவாகும் வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நால்வரே போட்டியில் உள்ள நிலையில் அதிகம் இரு சுற்றே செல்லாம் என்ற நிலையிலும் அவ்வாறு ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவது கூட அவரை பலவீனப்பட்டவராக வெளிப்படுத்துமா? என்ற அச்சம் உண்டு.

யார் இதில் தெரிவானாலும் கட்சியை ஒருங்கமைத்து ஒற்றுமைப்படுத்துவதில் சிக்கல் உண்டே. ஆளும் லிபரல் கட்சி சமீபத்திய சர்சையால் துவண்டிருக்கும் நிலையில் அதை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ள புதிய தலைவரின் சவால்கள் அதிகமே. அதிலும் முன்னணியில் உள்ள பீற்றர் மக்கே தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக மேற்கு கனடிய மாநிலங்களான அல்பேட்டா மனிட்டோபா சஸ்கச்சுவான் போன்ற மாநிலங்களும் கியூபெக்கும் அவருக்கு பெரும் சவாலாக மாறலாம்.

தாம் வஞ்சிக்கப்படுவதாக கருதும் மேற்கத்தைய மாநிலங்களில் மேலும் ஒரு பிரிவினைவாதக் கட்சி ஒன்றின் தோற்றம் கன்சவேட்டிவ் வாக்கு வங்கியில் பிளவுக்கு வழிவகுத்துவிடும் சவால்நிலை உண்டு. அதேவேளை கடும்கோப்பு கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தம் கொள்கைகளில் இருந்து கட்சி நழுவிச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்கள் பீற்றர் மக்கேக்கு எதிராகவே அதிகம் திரட்சி பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலைமைகள் எல்லாம் எவ்வாறான தாக்கத்தை தலைவர் தெரிவசில் ஏற்படுத்தப் போகின்றன என்பதற்கே தற்போது முடிவுகளுக்காக நாம் காத்திருக்கின்றோம்.

இதைக் கடந்தும் கன்சவேட்டிவ் கட்சி ஆட்சி செய்யும் முக்கிய மாநிலங்களான ஒன்ராரியோ மற்றும் அல்பேட்டா முதல்வர்கள் எதிர்கால தலைவர் போட்டி ஒன்றில் களம் காணக்காத்திருக்கும் நிலையில் புதிய தலைவர் ஒருவர் நிலைத்து நீண்டு செல்வதை அவர்கள் அனுமதிப்பார்களா? என்ற கேள்வியும் உண்டு. இந்நிலையில் தலைவர் தெரிவிற்கு பின்னரான காலத்தில் கன்சவேட்டிவ் கட்சியின் நிலையை மேலும் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

Nehru Guna