இந்தியர்களின் வாழ்வியலில் தோணியிசம் #Dhonism

84

1993-ம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணம் வந்திருந்த நேரம். அந்த அணியில் அலெக் ஸ்டீவர்ட் விக்கெட் கீப்பர். அவர் அந்த அணியில் இருந்த எந்த பேட்ஸ்மெனுக்கும் குறைந்தவர் அல்ல. அப்போது நம்முடைய விக்கெட் கீப்பர் கிரண் மோர். அவரை அந்த மாதிரி சொல்ல முடியாது. கடைசி வரிசை பேட்ஸ்மென்களைப் போலத்தான் அவர் ஆடுவார். அதற்கடுத்து வந்த நயன் மோங்கியா, சபா கரீம் ஆகியோரும் அப்படித்தான்.

அதற்கு முன்னராவது நம்மிடம் பேட்ஸ்மென்களுக்கு நிகராக ஓரளவாவது ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இருந்தார்கள். ஃப்ரூக் எஞ்சினியர் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். தொடக்க ஆட்டக்காரராகவும் இறங்குவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சராசரி 31 வைத்திருந்தார். அவருக்கு அடுத்து வந்த சையது கிர்மானியும் ஓரளவு சமாளிப்பார். அவரும் சில சதங்களும், அரை சதங்களும் எடுத்தவர். கபில்தேவ் 1983 உலககோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்களைக் குவித்தபோது மறுமுனையைக் காத்தவர். இவர்களுக்கு அடுத்து யாரும் சோபிக்கவில்லை. சதானந்த் விஸ்வநாத் என்பவர் அதிரடியாக ஆடக்கூடியவர் என்று இறக்கினார்கள். அவரும் நன்றாக ஆடவில்லை. சந்திரகாந்த் பண்டிட் நல்ல பேட்ஸ்மென். ஆனால், விக்கெட் கீப்பிங் சுமார். தொடர்ச்சியாக நன்கு ஆடமாட்டார்.

1986ல் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் அவரை பேட்ஸ்மெனாகவே எடுத்தார்கள். கிரண் மோர் விக்கெட் கீப்பிங் நன்றாகச் செய்ததால் , பேட்டிங் சுமாராக இருந்தாலும், வேறு வழி இல்லாமல் பல ஆண்டுகளுக்கு அவரை இந்திய அணி வைத்துக் கொண்டது.

இந்த சமயத்தில் எல்லாம் மற்ற அணிகளில் எல்லாம் அணிக்கு சிக்கலான சூழலில் கை கொடுக்கும் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள். மேற்கு இந்திய தீவுகளில் ஜெப்ரி துஜான், நியூசிலாந்துக்கு இயன் ஸ்மித், பாகிஸ்தானில் மோயின் கான், இலங்கையில் பிரண்டன் குருப்பு, இவர் இரட்டை சதமெல்லாம் அடித்தார். அவருக்குப் பின்னர் அதிரடி ஆட்டக்காரர் கலுவிரதனா. ஆஸ்திரேலியாவில் சொல்லவே வேண்டாம். இயன் ஹீலி இருந்தார். அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கும் கடைசி வரிசை ஆட்டக்காரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பார். அதுதவிர பந்து வீச்சாளர்களுக்கும் டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார். வார்னே பந்து வீசும் போது, அருகில் ஸ்லிப்பில் நிற்கும் கேப்டன் டெய்லரிடம் கூட எதுவும் சொல்லாமல், நேராக வார்னேவிடம் சென்று இப்படி போடு என்பார்.

இந்த சமயத்தில் 1996-ல் நடந்த ஒரு டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலிய தேர்வாளர்களைத் திட்டி ஸ்டேடியத்தில் பதாகைகள். காரணம் அடுத்து ஆஸ்திரேலியா போகும் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு புது விக்கெட் கீப்பர் களமிறங்குவார் என்ற செய்தியே. ஹீலிய விடவா ஒரு கீப்பர் என யோசித்தவர்களை வாயடைக்கச் செய்தார் வந்த புது கீப்பர், ஆடம் கில்கிறிஸ்ட். முதல் வரிசை பேட்ஸ்மென்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க் பவுச்சர், இலங்கை அணிக்கு குமார சங்காகரா என புதுப்புது பலம் கூடிக் கொண்டே இருந்தது. நமது நாட்டிலோ அப்படி ஒரு ஆள் கிடைக்காமல், ஒரு நாள் போட்டிகளை சமாளிக்க உலகத் தரமான பேட்ஸ்மென் ஆன ராகுல் டிராவிட்டை கீப்பர் ஆக்கினார்கள். டெஸ்ட் மேட்சுகளுக்கு வழக்கம் போல விஜய் தாகியா, தீப் தாஸ் குப்தா என சுமாரான கீப்பர்கள். இதெல்லாம் போதாது என பால்வாடியில் இருந்து நேரே கிரிக்கெட் கிரவுண்டுக்கு வந்தவரைப் போன்ற தோற்றம் கொண்ட பார்த்தீவ் பட்டேல் வேறு.

