நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்துமே ஏற்றுக்கொள்வனவாக அமைவதில்லை

66

உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை பற்றிய சர்ச்சைகள், விவாதங்கள் பல நடப்பதுண்டு. சட்ட வல்லுநர்கள், சட்ட அறிவும் நுணுக்கமும் அறிந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தத் தீர்ப்பில் எவ்வாறு தவறு நிகழ்ந்துள்ளது? அதனால் ஏற்படக்கூடிய அநீதிகள் போன்றவற்றை விவாதிப்பார்கள். எழுதவும் செய்வார்கள்.

சில சமயங்களில் நீதிமன்றங்கள் ஆளும் அரசின் கைப்பாவையாக கூட செயல்பட்டதுண்டு. அரசு தான் நினைத்தவற்றை நீதிமன்றங்கள் வாயிலாக கூட சாதித்ததுண்டு.

இன்றைய ஜனநாயக ஆட்சியில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டுமே உண்டு. அதாவது பல இடங்களில் பலரும் அரசை விமர்சனம் செய்யலாம். ஆனால் அந்த விமர்சனங்கள் தற்காலிகமானதாக இருந்தால் அதில் விமர்சிப்பவருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் வலுவாக நின்று அரசின் முடிவுகளை ஆவணப்படுத்தி எழுதும்போது பல மிரட்டல்கள், வழக்குகள் போன்றவைகளை சந்திக்க நேரும். அதையும் மீறி ஒருவர் செயல்படும்போது கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு அரசியல் கொலைகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே எழுதலாம்.

ஆனால் எந்த வழக்கிலும் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். இது தான் அரசியல் தந்திரம். இதற்கு அனைத்து கட்சியிலுமே உதாரணங்கள் உண்டு. ஜனநாயக ஆட்சியில் வெளிப்படையாக எந்தவொரு சம்பவங்களும் நிகழ்ந்துவிடாது. ஆனாலும் பொதுப்பார்வையில் கருத்து சுதந்திரம் என்பது முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதனை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வோரும் இருப்பர்.

இதேபோல் சங்க காலத்தில் மன்னராட்சி முறையில் வழங்கப்படும் தவறான தீர்ப்புகளை விமர்சித்தவர்கள் உண்டா? என ஆராய்கையில் குறுந்தொகையில் ஒரு பாடல் சிக்கியது.

பொதுவாக அக்காலத்தில் கொலை குற்றம் தவிர்த்து பிற குற்றங்கள் செய்தோர் அவர்களின் எடைக்கு ஈடான பொன்னை அரசருக்கு கொடுத்து தண்டனையில் இருந்து விடுபடலாமாம்.

பண்டைய தமிழ் நிலப்பரப்பில் முக்கிய அங்கம் வகித்த இன்றைய வடமேற்கு பிராந்தியமான கொங்கன் பகுதியை ஆண்டு வந்தவன் நன்னன் எனும் அரசன். அக்காலத்தில் ஒவ்வொரு அரச மரபும் ஒரு மரத்தினை காவல் மரமாக கொண்டிருப்பர். அம்மரத்தினை வெட்டுவதோ, கிளையை உடைப்பதோ, காய், கனி, பூ போன்றவைகளை பறிப்பதோ பெருங்குற்றம்.

நன்னனுடைய அரசின் அடையாளமான காவல் மரம் மாமரம். அந்த மாமரத்தில் இருந்து ஒரு மாங்காய் ஆற்றில் விழுந்துவிட அந்த ஆற்றில் நீராட வந்த சிறுமி ஒருவள் அதனை எடுத்து தின்றுவிட்டாள். இதனை பார்த்த காவலாளி அவளை குண்டுக்கட்டாக அரசவைக்கு கொண்டு வர, கோபமடைந்த மன்னன் அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.

பெரும் செல்வந்தரான அச்சிறுமியின் தந்தை இச்செய்தி அறிந்து ஓடோடி வந்து மன்னனிடம் தான் 81 யானைகளையும் பொன்னாலான பாவையையும் இதற்கு அபராதமாக அளிக்கிறேன் என கூறியும் அதற்கு இணங்காத நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து கொன்றுவிட்டான்.

ஆற்றில் விழுந்த மாங்காயை எடுத்து தின்றது ஒரு தற்செயலான நிகழ்வு தான் எனினும் அதற்கு ஈடாக 81 யானைகளையும் பொன்னாலான பாவையையும் அளிக்க சிறுமியின் தந்தை முன்வந்தும் கூட அதற்கு இணங்காத அரசனை சங்கப் புலவர் ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என விமர்சிக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் இனி நன்னனை புகழ்ந்து எந்தவொரு புலவனும் பாடவும் கூடாது என முடிவு செய்கிறார்கள். சங்க இலக்கியங்களில் (புறம் 151 காண்க) சில இடங்களில் நன்னன் அவனது இச்செயலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறான்.

இன்றைய சூழலில் ஒரு அமைச்சரையோ அல்லது கவுன்சிலரையோ அவரது செயல்பாடுகளை விமர்சனம் செய்ய ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் ஜனநாயக உரிமைகள் இல்லாத அன்றைய மன்னராட்சி காலத்தில் ஒரு தமிழ்ப்புலவனுக்கு மன்னனின் தீர்ப்பை விமர்சிக்கும் அளவு துணிச்சல் இருந்துள்ளது. எனில் அக்காலத்தில் தமிழுக்கும் தமிழ் புலவருக்கும் எந்தளவுக்கு உயர்வும் சிறப்பும் இருந்திருக்க வேண்டும் என அறிந்துக்கொள்ள முடிகிறது. இப்படி அசாத்திய துணிவை பெற்ற புலவர் வேறுயாருமில்லை பரணர் தான். அவர் தனது குறுந்தொகையில்,

“மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு

ஒன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன் போல” – 292.

நன்றி – Vicky Kannan