மனித கறியும் ஆமை கறியும்

86

எல்லாமும் 380 கோடி PK திட்டப்படியே
நடந்துகொண்டிருக்கின்றது.

தலைவர் பிரபாகரனை தாழ்த்தி பேசியதும் அவர்கள்தான். புலிகளை விமர்சித்ததும் அவர்கள்தான்.

அதற்கு எதிர்வினையாற்றியவுடன்…

குரோனா வந்திருக்கு, மருத்துவமனைகள் நிறைந்திருக்கு, பட்டினி கிடக்கிறார்கள், இப்போது பிரபாகரன் பேச்சா முக்கியம் என்று மீண்டும் எழுதிக்கொள்வதும் அவர்களே.

திமுக-வின் பின்னணியில் உள்ள சில இஸ்லாமிய முகவரியில் உள்ள உபிக்கள் வேறு குறுக்கால் வந்து…

மலையக தமிழர்களின் ஓட்டு உரிமையை யாழ்ப்பாணம் தமிழர்கள்தானே தடுத்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக புது பிரச்சனை இழுக்கிறார்கள். இஸ்லாமிய-தமிழர் விரோத பதிவை வைக்கிறார்கள். தொடக்கத்தில் இது மலையாள திரைப்படம் Vs தமிழர்கள் என்றுதான் போனது. உடன் பிறப்புகள்தான் வலிய வந்து வண்டியில் ஏறி திசை மாற்றிக்கொண்டார்கள்.

இப்படி எல்லாமும் அவர்களாகவே கிளப்பி- இப்போது, ‘அதுவா முக்கியம்’. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறதே என்கிறார்கள். இது ஒரு நுணுக்க அரசியல்.

அலுங்காமல் குலுங்காமல் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை மறைந்தது, திமுக-வை, தாங்கிப்பிடிக்கும் ‘ஒரு கட்டமைப்பு’ வேலை இது. இனத்துரோகம் செய்த கட்சிகளுக்கு பின்னால் செல்வது என முடிவெடுத்துவிட்டால் தாராளமாக போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. இப்படியெல்லாம் கட்டமைத்துவிட்டுதான் போகவேண்டுமா என்ன?

மதிப்பிற்குரிய தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கையையும் அப்படித்தான் பார்க்கவேண்டி உள்ளது.

அவர்தான் ‘திமுக இனத்துரோகம் செய்த கட்சி’ என்றார் (விரிவாக வேண்டாம்). இப்போதும் அவர்தான், ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்கிறார். திரும்ப திரும்ப நமக்குள்ளாகவே முரண்பட்டு நிற்கவேண்டியுள்ளது.

1936- பெரியாரோடு தோழர் ஜீவா எங்கே ஒன்றாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்துதானே அவர் வெளியேறி வந்தார், பெரியாரோடு மேடைகளில் இருந்திருக்கலாம், ஆனால் பெரியார் கட்சியில் இருந்தாரா என்ற குழப்பம். பிரச்சனை அதுவல்ல.

விரோதித்து-விமர்சித்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் இல்லை என்கிறார் தோழர். பொது எதிரிக்காக வேண்டி…

இதே காரணத்தை நாளை, ‘ திமுக-பாஜகவோடும் கைகோர்த்துக் கொண்டால் சொல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம். முன்பு அப்படித்தானே காங்கிரஸ் கட்சியோடு இருந்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்டக்கடைசியாக போய் பாஜகவோடு இணைந்து பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மந்திரி பதவியையும் பெற்று அனுபவித்தார்களே, அப்படி திரும்பவும் போய் நிற்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சரி, வெற்றிக்குப் பிறகு திமுக, பாஜக-வோடு சமரசமாகாமல் எதிர்க்கும் என்பதை எதைவைத்து உறுதி படுத்துகிறீர்கள். இதற்கு முன் எதையெல்லாம் எதிர்த்து முடக்கினார்கள்? இனப்படுகொலை நடந்த 2009 காலத்திலேயே ‘மத்திய அரசின் அதிகாரத்தில் பங்கு வகித்த போதே’ எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல், இன அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தானே இவர்கள்.

