முள்ளிவாய்க்கால் கடைசி யுத்த நேரம் கஞ்சிக்காகவும் குழந்தைகளின் பாலுக்காகவும் வறுமையின் பிடியோடு வரிசையில் நின்று ஏம்பலித்தவர்களுக்கு கடைசியான மூன்று நாட்களில் பதுக்கி வைத்த முதலைகள் உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு துண்டக்காணோம் துணியக் காணோம் என ஓடிவிட, அங்கர் பால்மா தொடக்கம் அரிசியோடு கோதுமை மா எண்ணொய் என சிதறிக்கிடந்த கதையும் உண்டு.
ஆட்டோ கொடுத்து அரிசி வாங்கியோரும் உண்டு.
கஞ்சிக்காக கால்கடுத்து சுடுகஞ்சியோடு திரும்பிய குஞ்சு குருமான்களை குண்டுகள் பல தின்ற கதையுமுண்டு.
கௌரவத்திற்காக பதுங்கு குழிக்குள்ளேயே பரிதவித்து பட்டினிகிடந்து செத்தோரும் உண்டு.
குண்டு மழையோடும் கொடிய விதிமுறைகளோடும் குழந்தைகளோடு அல்லல்பட்டு உணவு தேட பெண்கள் பட்ட அவலக்கதைகளும் அடுக்கடுக்காக உண்டு.
மனித நீதிக்கப்பால் இக்கட்டான நிலையிலும் கொடும் பாதகம் செய்தோரையும் கடைசியில் எந்த வித ஏற்றத்தாழ்வுமின்றி ஒரே தராசில் நிறுக்கப்பட்டு அனுப்பிய இடம் முள்ளிவாய்க்கால் யுத்தம்.
இப்போதும் உணவுப் பதுக்கலிலும் அநீதி விலைகளிலும் கொள்ளை லாபம் ஈட்ட ஏழைகளின் குருதியோடு விளையாடும் அத்தனை பேரும் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும்.
நீங்கள் உங்கள் பெருத்த லாப உண்டியலின் வயிற்றை நிரப்ப யாரைப் பயன்படுத்துகிறீர்கள் என சிந்தித்துப் பாருங்கள். தவறிப்பிறந்த மனித உருப் போர்த்த ஜென்மங்களே! உங்கள் மனச்சாட்சி கடைசிப் பிரளயங்களின் அறிகுறி பல வந்தாலும் திருந்திச் சாகாதோ?
தேவாங்குக் கூட்டம்.
– Latha