யாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

113

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இருந்த பொதுக் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக பொதுமகன் ஒருவரால் நெடுந்தீவு பிரதேச சபையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது காணாமல் போன குறித்த கிணறு தனியார் ஒருவரால் அடாத்தாக அபகரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் மக்களின் பாவனைக்கென வெடிச்சான் கேணியுடன் சேர்த்து பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. குறித்த கிணற்றை பிரதேச சபையின் அனுமதியின்றி தனியார் ஒருவர் தனது காணிக்குள் அபகரித்து வேலியமைத்துள்ளார். குறித்த கிணற்றுக்கு குளிக்கச் சென்ற ஒருவர் கிணற்றைக் காணாது குழம்பிய நிலையில் பிரதேச சபையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பின்னர் விழிப்படைந்த பிரதேச சபை பொதுக் கிணற்றினை தனியார் ஒருவர் அடாத்தாக அபகரித்தமையினை கண்டறிந்து ஒருவார காலத்தினுள் கிணற்றை விடுவிக்கவும் குறித்த கிணற்றிலிருந்து நீர்ப்பம்பி மூலம் நீர் எடுப்பதை உடனடியாக நிறுத்தவும்; உத்தரவிட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் நல்லதம்பி சசிகுமார் உறுதியளித்தார்.