எதுவும் வேண்டாம், இதற்கு முன் மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்தபோது பறிக்கப்பட்ட மாநில உரிமைகளில் எதையெதை எதிர்த்து போராடி மீட்டு வந்தார்கள்? சரி, தாங்கள் பாஜக- இந்துத்துவா பாசிசம் என்கிறீர்கள். தலைவர் ஸ்டாலினோ நாங்களும் இந்துக்கள்தான், கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள்தான் என்கிறார். இரண்டு இந்துக்களும் வேறு வேறா?

யார் தடுத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது. இது சர்வதேச சதி என்று இப்போது கூறும் தாங்கள், 2008-2009-ல் ‘போர் நிறுத்தம்’ என போராட்டம் நடத்தியது எதற்காக? இந்தியாவுக்கான போரைதான் நாங்கள் நடத்தினோம் என்றார் மகிந்த ராஜபக்சே. நடப்பதை எல்லாம் தினந்தோறும் இந்தியாவிடம் ஆலோசித்துவிட்டுதான் போரை நகர்த்தினோம் என்றார் கோத்தபாய ராஜபக்சே. இந்தியாவின் ஆயுத- ஆலோசனை உதவிகள் இல்லாமல் நாங்கள் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என்றார் தளபதி சரத்பொன்சேகா.

தமிழகம் கொந்தளித்து வீதிக்கு வந்திருந்தால் இந்தியா பணிந்திருக்கும். இலங்கை போர் நின்றிருக்கும் எங்களுக்கு இருந்தது. என்றார் கோத்தபயா ராஜபக்சே. இதுவெல்லாம் பலராலும் பேசப்பட்டுவிட்டது. சர்வதேச சதி என்றாலும் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைக் கேட்காமல்- அனுசரணை இல்லாமல் எந்த சதியும் வெல்லாது என்பது கருஞ்சட்டைகள் முதல் பலராலும் பேசப்பட்டுவிட்டது. ஆனாலும் சாதிக்கின்றார் மணி தோழர்.

அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜி, இலங்கைக்கு பயணமான போதெல்லாம் கோபாலபுரம் வந்து கலைஞரை சந்தித்து பேசிச் சென்றது எல்லாம் சர்வதேச சதியின் ‘கிளை ஆலோசனையா’? அதைப் பற்றி எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

அடுத்து “ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல்”’ இன்று பாஜக-வை தீவிரமாக! எதிர்க்கும் திமுக-வை விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது. அது எதிரிகளுக்கு ஆதரவு ஆகும் என்கிறீர்கள். நியாயம்தான்.

இதே திமுக-வின் முதுகெலும்பான திரு. முரசொலி மாறன் அவர்கள் டெல்லி மாநிலங்களவையிலேயே, “ராஜீவ் கொலைக்கு பிரபாகரன்தான் காரணம் என்றால் ராணுவத்தை அனுப்பி கைது செய்து அவரை தூக்கில் போடுங்கள்” என்று சொன்னாரே, அதுவும் நியாயம்தானே? இருவரின் கருத்தும் வேறு வேறா? ஒன்றா? அதை என்னவாக எடுத்துக் கொள்கிறீர்கள்?

சட்டமன்றதில் “பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு, ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை அளித்தாரே, ஐயா, ஆசிரியர் கி. வீரமணி! அந்த ‘பெருமையை’ என்னவாக பார்க்கின்றீர்கள்?

சரி, முன்பு அப்படி தீர்மானம் நிறைவேற்றிய அதே ஜெயலலிதாதான் பின்னாளில், அதே சட்டமன்றத்தில் ராஜிவ் கொலையாளிகள் ஏழுபேரையும், “திருவாளர்கள்’ என பெயரிட்டு அழைத்து விடுதலை செய்வதாக தீர்மானம் போட்டார். அந்த துணிச்சலை என்னவாக பார்க்கிறீர்கள்?

