இப்படியும் ஓர் இனமா? என எண்ணி வியக்கத்தக்க வாழ்ந்த இனக்குழு பற்றிய பதிவு இது!
1898 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அகதிகளாக நாட்டைவிட்டு விரட்டப்பட்டு கனடாவில் குடியேறிய பாவப்பட்ட மகத்தான இனக்கூட்டத்தின் கதை!
டுகோபார்ஸ் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். தங்களது சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோட்பாடு, அதற்காக விவசாயம். ஆடு மாடுகளின் பண்ணை. வீட்டுஉபயோகப் பொருட்கள் தயாரித்தல். காய்கறிகள். பழங்கள். உற்பத்தி செய்வது. உடைகளை தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் மரசாமான்களை தாங்களே செய்து கொள்வது. மண்ணால் வீடுகட்டுதல். பொது சமுதாயக்கூடம் அமைப்பது என்று அவர்களின் உலகம் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காதது!
அது போலவே இறைவழிபாட்டிலும் அவர்களுக்கான வழிபாட்டுமுறைகள். பாடல்கள். விழாக்களை அவர்களே உருவாக்கிக் கொண்டனர். பைபிள் வாசிப்பது கூட அவர்களிடம் கிடையாது!
அவர்கள் முழுமையாக சைவஉணவு பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். முட்டை சாப்பிடுவது கூட பாவம் என்று விலக்கப்பட்டிருந்தது. அது போலவே பாலை அருந்தவும் அவர்கள் மறுத்தார்கள், அது முழுமையாக கன்றுகளுக்கு மட்டுமே உரியது என்று பாலை ஒதுக்கினார்கள், திருமணத்திலும் கூட பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது,
தங்களை எவராது தாக்க வந்தால் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக அந்த அடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நடைமுறை, எவ்வளவு வன்முறை பிரயோகப்படுத்தபட்டாலும் டுகோபார்ஸ் திரும்பி அடிக்க மாட்டார்கள், அடியை தங்களது ஆத்மாவின் பலத்தை சோதிப்பதற்கான பரிட்சையாக நினைத்தார்கள்
புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அவர்களிடம் கிடையாது, அது போலவே தங்களைத் தேடிவரும் விருந்தாளிகளுக்கு உணவு உறைவிடம் தருவதற்கு அவர்கள் ஒரு போதும் பணம் வாங்குவதில்லை, ரொட்டியை விலைக்கு விற்பது மிகக் கொடிய பாவம் என்பது அவர்களின் எண்ணம்
கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில் தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக் கொள்ளக் கூடாது, பணத்தை ஒரு போதும் பெரிதாக நினைக்க்கூடாது, விலங்குகள் மற்றும் விவசாய உடைமைகள் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கட்டாயம் தங்களால் ஆன வேலையை செய்தே ஆக வேண்டும். வயதாகியவர்களை ஊரே பராமரிக்கும், ஊரின் நிர்வாகத்தை கவனிக்க அவர்களே குழு அமைத்து கொள்வார்கள், ஆகவே அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லாமல் அவர்களே தங்களுக்கான சாலைகள் அடிப்படை வசதிகளை அமைத்து கொண்டார்கள், குளியலுக்காக பொதுகுளியல் கூடம் அவர்களிடம் இருந்தது,
திருமணம் செய்து கொள்வது கடவுளின் விருப்பம் என்பதால் அதை அரசாங்கத்தில் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.
தொலைபேசி அறிமுகமான உடன் தங்களது கிராமங்களுக்குள் தொலைபேசி வசதியை தாங்களாகவே உருவாக்கி கொண்டது அவர்களின் முன்னோடி சாதனை, இது போலவே ஜாம் செய்வதிலும் தானியங்களைப் பாதுகாப்பதிலும்,மாவு அரைப்பதிலும் அவர்கள் தனித்திறன் கொண்டிருந்தார்கள். இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கையால் வேலை செய்வதே அவர்களின் பாணி, எங்கே செல்லும் போது நடந்து போவதையே அவர்கள் விரும்பினார்கள்
இவை யாவையும் விட அவர்கள் ராணுவசேவையை வெறுத்தனர், ஒரு ஆண் கூட ராணுவத்தில் போய் பணியாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர், ராணுவம் என்பது ஒரு ஆயுதங்களால் மனிதனை அச்சுறுத்தி அடக்கக்கூடியது, ஆகவே ராணுவசேவை எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது என்று தாங்கள் எதிர்ப்பைக் காட்ட தங்களது அத்தனை ஆயுதங்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள் டுகோபார்ஸ் மக்கள்!
இன்னொரு பக்கம் தங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் அவர் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தாங்கள் ஒரு தனிராஜ்ஜியம் போலவே அமைதியாக வாழ்ந்தார்கள்.
