இன்று உலகளாவி வழமைக்குத் திரும்பல் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்வாறு நோய்ப்பரம்பலை தடுப்பதற்கான கடுமையான முடக்கநிலையை தளர்த்தி, வழமைக்கு படிப்படியாக திரும்ப முனைந்தால் பின்வரும் விடயங்கள் அதற்காக தயார் நிலையில் இருந்தாக வேண்டும். முதலாவது போதியளவிலான நோய்த்தொற்றுப் பரிசோதனைகள். அவ்வாறு இருந்தால் மட்டுமே வழமைக்குத் திரும்பும்போது, அதனால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கின்றதா? என்பதை உடன் கவனத்தில் கொண்டு ஆவண செய்ய முடியும். இல்லையேல் அது பெரும் எண்ணிக்கையிலான நோய்ப்பரம்பலுக்கு வழிகோலிவிடும். அது ஆபத்தான் நிலைமைக்கு மீண்டும் அந்நாட்டை இட்டுச்சென்றுவிடும். இதில் உள்ள சவால் என்னவென்றால் நோய்த்தொற்றுப் பரம்பல் 1 இற்குக் குறைவாக இருக்க வேண்டும். அதாவது 1 ஆக இருந்தால் ஒரிவரில் இருந்து மேலும் ஒருவருக்குத் தொற்றும் நிலை தொடர்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.
ஒன்றிற்கு மேல் எவ்வளவு அதிகரித்துச் செல்கிறதோ அந்தளவிற்கு நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கிறது, அபாயம் என்பது எச்சரிக்கை. ஒன்றிற்குக் கீழே எவ்வளவு குறைகிறதோ, அதுவும் 0.3 இற்குக் கீழே தொடர்ந்தும் பேணப்படுமானால், நோய்த்தொற்று சிறப்பாக கட்டுக்குள் இருக்கும் எனக் கொள்ளலாம். ஆகவே வழமைக்கு கட்டம் கட்டமாக திரும்பும் போது இந்நிலை பேணப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க நோய்த்தொற்று கோதனைகள் அத்தியாவசியமானவை. அதுவும் அதிகரித்த எண்ணிக்கையில்.
இரண்டாவது நோய்த்தொற்று பரம்பலை போதிய சோதனைகள் மூலம் கண்டறியும் அதேவேளை அவ்வாறானவர்களுடன் தொடர்புடையவர்களை உடன் இனம் கண்டு அவர்களையும் உரிய காலத்தில் தனிமைப்படுத்துவதற்கான முறைமைகள். இவற்றிற்கான தயார் நிலையை எட்டிவிட்ட எந்நாடும் வழமைக்குத் திரும்பலை சிறப்பாக முறையில் முன்னெடுக்க முடியும். ஆனால் இதற்கான முழுமையான தயார் நிலையில் பல நாடுகள் இல்லாத நிலையிலேயே வழமைக்கு திரும்ப முனைகின்றன என்பதே அச்சம் தருகிறது.
அவ்வகையில் அமெரிக்க உதவி சனாதிபதி சமீபத்தில் ஒரு கருத்தை முன்வைத்தார். நாம் தென் கொரியாவை விட மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடுமிடத்து அதிகரித்த சோதனைகளைச் செய்துள்ளோம் என்றார். அவர் சொன்னது தரவு ரீதியாக சரியானது. கோவிட்-19 வைரஸ் பரம்பலை கட்டுக்குள் கொண்டு வருவதில் தென் கொரிய அரச நடவடிக்கை ஒரு முன் உதாரணமாக பலரால் தொடர்ந்து பேசப்படுகிறது. அதாவது நோய்த்தொற்று ஆரம்ப காலத்திலேயே அதிகளவு சோதனைகளைச் செய்து அதன் மூலமான முன்னெடுப்|புக்களினால் சிறப்பாக தொழிலாற்றி பரம்பலை தென் கொரியா கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னரான காலத்தில் அதன் சோதனைத் தேவைகள் பெரிதும் அற்ற நிலையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக ஆரம்பத்தில் சோதனைகளில் கோட்டைவிட்ட பெரும்பாலான நாடுகள் பின்னர் அவ்வெண்ணிக்கையில் தென்கொரியாவைக் கடந்து அதிகரித்த நிலையை அடைந்துவிட்ட இன்றைய நிலையில் தென் கொரியாவுடன் ஒப்பிட்டுப் பேசுவது நகைப்பிற்கிடமானது.