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுவித்து ‘வரலாற்றில் நீங்க இடம் பிடித்த தமிழக முதல்வருக்கு நன்றி’ என தங்கள் சார்பாக போஸ்ட்டர் போட்டீர்களே அப்போது, ‘பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்” என பேசிய ஜெயலலிதா நினைவுக்கு வந்தாரா? இல்லையா? அதை எப்படி எடுத்துக்கொள்வது?

அடுத்து, ஈழத் தமிழர் விடுதலைக்காக போராடும் பிரட்டிஷ் தமிழ் போரமே (BTF) லண்டனில் நடத்திய மாநாட்டிற்கு தலைவர் ஸ்டாலினை அழைத்திருந்தார்களே என்கிறீர்கள்.

உண்மையில் அவர்கள் அழைக்கவில்லை. திமுக.வில் இருக்கும் திரு கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் அன்று கலைஞர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க-அந்த முயற்சிகளை மேற்கொண்டு, லண்டன் BTF -வோடு பேசி அழுத்தம் கொடுத்து அதன் பேரில் அவர்கள் ஸ்டாலினை அழைத்தார்கள். உண்மை அதுதான்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று மறுத்து பேசினாலும் பேசலாம். உண்மை அதுவே. அந்த மாநாட்டில்கூட BBC ஆனந்தி அவர்கள், ‘எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டீர்களே’ என விமர்சிக்க, அது காரம்சாரமாக மாற, பிறகு கேஎஸ்ஆர் சமாதானம் செய்து பிரச்சனை சுமூக்கமாக்கினதும் நடந்தது. ஆக அங்கும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை.

இங்கே சிலருக்கு
இனப்படுகொலையில் மனிதக்கறி தின்ற திமுக-காங்கிரஸ் கட்சியின் உறவு பிடிக்கின்றது.
ஆமைக்கறி சாப்பிட்ட சீமானையும்-நாம் தமிழர் கட்சியையும் பிடிக்க மாட்டேங்கிறது.
எப்படிப்பட்டவர்களோடும் கசப்பை மறந்து நட்பை பாராட்ட தெரிகிறது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்தேசியர்களை பிடிக்கமாட்டேங்கிறது.

வேண்டும் எனும்போது ஒரு விளக்கம்! வேண்டாம் எனும்போது ஒரு விளக்கம்!!

கலைஞர்தான் பாஜக-இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தார் என்றீர்கள். அவருக்குப் பிறகு ஸ்டாலின் அவர்கள்தான் பாஜக-வை தீவிரமாக எதிர்க்கிறார் என்கிறீர்கள். அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின்தான் இந்துத்துவ பாஜக-வை எதிர்ப்பார், அவருக்கும் பிறகு இன்பநிதி உதயநிதிதான் பாஜக-வை எதிர்ப்பார் என்று போய்க்கொண்டிருந்தால் எப்படி? உண்மையிலேயே இவர்கள் பாஜக-வை எதிர்க்ககூடியவர்களா? அப்படிப்பட்டவர்களா ? மடி நிறைய கணமும்- பணமும் இருப்பவர்கள் எப்படி போராட முடியும்?

ஏன், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி,வி தினகரனின் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து புதிய தலைமையை உருவாக்கினால், அது பாஜக-வை எதிர்க்காதா? திமுக மட்டுமேதான் எதிர்க்கும் என்றால் எப்படி? இன்று அதிகமு எப்படி இருக்கின்றது என நீங்கள் சொல்கிறீர்களோ, அதே இடத்தில் நாளை திமுக இருக்கப்போகிறது. வேறு என்ன மாற்றம் வந்துவிட முடியும்?

ஒவ்வொரு முறையும் கேழ்வரகில் எண்ணெய் வடியும்ங்கிற கதையையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்…அலுத்துப்போய்விட்டது.

பா. ஏகலைவன்