கொரோணா நோய்த் தாக்கம் காரணமாக பாதிக்ப்பட்ட மக்களிற்கு உதவிகள் வழங்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிற்கான எமது தயவான வேண்டுகோள்
கொரோணா நோய்த் தாக்கம் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்;டத்தினால் மிகவும் பாதிப்பு நிலையினை எதிர் கொண்டுள்ள மக்களிற்கு உடனடி அவசர அவசிய பணிகளை நாம் செவ்வனே நிறைவேற்றி வருகின்றோம்.
காலத்திற்கு காலம் திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக முறையின் மூலம் பாதிப்பு நிலையினை எதிர்நோக்கியுள்ள மக்களிற்கு அரச மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் பொது அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் உதவியுடன் அவர்களின் தேவையினை சரியான வகையில் மதிப்பீடு செய்து பொருத்தமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் மூலம் பாதிப்பு நிலையினை எதிர்நோக்கியுள்ள மக்கள் அனைவருக்கும் உதவிகள் சென்றடைவதை நாம் பலமுறை உறுதிப்படுத்துவதுடன் இவற்றை தொடர்ச்சியாக நாள்தோறும் கண்காணிக்கின்றோம்.
இருப்பினும் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை சார்ந்தவர்கள் இத்தகைய நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக முறைக்கு அப்பால் தமது சுய விருப்பின் அடிப்படையிலும் பொது மக்கள் சிலரால் வழங்கப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களின் அடிப்படையிலும் சில நிவாரண உதவிகளை மேற்கொள்வதால் இவ் அவசர அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்கப்படும் நிவாரண விநியோகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுவதும் அது தொடர்பில் பல பொதுமக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்வதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எங்களது முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அலகு முறைக்கு அப்பால் சென்று தமது சுய விருப்பின் அடிப்படையில் சிலர் செயற்படுவதே இந்த வேறுபாட்டிற்கு காரணம் என்பதை சகலரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த அவசர நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு உதவிக்கரம் நீட்டும் அனைத்து நல் உள்ளங்களையும் நாம் அன்போடு வரவேற்பதுடன் அவர்களது சேவையினையும் அற்பணிப்பையும் நாம் மிகவும் உயர்வாக மதிக்கின்றோம் இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவிகள் சம அளவில் சென்றடைவதற்கு ஏதுவாக எமது நிர்வாக ஒழுங்கின் கீழ் எம்முடன் இணைந்து பணியாற்றுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ் அறிவித்தல் தற்கால அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருதிய எமது தயவான அறிவித்தல் ஆகும்.