நம்பவைத்து வாக்கும் பெற்றாயிற்று.. வடையும் கொடுத்தாச்சு.. அரச வேலைவாய்பிற்கு நம்பிய 20 ஆயிரம் நடுத்தெருவில்
க.பொ.த சாதாரணம் அதாவது 10ஆவது வரை கல்வியில் தேர்வு பெற்ற ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளதாக கோத்தா சனாதிபதியானதும் அறிவித்தார். இதற்கென விண்ணப்பங்களும் கோரப்பட்டு அதற்கான நேர்முகங்களும் நடைபெற்றன. வடக்குக் கிழக்கில் இவை நடைபெற்றபோது படை அதிகாரிகளும் அதில் பிரசன்னமாகியிருந்து சம்பந்தப்பட்டவர்களின் தரவுகளை தாமும் சேகரித்துக் கொண்டனர். இதன்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களிற்கு 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
பாராளுமன்றத்தேர்தல் காலத்தில் நியமனங்கள் வழங்கப்படுவதில் சிக்கல் எழுந்தநிலையில், தேர்தலுக்குப் பின்னர் 50 ஆயிரம் நியமனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே திடீரென, “வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான நியமனம் வழங்கும் விடயத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பலநோக்கு அபிவிருத்திக்கான செயலணி தற்சமயத்துக்கு கவனத்தில் கொள்வதில்லை என்பதை அறியத்தருகின்றோம்”, என உள்நாட்டலுவல்கள் அமைச்சு வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களின் மாவட்டச்செயலகங்களிற்கும் பிரதேச செயலகங்களிற்கும் அறிவித்துள்ளது.
கிராமசேவகர் பிரிவுகளாக நடைபெற்ற நேர்முகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,626, கிளிநொச்சி மாவட்டத்தில் 2,261, பேரென ஏறத்தாள 9 ஆயிரம் பேர் அரச வேலைவாய்பிற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் தனிப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டே, “நீங்களும் உங்கள் குடும்பமும் வாக்களித்து எம்மவரை வெற்றிபெற வைத்தாலே உங்கள் அரசவேலை உறுதியாகும்,” என உசுப்பேற்றி, மறுபுறத்தில் மிரட்டி வாக்கை பெற்று சுதந்திரக்கட்சி வேட்பாளரை, அவரின் எடுபிடிகள் வெற்றியாளர் அக்கியும் விட்டார்கள். ஆனால் 9 ஆயிரம் பேரும் அவர்கள் வறுமையான குடும்பங்களும் தான் தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
தவிர முல்லைத்தீவு 1,565, வவுனியா 1,258, மன்னாரில் 1,830, என வேலை வாய்பிற்கென தகுதியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கிழக்கிலும் மேலும் 10 ஆயிரம் பேர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே அதிகம் குடும்பங்களைக் கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகமே திகழும் இன்றைய நிலையில், அவர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது என்பது தமிழர் சமூகத்தை தொடர்ந்தும் தங்கு நிலை சமூகமாகவே வைத்துக் கொள்ள கோத்தா விரும்புவதையே காட்டுகிறது. அன்றாட தேவைகளுக்கே அல்லாடும் சமூகமாக இழிநிலையில் தமிழர் சமூகம் அல்லாடுவதை சிங்கள இனவாதம் விரும்புகிறது.
இருக்க, தற்போது வடக்குக்கிழக்கிற்கு மறுக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் சிங்களத்தின் 7 மாகாணங்களிற்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா? அதேபோன்று அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவோர் வடக்குக் கிழக்கிலும் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனரா? வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களுக்கு மறைமுகமாக வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுமா? என்பதெல்லாம் வரும் காலம் சொல்லவுள்ள பதில்கள்! நான் சிங்கள மக்களின் சனாதிபதி, அவர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதே எனது தலையாய பணி. அதாவது சிங்கள தேசத்தின் இருப்பும் வலுநிலையுமே என் இலக்கு என்பதை தெளிவாக வெளிப்படுத்துவரும் கோத்தாவின் நிகழ்ச்சிநிரல் கோலாகலமாக விரிவாக்கம் காண்கிறது. கனவு உலகில் வடை சுடும் நம்மவர்கள் தான் எப்போது விழித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது தான் புரியவில்லை?