சரி இன்றைய நிலையில் நாடுகளின் சோதனை நிலைகளையும் அதில் அமெரிக்காவின் நிலையையும் பார்த்தால் தமது வசதிக்காக உண்மைகளை மறைத்து பேசுகின்ற தலைவர்களின் போக்கை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வழமைக்கு திரும்புவதற்கு நாடுகள் தயார் நிலையை எட்டிவிட்டனவா? என்பதையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். அதாவது கேக்கிறவன் கேனையனென்டால் எருமை மாடும் ஏறேப்பிளேன் ஓட்டுமான் நிலை தான் பாவம் பொது சனங்களான எமக்கு!!!
கீழ்வரும் தரவுகள் மில்லியன் மக்களுக்கு எத்தனை சோதனைகள் நாடுகளில் செய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் வரிசைக் கிரமத்தில் தரப்பட்டுள்ளன.
- ஜஸ்லண்ட் – 1,39,411
- ஜக்கிய அரபு ராச்சியம் – 1,16,883
- பகரீன் – 72,278
- மோல்டா 71,875
- லக்சம்பேர்க் – 66,708
- சைப்பிறஸ் – 44,079
- லித்துவேனியா – 42,300
- குவைத் – 41,915
- இஸ்ரேல் – 39,240
- எஸ்தோனியா – 38,588
- போத்துக்கல் – 37,223
- கட்டார் – 31,730
- இத்தாலி – 31,603
- நோர்வே – 31,197
- அயர்லாந்து – 31,179
- டென்மார்க் – 31,087
- ஸ்பெயின் – 30,253
- சுவிட்சலாந்து – 30,100
- லாவியா – 29,059
- ஒஸ்ரியா – 27,829
- நியூசிலாந்து – 26,690
- ஜேர்மனி – 24,927
- சுலவேனியா – 24,824
- சிங்கப்பூர் – 24,600
- ரஸ்சியா – 22,638
- செச்சியா – 22,065
- அவுஸ்திரேலியா – 21,350
- கனடா – 19,999
- பெல்ஜியம் – 19,563
- கொங்கோங் – 19,426
- அமெரிக்கா – 18,216
இப்போது புரிகிறதா? அதாவது 31 ஆவது இடத்தில் பரிசோதனையில் மக்கள் தொகை அடிப்படையில் உள்ள அமெரிக்கா தென் கொரியாவை மட்டும் பேசி தான் முதலிடத்தில் உலகில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை ஏற்ப்படுத்த முனைவது எவ்வளவு அபத்தமானது.
இருக்க மில்லியனுக்கு வெறும் 2000 பேருக்கே சோதனைகளைச் செய்துவிட்டு யப்பான் இன்று மாட்டிக் கொண்டுள்ள நிலையும் மில்லியனுக்கு 24,600 சோதனைகளைச் செய்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது மீண்டும் மாட்டிக் கொண்டுள்ள சிங்கப்பூரும் சரி மில்லியனுக்கு 24,927 சோதனைகளை செய்து சிறப்பாக செயற்பட்ட நாடாக ஜரோப்பாவில் பேசப்பட்ட ஜேர்மனி கட்டுப்பாடுகளை சிறிதாகத் தளர்த்த தற்போது நோய்த்தொற்று மீண்டும் 1 என்ற நிலையை அடைய தடுமாறுவதையும் படிப்பினைகளாக இந்நாடுகள் கொண்டு வழமைக்குத் திரும்பும் தமது திட்டமிடலை இடுவார்களாக இருந்தால் மட்டுமே உண்டு வாழ்வு. இல்லையேல் பொருளாதார ரீதியாக மேலதிக பாதிப்புகளை அது ஈட்டித்தரும்.
– நேரு