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு வீரன் இந்திய அணியின் உள்ளே வந்தான். அட்டகாச உடல்கட்டு. அதற்கு முன்னான இந்திய கீப்பர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகளைப் போலத்தான் இருந்தார்கள். நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி விடுதியில் அந்த வீரன் விளையாடிய ஆரம்ப மேட்சுகளில் ஒன்றைப் பார்க்கும்போது, கூட்டத்தில் ஒருவன் ‘என்னடா இவன் டார்ஜான் படத்தில நடிக்கிறவன் மாதிரி இருக்கான்’ என்றே கமெண்ட் அடித்தான். நீள முடி, இறுகிய முகம், தீர்க்கமான கண்கள். வேறு யார்? மகேந்திர சிங் தோனிதான். முதலில் அவர் ஆடிய சில மேட்சுகளைப் பார்த்தவர்கள் ‘பரவாயில்லைடா, கிர்மானிக்கு அடுத்து ஒரு நல்ல விக்கெட் கீப்பர் நமக்கு கிடைச்சுட்டான்’ என்றே நினைத்தார்கள்.

அடுத்தடுத்த மேட்சுகளில் தோனி காட்டிய விக்கெட் கீப்பிங் திறமை, பவுண்டரிகளை விளாசும் வேகம், விக்கெட்டுகளுக்கு இடையேயான ஓட்ட வேகம் என வெகு சீக்கிரமே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார் மகேந்திர சிங் தோனி (Dhoni). நமது அணியிலும் கில்கிறிஸ்ட், சங்காகரா போன்றோருக்கு இணையான ஒரு வீரன் தோன்றி விட்டான் எனவே அப்போது பலர் நினைத்தார்கள். அப்போது தெரியவில்லை தோனியிடம் அவர்களைத் தாண்டிய பண்புகளும் உண்டு என்றென.

நிறையப் பேரை, 2005-ல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக முதல் விக்கெட் விழுந்ததும் இறங்கி அடித்த 183 ரன்கள்தான் அவரின் பெரிய ரசிகராக மாற்றியிருக்கும். ஆனால், அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சேஸிங்குகளில் அவர் காட்டிய அணுகுமுறைதான் எல்லோரின் மனதிலும் இடம் பெறச் செய்தது எனலாம். அதற்கு முன் இந்திய அனியின் ஒரு நாள் போட்டி சேஸிங்குகளில், ரவி சாஸ்திரி, கபில்தேவ் ஆடிய காலகட்டத்தில், நான்கு விக்கெட் விழுந்த உடன் இவர்கள் வந்து சில பல பவுண்டரிகளை அடிப்பார்கள். இவர்கள் ஆட்டமிழக்காவிட்டால் அணிக்கு வெற்றி. மாறாக ஆட்டமிழந்தால் அவ்வளவுதான்.

இவர்களுக்குப் பின்னால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமானது. நான்கு விக்கெட்டுகள் விழுந்தால்,நடையைக் கட்டு… வேற வேலை பார்க்கலாம் என ரசிகர்கள் கிளம்பி விடுவார்கள். யுவராஜ் சிங் வந்த பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் இவர் அவுட்டாயிட்டா என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் தோனி வந்த பின்னர்தான் இந்திய அணியின் தலைவிதி மாறியது. ஐந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பரவாயில்லை தோனி (Dhoni) பக்குவமாக ஒன்றிரண்டாக எடுத்து அடுத்து விக்கெட் விழாமல் ரன்னைச் சேர்த்து அணியைக் காப்பாற்றி விடுவார் எனப் பார்க்கும் அனைவருக்கும் தோன்றியது. ‘ஆஹா… ஆஸ்திரேலிய மைக்கேல் பெவன் மாதிரி நமக்கும் ஒரு ஃபினிசர் கிடைச்சாச்சு’ என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை தோனியின் பக்குவத்தால் ஏற்பட்டது.

