1969ம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து அனைவரும் வியக்கும் வகையில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த கருணாநிதி. ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.
கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ 57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!!. இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.
20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ. 57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த ஆவணத்தின்படி, கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.
11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.
நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்.. தொடரும்…