மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படும் விதம் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய கொழும்பு , கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை , அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினமே மீண்டும் இரவு 8 மணிக்கு மீள பிறப்பிக்கப்படவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் தொழிலுக்கு செல்வதற்காகவும் அத்தியாவசிய கடமைகளுக்காகவும் பிரதான வீதிகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிமித்தமான தேவைக்காக மாத்திரம் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் , பகுதி நேர வகுப்புகள் , திரையரங்குகள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் , வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வழமை போன்று இயங்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்குள் அரச நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களும் ஏனைய பகுதிகளில் 50 வீதமான ஊழியர்களும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனைய அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய ஊழியர்கள் தொடர்பில் நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகளின் நியமங்களை பின்பற்ற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் , ரயில்கள் மற்றும் வேன்களில் அவற்றில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையில் 50 வீதமானவர்களே பயணிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
அனைத்து விதமான வைபவங்கள் , யாத்திரைகள் , களியாட்டங்கள், சுற்றுலாப் பயணங்கள் , ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள் என்பன மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இடையூறாக அமையும் என்பதால், மத நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டவுடன் அநாவசிய குழப்பத்துடன் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களை ஆட்கொல்லி வைரஸிலிருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறும் சிறிலங்கா அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Maniraj