ஆனால் அரசு மக்கள் நிம்மதியாக ஒதுங்கி வாழ ஒரு போதும் அனுமதிக்காது தானே, ஆகவே கசாக்கியப்படையை அனுப்பி அவர்களை ராணுவத்தில் சேர்க்க முயன்றது, மறுத்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள், டுகோபார்ஸின் ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து அவர்களை அடிபணியும் படியாக அடித்தார்கள், அடியை தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டபோதும் ஒருவரும் அடிபணியவேயில்லை, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, கைகால்கள் ஒடிக்கப்பட்டு சைபீரிய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள், பல ஊர்கள் தீக்கிரையாகின, வீடுகள் நொறுக்கப்பட்டன, ஆனால் அவர்களின் ஆத்மபலம் குறையவேயில்லை,
ஒரு நாள் முழுவதும் முந்நூறு கசை அடிவாங்கிய ஒரு மனிதன் மறுநாள் தன்னை அடிக்கின்ற கசாக்கிய வீரனிட்ம் உனக்கு சரியான ஓய்வு இல்லை, தேவையான உணவும். பழங்களும் என் சேமிப்பில் இருக்கின்றன, அதை சாப்பிட்டு வந்து என்னை அடிக்கலாமே என்று சொல்லியிருக்கிறான்,. அது தான் டுகோபார்ஸின் இயல்பு
பெண்களும் குழந்தைகளும் கூட இந்த வெறியாட்டத்தில் இருந்து தப்பவில்லை. இந்த நிலையில் ரஷ்ய அரசாங்கம் நாற்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட டுகோபார்ஸ் பிரிவினர் மொத்தமாக நாட்டை விட்டு வெளியேறிப் போவது என்றால் ஒத்துக் கொள்வதாகச் சொன்னது, அப்போது கூட அவர்கள் இனி ஒரு போதும் ரஷ்யாவிற்குத் திரும்பி வரக்கூடாது, தங்களது பயண செலவை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். சைபீரிய சிறையில் உள்ள கைதிகள் தண்டனைகாலம் முடிந்த பிறகே நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பார்கள் என்ற நிபந்தனைகளை விதித்தது.
அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், அதன் முதற்கட்டமாக 7500 பேர் ரஷ்யாவை விட்டு கனடா புறப்பட முடிவு செய்தனர், கனடா அரசு அவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது, ஆனால் 6000 மைல் பயணம் செய்ய வேண்டும், அது பெரிய சவால்.
இந்த நேரத்தில் தான் லியோ டால்ஸ்டாய் என்னும் மகத்தான மனிதன் தன்னுடைய மூன்றாவது நாவலை அம்மக்களின் பயணச்செலவுக்காக எழுதுகிறான். உலகம் முழுக்க அந்த Resurrection என்ற நாவல் வாசிக்கப்பட்டு பணம் குவிகிறது. வந்த பணத்தையெல்லாம் டுகோபார்ஸ் மக்களின் பயணத்திற்கு தந்துதவியதோடு தன் மகனையும் அந்தக் கப்பலில் துணைக்கு அனுப்பி வைக்கிறார்.
அகதிகளை ஏற்றிக் கொண்டு முதற்கப்பல் 1899 ஜனவரி 4ம் தேதி புறப்படுவதாக இருந்த்து, தனது மகன் செர்ஜியையும் அவனது நண்பர்களையும் டுகோபார்ஸ் மக்களுக்குத் துணையாக கனடா அனுப்பிவைத்தார் டால்ஸ்டாய், செர்ஜிக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் தெரியும், பல்கலைகழகத்தில் படித்தவர்.ஆகவே கனேடிய அரசுடன் பேசி மக்களை அங்கே தங்க வைக்க அவர் உதவி செய்வார் என டால்ஸ்டாய் நினைத்தார்.
2300 டுகோபார்களை ஏற்றிக் கொண்டு முதல்கப்பல் புறப்பட்டது, கடலில் பயணமான சில நாட்களிலே ஒரு குழந்தைக்கு அம்மை வந்து கப்பல் முழுவதும் தொற்றுநோய் பரவியது, ஆகவே எந்த துறைமுகத்திலும் கப்பல் நிற்க அனுமதி கிடைக்கவில்லை, 27 நாட்கள் கடலில் நின்றது அந்த கப்பல், பசி. நோய்மை என அவர்கள் கப்பலில் முடங்கி கிடந்தனர்.
ஆறுமாத காலம் கடுமையான கஷ்டங்களை தாங்கி கொண்டு டுகோபார்ஸ் மக்களை ஏற்றிக் கொண்ட கப்பல் கனடா போய் சேர்ந்தது, பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் அவர்கள் தங்க வைக்கபட்டார்கள், புதிய நிலம். புதிய சூழல் ஆனாலும் கடுமையாக உழைத்து தங்களது வசிப்பிடங்களை அவர்கள் சிறப்பாக உருவாக்கி கொண்டார்கள், ஆறுமாதகாலத்தின் பின்பு செர்ஜீ நாடு திரும்பினார்.
அப்படிப் பயணம் போன டால்ஸ்டாயின் மகன் செர்ஜி டால்ஸ்டாய் தன்னுடைய கனடா பயணத்தை “Sergei Tolstoy and the Doukhobors: A journey to Canada” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.
தான் நேசித்த மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு எழுத்தாளன் எழுதிய ஒரே நாவல் இதுவே, இது போல உலகில் வேறு எங்கும் நடைபெறவேயில்லை, எழுத்தாளனாக தான் எதை அறமாக கொண்டிருந்தாரோ அதை நடைமுறை வாழ்வில் டால்ஸ்டாய் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
நன்றி – வள்ளுவகுமரன் உதய்