கோவிட்-19 இன் தாக்கம் குறித்த பல ஆய்வுகள் முனைப்புப் பெறும் இன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு ஆய்வு பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. பெப்பிரவரி 6ஆம் நாளுக்கும் ஏப்ரல் 18ஆம் நாளுக்கும் இடையில் பிரித்தானியாவின் 166 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 16749 பேரை மையப்படுத்திய தகவல்களை இவ்வாய்வு உள்வாங்கியுள்ளது. அதாவது அன்றைய நாளில் பிரித்தானியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று உடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் இது 14.7 சதவீதமாகும். இவர்கள் குறித்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதில் 239 பேர் 18 வயதிற்கு குறைந்தவர்களாகவும்இ அதிலும் 139 பேர் 5 வயதிற்கு குறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர். ஆணா பெண்ணா என்ற தரவுகள் உள்ள 76.1 சதவீதம் பேரில் 60 சதவீதம் ஆண்களும் 40 சதவீதம் பெண்களும் ஆகும். இருக்க இவ்வாறு வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் பிள்ளை பெறும் வயதில் இருந்த பெண்களில் 55 சதவீதமானோர் கர்ப்பிணிகளாக இருந்துள்ள்னர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் தரவுகள் உள்ளவர்களில் 49 சதவீதமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளை 33 சதவீதமானோர் வைத்தியசாலைகளில் மரணத்தைத் தழுவியுள்ளனர். ஏப்ரல் 18ஆம் நாள் நிலையில் 17 சதவீதமானோர் தொடர்ந்தும் வைத்திய சிகிச்சையில் வைத்தியசாலைகளில் இருந்துள்ளனர். அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 45 சதவீதமானோர் மரணத்தைத் தழுவினர். 31 சதவீதமானோரே குணமாகி வீடுதிரும்பினர். 24 சதவீதமானோர் அன்றைய நிலையில் தொடர் சிகிச்சையில் இருநதுள்ளனர். வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 53 சதவீதமானோர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். 27 சதவீதமானோர் அன்றைய நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளனர். 20 சதவீதமானோரே குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும் பான்மையானோர் இருமல் காச்சல் சுவாசிப்பதற்கு சிரமம் உடையவர்களாக இருந்துள்ளனர். அதேவேளை இறந்தவர்களில் கறுப்பின தென்னாசியர்களின் மற்றும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அவர்களது விகிதாரத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகமாக இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.