ஒரு குட்டி கதை…

106

பெருமைமிகுந்த நம் முன்னோர்களின் வணிகத்தை மீட்டெடுப்போம்னு ஒரு புது முழக்கம் அதிகமாகக் கேட்கிறது..!

ஒரு குட்டி கதை

ஒரு ஊரில் இருந்த ஒரு கூட்டம் அந்த ஊரிலிருந்து பல கூட்டங்களை அடிமைகளாக அழைத்துக் கொண்டு பர்மாவுக்கு சென்றதாம்..பர்மிய தேசத்தின் தேக்கு மரக் காடுகளையெல்லாம் சூறையாடி தங்கள் ஊரில் ஆயிரம் சன்னல்களைக் கொண்ட அற்புத மாளிகைகளை எழுப்பியதாம்..!

போன இடத்தில் ஒரு பிரச்சினை வர..அந்த கூட்டம் கடையை சுருட்டிக் கொண்டு நாலாபுறமும் தெறித்தோடி உயிர் பிழைத்ததாம்..! அழைத்து செல்லப்பட்ட அடிமைக் கூட்டமோ உழைத்து உழைத்து உயிர் வற்றிப்போன உடலை வைத்துக் கொண்டு அடிப்பட்டு மிதிப்பட்டு ஆயிரம் ஆயிரமாக கொத்துக் கொத்தாக செத்து விழுந்ததாம்..!

செத்தப் பிணங்களை தூக்க கூட நாதியற்று எலும்புக் கூடுகளாக ஒரு இரயில் பாதையின் இருபுறமும் கிடந்ததாம்..!

ஊரிலிருந்த அந்த அடிமைகளின் சந்ததிகளோ அந்த ஆயிரம் சன்னல் வீடுகளைப் பார்த்து பெருமை பொங்க சொன்னார்களாம்…”பாருங்கள் எமது முன்னோர்களின் கட்டடக் கலை திறமைகளையும் வளங்குற்றா வாழ்வையும்” என்று…

அவர்களுக்கு தங்கள் முன்னோர்கள் யார் என்பதே தெரியவில்லை…பின் அவர்கள்தம் முன்னோரின் ஆன்மாக்கள் பர்மாவின் தேக்குமரக் காடுகளிலும் மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும் மொரிசியசின் கரும்புத் தோட்டங்களிலும் விம்மி அழுவது எப்படி இவர்கள் காதுகளில் விழும்..?

ஆரல்கதிர் மருகன்