ஈழத்தில் கொரானா கால மீட்பும் தொடர்களும் , தமிழரும்

59

ஒரு நோய் மக்களைத் தாக்குகின்றது
மக்கள் வீட்டுக்குள் முடங்குகின்றார்கள்.

ஆனால் தன்னார்வமுள்ள இளைய தமிழ் சமூகம் வெளியில் திரிகின்றது! ஏன் அந்த நோய் அவர்களைத் தாக்காதா?

ஏன் அவர்கள் இப்படியாக குக்கிராமங்களின் வீதி வழியே திரிய வேண்டும்?
தாங்களும், தங்கள் குடும்பங்களும் அல்லது தங்கள் கிராமங்கள் என்று உதவிகளைச் செய்துவிட்டு, வீட்டுக்குள் ஒரு நாளுக்கு ஒரு படம் என்று பார்த்துவிட்டு சந்தோசமாக இந்த நாட்களைக் கடந்திருக்கலாம்!!

ஆரம்பத்தில் தன்னார்வமுள்ள இளையோர்களினால் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த இடர்கால உதவித்திட்டங்கள், இன்று தடம்மாறி, சிலரால் தங்கள் சுற்றுவட்டம் தங்கள் கிராமங்கள் என்ற அளவிற்கு குறுகிக்கொண்டு வருவதை சில முகநூல் பதிவுகளிலும் வாய்வழி மூலமாகவும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. இது மிகவும் ஆபத்தானது. உதாரணமாக 60 குடும்பங்கள் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டு உறவுகளால் 15 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதுவும் முதற்கட்டமாக!
இன்னொரு பகுதியினருக்கு 5 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் செல்லப்படுகிறது. இது ஒரு ஆபத்தான செயற்பாடு.

இனிவரும் காலங்கள் மிக மோசமாக இருக்கப்போகின்றது. பல சிறிய கடைகளில் உணவுப் பொருட்கள் முடிவடைந்துவிட்டன. இருக்கும் பல கடைகள் விலையை கூட்டி விற்கின்றன, இன்னும் சில முதலாளிகள் பதுக்கி வைத்தவற்றை இனித்தான் வெளியில் எடுத்து அதி கூடிய விலைக்கு விற்பார்கள். இந்த நிலையில் தங்கள் கிராமங்களுக்கு மட்டுமான இப்படிப்பட்ட உதவிகள் விரிவடைந்து செல்லுமாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட கிராமம் எந்த பிரச்சனைகளும் இல்லாமலும் அதற்குப் பக்கத்துக் கிராமம் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டியும் வரும். நேற்று ஒரு பிரதேசத்தில் தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது. ஒரு பிரதேசத்தில் களவு செய்ததாக ஒருவர் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டுள்ளார். இதுதான் இந்தக் கொடிய நோயினால் ஏற்பட்டுள்ள பாரிய விளைவு. இது இனிவரும் காலங்களில் தொடரத்தான் போகின்றது. இப்படியான துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் உதவி செய்வதற்கு தகுதியுள்ளவர்கள் தன்னார்வ இளைஞர் குழுக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இன்று களத்தில் பல இளைஞர் குழுக்கள் செயலாற்றிக்கொண்டு இருக்கின்றது. அதில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் அரசாங்க நிதியில் தங்கள் வாக்கு வங்கிக்காக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சில தங்கள் அரசியல் கட்சி சார்ந்து செயற்படுகின்றன. சில தன்னிச்சையாக தங்களுக்குக் கிடைக்கும் நிதிகளில் பிரதேச செயலகங்களில் தரவுகளை எடுத்து அந்தந்த கிராம சேவையாளர்கள் ஊடாக உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆகவே இயலுமானவரை குறுகிய நோக்கங்களுடன் செயற்படுவதை விடுத்து பரந்துபட்ட அளவில் களத்திலிருந்து செயலாற்றும் இளைஞர்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளை வழங்கினால் நன்று. அதுதான் எங்களுடைய மக்களுக்காக நீங்கள் செய்யும் மிகச்சிறந்த சேவையாக இருக்கும்.

Y Raveendiren