இந்திய ஒன்றியமும்,சீன கம்யூனிசமும்

83

அதிக மக்கள் தொகை, மண்டையில் இருக்கும் ஒருவகையான கொண்டை (நம்மூரில் குடுமி

என்பார்கள்) இவற்றைத்தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை.

‘பலமுள்ள அண்டைவீட்டுக்காரன் இயற்கையான எதிரி’ என்பது இந்தியப் பழமொழி. ‘ஒரே மலையில் இரு புலிகள் வாழ முடியாது’ என்பது சீனப்பழமொழி. இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஏழாம் பொருத்தத்தை விளக்க இந்த இரு பழமொழிகளே போதும்.

எப்போதும் விரிசல்தான், உரசல்தான் என்ற நிலையில், இப்போது காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் கைகலப்பு முற்றி, உயிரிழப்பு வரை போயிருக்கிறது.

கற்காலம் போல அல்லது யதார்த்த சினிமாவில் வரும் சண்டைக்காட்சி போல கற்களாலும், கைகளாலும் சண்டை நடந்திருக்கிறது. ஜில்லென ஓடும் கல்வான் ஆற்றில் பிடித்து தள்ளிவிட்டும், முள்கம்பிகளால் அடித்தும் சண்டை நடந்திருக்கிறது. இறந்த ராணுவ வீரர்களில் பலர் குளிரால் ஏற்படும் ஹைபோதெர்மியாவால் இறந்திருக்கிறார்கள்.

1962ல் நடந்த சீன இந்தியப் போரில், இந்தியாவின் கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த நாயக் சுபேதார் ஜங் பகதூர் குருங் என்பவர்தான் கல்வான் பள்ளத்தாக்கை காப்பாற்றி இந்தியாவுடன் சேர்க்க உதவியவர். இப்போது அதே பள்ளத்தாக்கில், கல்வான் ஆற்றின் தென்கரையில், அத்துமீறி சீனா புறக்காவல்மையம் அமைக்க முயன்றபோது தகராறு முற்றி உயிரிழப்பில் முடிந்திருக்கிறது.

காஷ்மீர் லடாக்கில் இந்திய-சீன மோதல் இப்போதைக்கு ஒருவேளை ஓயலாம். அல்லது ஓய்வதைப் போலத் தோன்றலாம். ஆனால், வருங்காலத்தில் இதைவிட பெரிய பெரிய ‘சம்பவங்கள்’ காத்திருக்கின்றன என்பதே உண்மை.

உலகத்தின் கூரை எனப்படும் திபேத் இப்போது சீனாவின் கையில்தான் இருக்கிறது. அதுபோல இமயம் என்ற பனிச்சுவரின் உச்சியைக் கைப்பற்றி, இந்தியாவில் ஓடும் எல்லா ஆறுகளையும் எதிர்காலத்தில் திசைதிருப்பிவிடும் திட்டம் சீனாவிடம் இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக, ஏற்கெனவே பிரம்மபுத்திரா ஆற்றைத் திசை திருப்பி, ஆயிரம் கிலோ மீட்டர் நீள குகைப்பாதை வழியே அதை வேறு இடத்துக்குக் கூட்டிச் செல்ல சீனா முயற்சித்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் கங்கையும், யமுனையும் ஓடும் வடஇந்திய சமவெளி முழுக்க முழுக்க, ஒருநாள் தகதகக்கும் தார் பாலைவனமாகப் போகும் நாள் தொலைவில் இல்லை. அப்படி வந்தால் நேரு மீது எல்லாம் குற்றம் சொல்ல முடியாது.

காஷ்மீரின் லடாக் பகுதி சீனாவுக்கு வடக்கு வாசல். அதுபோல அருணாசலப் பிரதேசம் வடகிழக்கு வாசல். நாளை இந்திய சீனப் போர் மூண்டால் மியான்மர் வழியாக, ‘சாலை வழியே’ கூட, சீன ராணுவம் வங்கக்கடலுக்கு வந்துவிட முடியும். இது கிழக்கு வாசல்.

அதுபோல காரகோரம் நெடுஞ்சாலை வழியாக சீன ராணுவம் பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்துக்கு வந்துவிடலாம். குவாதர் துறைமுகத்தை 40 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் சீனா இப்போது தன்வசம் வைத்திருக்கிறது. இது மேற்கு வாசல்.

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இது தெற்கு வாசல். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூதி நாட்டின் துறைமுகத்திலும் சீனா தளம் அமைத்துள்ளது. இது தென்மேற்கு வாசல்.

ஆக, இந்தியாவின் வடமேற்கே மட்டும்தான் சீனா இருக்கிறது என்ற நிலையை மாற்றி, தனது ஆக்டோபஸ் கரங்களால் இந்தியாவை நாலாபுறமும் சீனா இப்போது அள்ளி அரவணைத்தபடி இருக்கிறது.

ம்! விரைவில் சீனமொழியைக் கற்றுக் கொள்ளும் நிலை வந்துவிடுமோ என்னவோ?

நன்றி – மோகன ரூபன்