டொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு

173

அவர் குறித்து ஒரு விரிவான பதிவு ஆவணமாக்கப்படவேண்டும் என்பது பலரைப்போலவே என்னுடைய பேரவாவுமாகும்.
அந்த முயற்சியை செய்யக்கூடியோர் பேறுபற்றோர்.

தனித்திருக்கும்,
80 வயதுகளை அடைந்துவிட்ட அன்ரியின் அம்மாவின் காலத்துக்குள் அவ் ஆவணப்படுத்தலை செய்தால்தான் அது முழுமையுடையதாக இருக்கும்.

உங்கள் சிறிய பதிவிலே நீங்கள் குறிப்பிட்ட “சாந்தி” என்ற அவரது இயக்க பெயர் பலர் அறியாததாகும்.

அதனை நினைவூட்டி, பலர் அறியச் செய்துள்ளீர்கள், நன்றிகள்.

இந்தியப்படையினரின் கொலை முயற்சியில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ நேர்ந்தபோது “சாந்தி” என்ற பெயர் அன்ரியின் பின்னால் ஒட்டிக்கொண்டது.

ஒரு அரசவைத்தியராக,
அரச சேவையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரை,
அவர் கடமையாற்றிய வைத்தியசாலையில் வைத்தே உடல், உள ரீதியாக துன்புறுத்தியதுடன் அவரை கொலை செய்யவும் முயன்றது இந்தியப்படை.

அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப்படைகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பிய அன்ரி,
தான் கடமையாற்றிய வைத்தியசாலை மற்றும் தனது வீட்டிலிருந்தும் தலைமறைவானார்.

ஒரு வைத்தியராக மக்களுக்கு சேவையாற்றிவந்த அவரை இந்தியப்படைகள் கொலை செய்ய முயற்சிப்பதான தகவலை அறிந்த இயக்கம், அன்ரியை பாதுகாக்க முடிவு செய்து, அவரையும் அவரது அன்னையையும் படகேற்றி தமிழகத்துக்கு அழைத்துச்சென்றது.

தமிழகம் அழைத்துச் செல்லப்பட்ட அன்ரியும், அவரது அன்னையும் முதலில் மதுரை மாவட்டத்திலும், பின்னர் சேலம் மாவட்டத்திலும் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தியப்படையினர் 1990 பங்குனி 24 ம் திகதியுடன் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேறும்வரை அன்ரி தன் அன்னையுடன் தமிழகத்திலேயே தங்கியிருந்தார்.

இக்காலத்திலேயே அவர் “சாந்தி” என அழைக்கப்பட தொடங்கினார்.
இந்திய உளவுப்பிரிவினர், அவரை மோப்பம் பிடிக்காதிருக்க, அன்ரியின் பாதுகாப்பின் பொருட்டு “சாந்தி” என்ற பெயரில் அவர் அழைக்கப்படலானார்.

1990 ஏப்ரல் முதல் வாரத்தில் தேசியத்தலைவரின் அழைப்பின்பேரில் படகுமூலம் தாயகம் திரும்பிய அவரையும் அவரது அன்னையையும் யாழ்ப்பாணத்தில் வைத்து தேசியத்தலைவர் நேரில் சந்தித்தார்.

இக்கட்டான காலப்பகுதியில்,
உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்,
இந்தியப்படையினரின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய மருத்துவ சேவைகளுக்காகவும்,
தாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதிக்காகவும் அன்ரியையும் அவரது அன்னையையும் நேரில் அழத்து நன்றி கூறிய தேசியத்தலைவர்,
தாயகம் இப்போது புலிகளின் ஆழுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,
அன்ரி தான் முன்னர் கடமையாற்றிய வைத்தியசாலையில் மீளவும் அவரது அரச வைத்திய சேவையை தொடருமாறு கூறினார்.

ஆனால் அன்ரியோ தன் மனதில் வேறு உறுதியான முடிவுடனேயே தலைவருடனான அச்சந்திப்புக்கு சென்றிருந்தார்.

ஏனெனில்,
இந்தியப்படைகளின் கொலைமுயற்சியில் இருந்து தன்னைப்பாதுகாக்க,
இயக்கம் எடுத்த பெரும் முயற்சிகள் அவர் தனக்கான மறுபிறப்பாகவே எண்ணியிருக்க கூடும்?

அதனால்,
தாயகத்தை விட்டு தப்பிச்செல்ல அவர் போராளிகளின் படகேறியபோதே, தன்னையும் ஒரு போராளியாக உணரத்தொடங்கினார்,
போராளியாகவே வாழத்தொடங்கினார்.