இந்தப் பக்குவம்தான் ஆதி காலத்தில் இருந்தே இந்திய அணியில் இல்லாதது. ஏன் பெரும்பாலான இந்தியர்களுக்கே இல்லாதது. அழுத்தத்தை உணர்ந்தால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறையும். உணர்ச்சி வேகத்தில் தவறிழைப்பார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும், சமாளித்து விடலாம் என்றால், அந்த சமாளிக்கும் நேரம் பெருந் தொலைவாய்த் தோன்றும். எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது? ‘செய் அல்லது செத்து மடி’ என இறங்கி, காட்டு சுத்து சுத்துவார்கள். ஆனால், தோனியிடம் அந்தப் பொறுமையும் பக்குவமும் இருந்தது. அதுதான் 2007-ல் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே அடி வாங்கித் திரும்பிய போது, அடுத்து யார் கேப்டனாக ஆக வேண்டும் என்ற கேள்வி வந்தபோது, கிரிக்கெட் வாரியத்திற்கும், அணியின் மூத்த வீரர்களுக்கும் தோனியின் பெயரை கொண்டு சேர்த்தது.

அதற்குப் பின் நடந்தது வரலாறு. 20-20 உலக கோப்பையில் இந்திய அணியை வெற்றிபெற வைத்த உடன் தோன்றியது, பாகிஸ்தானின் இம்ரான் கானைப் போன்ற ஒரு கேப்டன் நமக்கு கிடைத்து விட்டார் என. 1992 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல இருந்த வழி 90% அடைக்கப்பட்ட நிலையில், போராடி அணியை கோப்பையை வெல்ல வைத்த இம்ரானுக்கு இணையான ஒரு தலைமைப் பண்பு தோனியிடம் தென்பட்டது. எந்த சூழலிலும் அலட்டிக் கொள்ளாமல், அனைவரையும் அரவணைத்து அணியை நடத்திச் செல்லும் பாங்கை தோனியும் தொடர்ந்தார். அடுத்தடுத்த பல வெற்றிகள், ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்டில் முதலிடம் என தோனி (Dhoni) காணாத சிறப்புகள் இல்லை.

இந்திய அனியில் கவாஸ்கர், சச்சின், டிராவிட் என மாபெரும் பேட்ஸ்மென்கள் இருந்திருந்தாலும் இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அல்லது அதற்கு பண்பு/ மதிப்பு கூட்டும் செயலில் ஈடுபட்டவர்கள் என்றால் முதலில் ஞாபகம் வருவது கபில்தேவ். நம்மாலும் போராடி ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர். அடுத்ததாக கங்குலி. நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை அணியினருக்கு ஏற்படுத்தியவர். அடுத்ததாக தோனி. எதுவும் கடந்து போய் விடவில்லை. எல்லாம் இன்னும் நம் கைவசம்தான் இருக்கிறது. நமக்குத் தேவை பொறுமையும், விடாமுயற்சியும், நிதானமும் மட்டுமே என உணர்த்தியவர்.

தோனியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

முதலில் உடல் ஆரோக்கியத்தைப் பேணி வலுவாக இருத்தல். வலுவாக இருக்கும் போதுதான் நம்மால் எதுவும் முடியும் என்ற எண்ணம் தோன்றும். வலு குறைய குறைய அந்த எண்ணமும் குறையும்.இரண்டாவது எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் இருத்தல். உணர்ச்சி வசப்பட்டால் எதையும் சரியாக யோசித்து செயலாற்ற முடியாது. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகளின் வெற்றி நிகழ்தகவு 50-50 தான்.மூன்றாவது தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது, கீழே உள்ளவர்கள் தவறு செய்தாலும், அவர்களை சுடுசொற்களாலோ, உடல் மொழியாலோ காயப்படுத்தாமல் அதைச் சரிப்படுத்த முயல்வது, தொடர்ந்து ஊக்கப்படுத்துவது.நான்காவது, எல்லாத் திறமையும் நம்மிடம் இருக்காது. இல்லாத திறமைக்கு ஏங்கி நேரத்தை வீணடிப்பதை விட, நம்மிடம் இருக்கும் திறமையால் நமது குறிக்கோளை அடைவது எப்படி என சிந்தித்து செயல்படுவது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், இந்திய அணியின் தூணாக இருந்து, இந்தியர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக் கொண்டவர். எங்கிருந்து வந்தாலும் திறமையும், விடா முயற்சியும், பக்குவமும் இருந்தால் சாதித்து விடலாம் என ஏராளமானோருக்கு நம்பிக்கை ஊட்டியவர். இந்த சிச்சுவேசன்ல ‘தோனி இருந்தா என்ன செஞ்சிருப்பார்னு யோசித்தாலே போதும் தப்பிச்சிடலாம்’ என்று யோசிக்கும் முறையை வழங்கியவர்.

மனித குலம், அவ்வப்போது தோன்றும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் மூலம் உள் வாங்கும் கருத்துருக்களைக் கொண்டே தன் வாழ்வியலை மெருகேற்றிக் கொள்கிறது. அது போல இந்தியர்களின் வாழ்வியலுக்கு சில முக்கிய கருத்துருக்களை வழங்கிச் சிறப்பித்தவராக தோனி என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார்!

Thanujan