இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலி கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இங்கு கண்டறியப்பட்ட வைரஸ் பாதிப்பு மிகவேகமாக பரவத்தொடங்கியது. நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளால் நிலைகுலைந்த இத்தாலி, நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட பெரும் முயற்சியால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
இதனால் இரண்டு மாதங்களாக பிறப்பிக்கபபட்ட ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை அங்கு கொரோனாவால் 2,32,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33,229 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆனால் தொடர் ஊரடங்கால் இத்தாலி கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் கான் பெர்செண்டி, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மிகவும் ஆபத்தானது எனவும் உடல் நலன், பொருளாதார அவசர நிலை வணிகங்கள், கடைகள் சேவைகள் மற்றும் சுற்றுலா என அனைத்திலிருந்தும் நாடு விலகிச் சென்றுள்ளதாக தெரிவித்தார். ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் மக்களின் கையில் பணம் இல்லாததால் பணப் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், எனவே அரசாங்கம் வணிகர்களுக்கு அறிவித்துள்ள கடன்கள் மற்றும் மானியங்களை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.