ஈழ இனப்படுகொலை போர்குற்றத்தில் திமுவின் பங்கு

ஈழ இனப்படுகொலை என்பது சர்வதேச வலைப்பின்னலை பின்னணியாகக் கொண்டது. அந்த திட்டதின் ஒரு பகுதிதான் ஈழப் போராட்டத்தை, அதற்கு உதிரம் சிந்தியவர்களை பெறுமதியற்றவர்களாக சித்தரிப்பதும், புதிய தலைமுறை தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதுமாகும்.
2009ல் ஈழ இனப்படுகொலைகள் நடந்து முடிந்த போது திமுகவும் அந்த வலைப்பின்னலில் ஒரு பாகமாக இருந்திருக்கலாம் என்ற ஐயம் உலகம் தழுவிய தமிழர்கள் மத்தியில் எழுந்தது என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. சமகாலத்தில் அதை உறுதிப்படுத்தும் விதமான நகர்வுகளைத்தான் திமுக தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழகத்தின் பெரும்பான்மை நாடாளுமன்றம் உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியின் ஒரு நாடாளமன்ற உறுப்பினர் கூறும் கருத்துக்களையெல்லாம், யாரோ ஒரு அப்பாவி தொண்டனின் அறியாமையில் உதித்த கருத்து என்று நாம் கடந்து போய்விட முடியாது. ஒருவேளை இந்த விடயத்தில் ஏதேனும் தவறு நடந்திருப்பதாக கருதினால், திமுகவோ அல்லது அந்த கட்சியின் பொறுப்பில் இருக்கும் முக்கியமான ஒருவரோ ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். யாரோ ஒரு தொண்டன் பிரியாணி கடையில் ரவுடித்தனம் செய்ததற்கு நேரில் சென்று வருத்தம் தெரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவ்வளவு மோசமாக, இழிவாக ஈழ விடுதலைப்போராட்டத்தை, ஒரு மாபெரும் இனப்படுகொலை பொறுப்பின்றி விமர்சிக்கும் ஒரு திமுக நாடாளு மன்ற உறுப்பினரை கண்டும் காணாமல் இருப்பதை எப்படி விளங்கி கொள்வது என்றே தெரியவில்லை. அவர்கள் எப்படியோ கட்சி அரசியல் செய்யட்டும். ஆனால், நாம் அப்படி கடந்து போவாமாக இருந்தால்… உலகில் நடக்கும் அநீதிகளை தட்டிகேட்டும் தகமையை இழந்து விடுவோம். மனிதநேயத்தை பாதுகாக்கும் பண்பில் இருந்து முற்றிலும் விலகி விடுவோம்.