தமிழகத்தில் தங்கிநின்ற காலத்தில், தாயகத்தில் போரில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் போராளிகள்
சிகிச்சைபெறும் வைத்தியசாலைகளுக்கு சென்று
போராளிகளின் நலன்களை கவனிக்கத் தொடங்கியதுடன்,
சத்திரசிகிச்சைகள் தொடர்பான தன் ஆற்றலை மேம்படுத்துவதற்காக, மேலதிக மருத்துவ கற்கைநெறிகளையும் பயின்றார்.

தேசியத்தலைவரின் பெயரின் ஒரு பாதியை தன் பெயராகக்கொண்ட வைத்தியரிடம் மதுரையிலும்,

இராமாயணத்தின் பிரதான கதாபாத்திரமொன்றின் பெயரை தன் பெயராகக்கொண்ட பிறிதொரு வைத்தியரிடம் சேலம் மாவட்டத்திலுமாக சத்திரசிகிச்சைகள் தொடர்பாக அவர் பயின்றது எதிர்காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் வினைத்திறன்மிக்க வகையில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்ற முடிவை முன்னரே அவர் எடுத்திருந்ததனாலேயாகும்.

இவ்வாறு, தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் போராட்ட மருத்துவப்பணிக்கேற்ற வகையில்
தன் மருத்துவ/சத்திரசிகிச்சை ஆற்றலை மேம்படுத்தியதுடன்,
போராளிகளை, தேசியத்தலைவரை ஆழமாக நேசித்து, போராட்டத்தின் நியாயப்பாடுகள்/தேவைகள்/ நேர்மைத்தன்மைகளை ஆழமாக உள்வாங்கி, தன்னை மனதளவில் ஒரு போராளியாக உணர்ந்து வாழத்தொடங்கிய அன்ரி,
தாயகம் திரும்பி தேசியத்தலைவரை முதன்முதலில் சந்தித்தபோது, அரச மருத்துவ சேவையை தொடருமாறு அண்ணை கூறியதை நிராகரித்து, தேசியத்தலைவரின் தலைமையின் கீழ், விடுதலைப்போரில் தானும் இணைந்து செயல்படும் தன் பெரு விருப்பத்தை அவரிடம் தெரிவித்து போராளியானார்.

அன்றிலிருந்து “சாந்தி” என்பது அவரது இயக்கப்பெயராகியது.

ஆக்கிரமிப்பாளர்களினது /
ஆட்சியாளர்களினது,
கொடுஞ்செயல்களும், ஒடுக்குமுறைகளுமே
சாதாரண ஒரு மனிதனை,
புரட்சியாளனாக / விடுதலைப்போராளியாக மாற்றுகின்றது என்ற இயற்கை நியதியே அன்ரியின் வாழ்க்கையிலும் நிரூபணமானது.

தான் நேசித்த மக்களுக்கு, போராளிகளுக்கு மட்டுமன்றி
இந்திய, சிங்கள படை வீரர்களுக்கும் மருத்துவ சிகிச்சையளித்து எண்ணிக்கையற்றோரின் உயிர்காத்த அந்த
“தெய்வ அன்னை” போரின் இறுதி நாளில் சிங்களப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளை வந்தடைந்த பின்னர்
காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை கொடூரமானது.

தள்ளாத வயதிலும் அன்ரியின் அன்னை தன் மகளிற்கு நீதிகேட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தபோதிலும், வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்படாமலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

1988,89 ம் ஆண்டுகளில் இந்தியப்படைகள் செய்யவிரும்பியதை இருபது வருடங்களின் பின்னர் 2009 ல் சிங்களப்படைகள் நிறைவுசெய்தன.

ஆக்கிரமிப்பாளர்களின் / ஒடுக்குமுறையாளர்களின் மொழியோ, நிறமோ, இன்னபிறவோ வேறுபடலாம்.
ஆனால்
கொள்கைகளும், செயல்களும் மாறுபடுவதில்லை என்பதை தான் அன்ரி மீதான இந்தியப்படைகளின் கொலைமுயற்சியும், சிங்களப் படைகளால் அவர் காணாமல் ஆக்கப்பட்டமையும் நினைவூட்டுகின்றன.

அவரது சேவைகளை, வரலாற்றை ஆவணப்படுத்தும் பணியையும்,
ஒரு வைத்தியராக உயிர்காக்கும் பணியை மட்டுமே தன் சேவையாக கொண்டிருந்த அவர் சிங்களப்படைகளால் காணாமல் ஆக்கப்பட்டமையும் பல்வேறு மொழிகளில் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பது அவசியமானது.

நன்றி தணிகை/தர்சன்.